ஊரடங்கில் வேலை இல்லை- வருமானம் இல்லை என்றாலும் எல்லாருக்கும் பசிக்கிறது. ஆனால், அனைத்துத் தொழில்களும் முடங்கிக் கிடக்கின்றன. நான்காம் கட்ட ஊரடங்கு பற்றி, கடந்த 12 ஆம் தேதி இரவு மக்களிடம் உரையாற்றினார் பிரதமர் மோடி. தனது நீண்ட உரை முழுவதும், ‘ஆத்ம நிர்பார் பாரத் அபியான்' என்ற திட்டத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டே இருந்த பிரதமர் மோடி, தொழில்துறையை மேம்படுத்தி, தொழிலாளர்கள், நடுத்தர மக்கள் மற்றும் விவசாயிகளின் சிரமத்தைப் போக்குவதற்காக ரூ.20 லட் சம் கோடி மதிப்பிலான பொருளாதாரத்தை மேம்படுத்தும் தொகுப்புகள் அடங்கியது இந்தத் திட்டம் என அறிவித்தார்.
13 ஆம் தேதி மாலை செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "ஆத்ம நிர் பார் பாரத் அபியான்' என பிரதமர் மோடி இந்தியில் அறிவித்ததை 'தற்சார்பு பாரதம்' என ஆங்கிலத்தில் தெரிவித்தார். பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தேவை, மனிதவளம், தொழில்நுட்பம் ஆகிய நாட்டின் வளர்ச்சிக்குக் காரணமான ஐந்து தூண்களை வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன், 2020இல் இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறோம். இந்திய வர்த்தக சின்னங்களை உலகளவில் கொண்டு செல்வது. தன்னிறைவு பெறுவதோடு, உலகிற்கு உதவுவது என்ற அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படும் என்று விரிவாகப் பேசியவர், இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்களையும் விளக்கினார்.
கேட்டதும் கிடைத்ததும்
ஊரடங்கு தொடங்கிய சமயத்தில், மத்திய அரசு அறிவித்த 1.70 லட்சம் கோடி நிவாரண உதவியில், சிறு, குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான எந்தவித சலுகையும் இடம் பெறவில்லை. அதைப் பூர்த்தி செய்யும்விதமாக, சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், பிணையில்லாமல் வங்கிகளில் கடனுதவி பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. ரூ.3 லட்சம் கோடி இதற்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வருகிற அக்டோபர் மாத இறுதிவரை இந்தத் திட்டம் அமலில் இருக்கும் என்பதால், 45 லட்சம் தொழில் நிறுவனங்கள் இதன்மூலம் பலன்பெறலாம். மேலும், நலிவடைந்த வாராக்கடன் பட்டியலில் இருக்கும் 2 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும் விதமாக, ரூ.20 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்படும். இனி ரூ.200 கோடி வரையிலான அரசு கொள்முதல் டெண்டர்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்க அனுமதி கிடையாது என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பில், சிறு-குறு மட்டும் நடுத்தர நிறுவனங்களுக்கான முதலீடு மற்றும் வருவாய் வரம்புகளை மாற்றியமைத்திருக்கும் முடிவைத் தொழில் முனைவோர் வரவேற்கிறார்கள். அதேசமயம், இந்தக் கோரிக்கைகள் நீண்ட காலமாக முன் வைக்கப்படுவதுதான். அதை ஊரடங்கு நிவாரணத்தோடு சேர்க்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வியும் எழுந்தது. சிறு-குறு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கூடுதல் கடனுக்கான வட்டி விகிதத்தை 6 சதவீதமாக ஆக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு கண்டு கொள்ளாதது ஏமாற்றத்தையே தருவதாகச் சொல்கிறார்கள்.
கடனோ கடன்
வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், வீட்டுக் கடன் மற்றும் குறுங்கடன் நிறுவனங்களில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் விதமாக, ரூ.30 ஆயிரம் கோடிக்கு புதிய திட்டம் வகுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார். மேலும், இந்த நிறுவனங்கள் வழங்கும் கடனுக்கான பகுதியளவு உத்தரவாதத்தை அரசு வழங்கும். இதற்காக ரூ.45 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் என அவர் கூறியிருக்கிறார். மின் விநியோக நிறுவனங்களுக்கு ரூ.90 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்படும். அரசுத்துறை ஒப்பந்ததாரர்கள், கூடுதலாக 6 மாதகால அவகாசம் எடுத்து பணியை முடிக்கலாம்.
