எதையெல்லாம் நீதிமன்றம் செய்யக்கூடாது என்று சொல்லுமோ அதையெல்லாம் கர்நாடகா ஆளுனர் செய்கிறார். அதன்மூலமாக சில நாட்கள் அவகாசம் பெறுகிறார். அந்த அவகாசத்தை பயன்படுத்தி எம்எல்ஏக்களிடம் பேரம் பேசுகிறார்கள்.
காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. எம்எல்ஏக்களை அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள், வழக்குகள், ஐ.டி.ரெய்டுகள் என்று பல வகைகளில் மிரட்டுகிறார்கள். பண ஆசை காட்டுகிறார்கள். குடும்பத்தாரை சந்தித்து உயிர்பயம் காட்டுகிறார்கள் என்றெல்லாம் பல வகையான தகவல்கள் கிடைக்கின்றன.
பாஜகவினர் அடிக்கடி பேசும் நேர்மை, ஒழுக்கம், ஊழல் ஒழிப்பு அவ்வளவும் வெறும் பேச்சு என்பதை கடந்த நான்கு ஆண்டுகளாக மக்களுக்கு புரிய வைத்திருக்கிறார்கள்.
இப்போது, கர்நாடகா பேரவைத் தேர்தல் மற்றும் அதற்கு பிந்தைய நடவடிக்கைகள் பாஜகவின் தில்லாலங்கடி வேலைகளை இந்திய மக்களுக்கு பளிச்சென்று எடுத்துக்காட்ட உதவியிருக்கிறது.
இந்நிலையில்தான் இன்று மாலை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு பாஜக தள்ளப்பட்டிருக்கிறது. இந்த வாக்கெடுப்பை நடத்துவதற்காக நன்கு அனுபவப்பட்ட ஆளை எடியூரப்பா சிபாரிசில் ஆளுனர் நியமித்திருக்கிறார்.
அவரே ஏற்கெனவே 5 முறை நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்த ஆள்தான். 2010 ஆம் ஆண்டு, எடியூரப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கும் 16 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்து அவரைக் காப்பாற்றியவர் சபாநாயகர் போபையா. அவரைத்தான் இப்போது தற்காலிக சபாநாயகராக்கி இருக்கிறார்கள்.
அதிலிருந்தே பாஜகவின் திட்டத்தை புரிந்துகொள்ளலாம். இன்று என்னவெல்லாம் நடக்கலாம்? காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதள உறுப்பினர்களில் சிலர் சட்டசபைக்கே வராமல் இருக்கலாம். அப்படியே எல்லோரும் வந்தாலும் வாக்கெடுப்பின் போது சிலர் அமைதியாக இருக்கலாம். அல்லது, வாக்கெடுப்பில் பாஜகவுக்கு போதுமான ஆதரவு இல்லாவிட்டாலும், வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றிபெற்றதாக சபாநாயகர் அறிவித்துவிட்டு செல்லலாம்.
இப்படி எது நடந்தாலும் சபைக்குள் கலவரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதைப் பயன்படுத்தி சட்டப்பேரவையை முடக்கலாம். அதன்பிறகு சாவகாசமாக கட்சிகளை உடைக்க முயற்சிக்கலாம்.
இன்னொரு வாய்ப்பும் இருக்கிறது. எம்எல்ஏக்கள் பதவியேற்பு முடிந்தவுடன், சபாநாயகர் தேர்தலை நடத்தும்படி காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் கோரிக்கை வைக்கலாம். அந்தக் கோரிக்கையை ஏற்க பாஜக மறுக்கலாம். அந்தச் சமயத்திலேயே கலவரம் வெடிக்கலாம். சபையை முடக்கலாம்.
ஒருவேளை இதெல்லாம் நடக்காமல் இருந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் மஜதக கட்சிகள் வெற்றிபெற்றால் அது ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றியாக கருதப்படும்.
எதிர்க்கட்சிகள் ஜெயித்தாலும், பாஜக ஜெயித்தாலும் கர்நாடகா அரசியல்தான் அடுத்த மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கப் போகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.