தமிழக அமைச்சரானதும் உதயநிதி தொடர்பான செய்திகள் கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் அமைச்சராவதற்கு என்ன தகுதி இருக்கு என்று அதிமுகவின் தலைவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக அரசியல் விமர்சகர் கந்தராஜ் அவர்களிடம் கேட்டபோது, " இந்தியாவில் எந்த கட்சியில் வாரிசு அரசியல் இல்லை என்று சொல்லச் சொல்லுங்கள். பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை என்று அண்ணாமலை சொல்வாரா? இவர் வேண்டுமானால் முதல்முறையாக அரசியலுக்கு வந்திருக்கலாம். ஆனால் இவரைப் போல் பல பேர் பாஜகவில் வாரிசு என்ற அடிப்படையில் மட்டுமே பதவி பெற்றுள்ளார்கள்.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மிக முக்கியப் பதவியில் இருக்கிறார். இது எந்த அரசியல் என்று பாஜகவினர் சொல்ல வேண்டும். அவருக்கும் கிரிக்கெட்டுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? அமித்ஷா மகன் என்ன கிரிக்கெட் பிளேயரா? ஆல் ரவுண்டரா? இல்லை இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளாரா? குறைந்தபட்சம் ரஞ்சி டிராபி விளையாடி உள்ளாரா? எத்தனை ரன் அடித்தார், எத்தனை விக்கெட் எடுத்தார் என்பதை அவர் கூறுவாரா? கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாத ஒருவர் பல்லாயிரம் கோடி புழங்குகின்ற ஒரு விளையாட்டின் தலைமை பொறுப்புக்கு வருவது வாரிசு அரசியலுக்குக் கீழ் வராதா என்பதை அண்ணாமலை அமித்ஷாவிடம் கேட்டுச் சொல்ல வேண்டும்.
எத்தனை மத்திய அமைச்சர்களின் உறவினர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்ற பட்டியலை வெளியிட்டால் அதற்கு அண்ணாமலை பதில் சொல்வாரா? இவர்கள் என்னவோ அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை என்ற கொள்கைகளை விடாப்பிடியாகக் கடைப்பிடிப்பவர்கள் போல வாயில் என்ன வருகிறதோ அதைப் பேச வேண்டும் என்ற கொள்கையை விடாப்பிடியாக வைத்துள்ளனர். தன் மீது இருக்கிற எந்த ஒரு தவற்றைப் பற்றியும் யாரும் பேசக்கூடாது, ஆனால் தான் மட்டும் அனைவர் பற்றியும் பேசுவேன் என்ற மனநிலையில்தான் அவர்கள் தொடர்ந்து இருக்கிறார்கள். எனவே அடுத்தவர்களைப் பற்றியோ இல்லை அடுத்த கட்சியில் ஏன் இவர்களை அமைச்சர் ஆக்குறீங்க என்றோ கேட்கிற தார்மீக தகுதி இவர்கள் யாருக்கும் இல்லை"என்றார்.