டி.டி.எஸ். மற்றும் டி.சி.எஸ். ஆகிய வரிப்பிடித்தங்கள் தற்போதிருக்கும் அளவை விட, 25 சதவீதம் குறைக்கப்படும். இதனால், ரூ.50 ஆயிரம் வரை பணப்புழக்கத்தை அதிகரிக்க முடியும். மேலும், பி.எஃப். வரி விகிதத்தை அடுத்த மூன்று மாதங் களுக்கு அரசே செலுத்தும். அத்துடன், 12 சதவீதத்தில் இருந்து, 10 சதவீதமாக அடுத்த மூன்று மாதங்களுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஊழியரின் கணக்கில் கூடுதல் வருமானம் கிடைக்கப் பெறும்’’ எனத் தனது அறிவிப்பில் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
ஊரடங்கின் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி கவர்னரே கடன் சலுகை, தவணைகளை அறிவித்தும், அதனை வங்கிக் கிளைகள் கடைப்பிடிக்காத நிலையில், சிறு-குறு நிறுவனங்களுக்குச் சொத்து அடமானம் இல்லாத கடன் மற்றும் சலுகைகள் எப்படி நிறைவேறும் என்று கேட்கிறார்கள் தொழில் துறையினர்.
50 நாள் கழித்து ஞானோதயம்
நிர்மலாவின் அறிவிப்பில் நேரடியாகப் பசி தீர்க்கும் திட்டங்கள் இல்லை என்பதையும் குறிப்பாகப் புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதும், வழியில் செத்து மடிவதுமாக உள்ள நிலையில் அதுபற்றி மோடி அரசுக்கு அக்கறை இல்லை என்பதை ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கடுமையாகச் சாட, அடுத்தநாள் இன்னொரு பேக்கேஜூடன் மீடியாவைச் சந்தித்தார் நிர்மலா சீதாராமன்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சாலையோரங்களில் கடை நடத்துவோர், சிறுதொழில் செய்வோர், சிறு விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்களுக்கான ரூ.3.16 லட்சம் கோடி மதிப்பிலான 9 அம்ச திட்டங்களை அறிவித்தார். “நாடு லாக்டவுனில் இருந்தாலும், அரசாங்கம் ஒன்றும் சும்மா உட்கார்ந்திருக்கவில்லை. மக்களுக்குத் தேவையான பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது" என காரசாரமாக தனது பேச்சைத் தொடங்கினார். பட்டினியால் மக்கள் செத்துவிழும் நிலையில், 50 நாட்கள் கழித்து மோடி அரசுக்குத் திடீர் ஞானோதயம் வந்தது போல இருந்தது.
கிசான் (விவசாய) கடன் அட்டை மூலம் இரண்டரை கோடி விவசாயிகளுக்கான, ரூ.2 லட்சம் கோடி கடனில் விவசாயிகளோடு மீனவர்கள், கால்நடை வளர்ப்பில் தொடர்புடையவர்களும் பயனடைவார்கள். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.3,500 கோடி செலவில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மாதம் ஐந்து கிலோ உணவு தானியம் மற்றும் ஒரு கிலோ பருப்பு அடுத்த இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும். சாலையோரங்களில் கடை அமைத்திருக்கும் வியாபாரிகள் 50 லட்சம் பேருக்குக் கடனுதவி கிடைக்கும் விதமாக, ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.
வங்கியில் கடன்பெற்று வீடு வாங்குவோருக்கான மத்திய அரசு மானியம், 'ஒரே நாடு- ஒரே ரேஷன்' திட்டம் மூலம் உணவுப் பொருட்கள், நபார்டு மூலம் அவசர பணி முதலீடாக கூடுதலாக ரூ.30 ஆயிரம் கோடி ஆகியவை நடுத்தர மற்றும் சிறு விவசாயிகள் பயன்பெற உதவும் என்றார். நகர்ப்புற ஏழைகளுக்குக் குறைந்த விலையில் தங்குவதற்கு வாடகை வீடுகள், 100நாள் வேலை திட்டத்தின் கீழ் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாய்ப்பு, பழங்குடியின மக்களுக்கு காம்பா நிதி என்ற பெயரில் ரூ.6 ஆயிரம் கோடி ஆகியவையும் அறிவிக்கப்பட்டன.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பணி நியமனக் கடிதம் வழங்க வழிவகை செய்யப்படும் என்ற அறிவிப்பு வரவேற்பைப் பெற்றிருந்தாலும், பேரிடர் சமயத்து செயல்பாடாக இதைப் பார்க்க முடியாது என்கிறார்கள் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள். மேலும், குறைந்தபட்சம் 10 ஊழியர்களைக் கொண்டிருந்தால் இ.எஸ்.ஐ. திட்டத்தில் இணைக்கப்படுவார்கள் என்று நிதி அமைச்சர் அறிவித்திருக்கிறார். உண்மையில் இந்த அறிவிப்பு மிகத் தாமதமானது. மேலும், 10 ஊழியர்களுக்கும் குறைவான எண்ணிக்கையைக் கொண்ட ஆயிரக் கணக்கான நிறுவனங்களுக்கு இதனால் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை என்று தங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
உதட்டைப் பிதுக்கும் வல்லுநர்கள்
பேரிடரும், பொருளாதார நெருக்கடியும் இறுக்கிக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் மக்களின் பார்வை அரசின் பக்கம் குவிவது இயல்பான ஒன்றுதான். ஆனால், மத்திய அரசோ, மிகப்பெரிய ஒரு தொகையைக் காட்டி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள். காரணம், ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவித்த ரூ.4.5 லட்சம் கோடி, மத்திய அரசு அறிவித்த ரூ.1.70 லட்சம் கோடி இரண்டுமே தற்போதைய தொகுப்பிற்குள் அடங்கிவிடும் என்று மோடி அறிவித்துவிட்டார். மோசமான பொருளாதார சூழல்களில் ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்குக் குறைந்த விகிதத்தில் கடன் கொடுத்து, நிலைமையை சரிசெய்யும். அப்படியான செயல்பாட்டைக் கூட இந்த ரூ.20 லட்சம் கோடி தொகுப்பிற்குள் வைத்திருக்கிறது மோடி அரசு.
ஏற்கனவே, வங்கிகள் கடன்கொடுக்க முடியாத நிலையில் இருப்பதால், மே 13 ஆம் தேதி வரை ரூ.5.47 லட்சம் கோடியைக் கடனாகக் கொடுத்திருக்கிறது ரிசர்வ் வங்கி. ஆக, மத்திய அரசு வார்த்தைக்கு வார்த்தை கடன் என்று குறிப்பிடும் பட்சத்தில், அதன் பொருளாதார ஊக்குவிப்புத் தொகுப்பின் மதிப்பு ரூ.14.53 லட்சம் கோடியாகச் சுருங்கிவிடுகிறது. இப்போதிருக்கும் நெருக்கடியில் வங்கிகள் கடன் கொடுக்க முன்வரும் என்று உத்தரவாதம் கொடுக்க முடியாது. இ.எம்.ஐ. ஒத்திவைப்புக்கான மத்திய அரசின் அறிவிப்புக்கு வங்கிகள் கொடுத்த மரியாதையே அதற்கு உதாரணம். அதேபோல், வங்கிக்கடன் தொடர்பான அறிவிப்பை ரிசர்வ் வங்கி கவர்னருக்குப் பதிலாக நிதியமைச்சர் வெளியிடுகிறார்.
அரசு தனது அறிவிப்பில் தனக்குச் சம்மந்தமேயில்லாத பி.எஃப். விகிதக் குறைப்பைத் திட்டமாகச் சொல்கிறது. மொத்தத் திட்டத்திற்கான செலவு என்னவென்று நிதியமைச்சர் சொல்லவில்லை. அறிவிப்புகளை அலசினால், அரசுக்கான புதிய செலவு வெறும் 50 ஆயிரம் கோடிக்குள் அடங்கிவிடும் போலிருக்கிறது என்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள்.
என்னதான் தீர்வு?
பல்வேறு மாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு நடந்தே சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள்தான், அமைப்புசாரா தொழில்களின் ஆணிவேர்கள். அவர்கள் மீண்டும் பழைய இடத்திற்கே வேலைக்கு செல்வது அரிதான காரியம். அவர்களுக்கு ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை தருவோம் என்கிறது மத்திய அரசு. ஆனால், நகர்ப்புற புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இதனால் என்ன பயன் கிடைக்கும்? தொழில் நிறுவனங்களுக்கான நிலுவைத் தொகை ஒருபுறம், தொழிலாளர் சட்டங்கள் நீர்த்துப் போவது மறுபுறம் எனத் தொழிற்துறையே புதிய பரிணாமத்திற்குள் சென்று அச்சுறுத்துகின்றன. இதற்கெல்லாம் என்ன பதில் வைத்திருக்கிறது அரசு என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
வங்கிகள் கடன் தந்து தொழில் உற்பத்தியே பெருகினாலும், மக்களின் வாங்கும் திறனே முக்கியம் என வலியுறுத்தும் மார்க்சிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அன்றாடப் பிழைப்புக்கு ஏங்கும் மக்களிடம் பணம் இல்லையென்றால், உற்பத்தி அனைத்தும் வீணாகும். அரசின் திட்டங்களும் பாழாகும். எனவே, வருமான வரி செலுத்தாத மக்களை இனங்கண்டு அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.7,500ஐ உடனடியாக டெபாசிட் செய்யவேண்டும். இதற்கு வெறும் ரூ.3.5 லட்சம் கோடி மட்டுமே செலவாகும்என்று வலியுறுத்துகிறார்.
பசியோடு சாலைகளில் நடந்து செல்பவர்கள்தான், இந்தியாவின் உண்மை முகத்தைக் காட்டுகிறார்கள். அந்த இந்தியாவை பசியிலிருந்து காப்பாற்றுமா மோடி மேஜிக்?
-ச.ப.மதிவாணன்