Skip to main content

தொடர்ந்து போராடும் மாணவர்கள், ஒடுக்கும் நிர்வாகம் - காருண்யாவில் நடப்பது என்ன???

Published on 17/04/2018 | Edited on 17/04/2018

தமிழ்நாட்டில் சிறந்த கல்லூரிகளுக்கு பெயர் பெற்ற கோவையில் சிறுவாணி சாலையில் சிலு சிலு மலையடிவாரப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் அமைந்திருக்கிறது காருண்யா பல்கலைக்கழகம். அங்கு கடந்த ஒரு வாரமாக வெப்பமான நிகழ்வுகள் நடப்பதாகத் தகவல்கள் வந்தன. மாணவர்கள் தொடர்ந்து போராடி வருவதாகவும் அதை ஒடுக்க பேச்சுவார்த்தை நடத்தாமல் போலீசை பயன்படுத்துவதாகவும் கூறப்பட்டது. என்ன நடக்கிறது காருண்யாவில்? போராட்டத்திற்கு என்ன காரணம்? விசாரித்தோம்.      

 

 காருண்யாவின் பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவரிடம் பேசினோம்...

 

karunya


 

"இங்க காலேஜ்ல வாங்குற ஃபீஸ்க்கு சரியா கணக்கு சொல்ல மாட்டேன்றாங்க. அதுதான் இங்க பெரிய பிரச்சனை. ஃபீஸ் அதிகம்தான். ஆனா, அதுக்கு கணக்கு சொன்னாதான எங்களுக்கும் ஏன், எதுக்குன்னு தெரியும். மெஸ் அட்வான்ஸ் என்ற பெயரில் வருடத்தின் தொடக்கத்துலயே ஒரு அமௌன்ட் வாங்குறாங்க. மாசா மாசம் மெஸ் பில்லும் வருது. வருட இறுதியில் இந்த அட்வான்ஸை திருப்பித் தர மாட்டாங்க. அப்புறம் எதுக்காக அந்தப் பணம்? இது ஒரு உதாரணம்தான். எல்லா கட்டணங்களிலும் இப்படித்தான் பண்ணுறாங்க.  அது மட்டுமில்லாம உளவியல் ரீதியான பிரச்சனைகளும் அங்க இருக்கு. உதாரணமா காலேஜ்  ஸ்டூடெண்ட்ஸ் எல்லாரையும் தினமும் கண்டிப்பா பிரேயர் மீட்டிங்க்கு வர சொல்றது, அதுமாதிரி இன்னும் நெறையா இருக்கு. ஒரு பையனும் பொண்ணும் பேசுனா அசிங்கமா கேப்பாங்க. ஆனால், இப்போ எங்களுக்கு முக்கியமான பிரச்சனையாக இருப்பது அதிக கட்டணம்தான். இதை எதிர்த்துக் கேட்டுப் போராடுனோம். போலீஸ் வச்சு மிரட்டுனாங்க. இப்போ எங்க எல்லாரையும் சஸ்பண்ட் பண்ணிட்டாங்க. எப்போ காலேஜ்க்கு வரணும்னும் தெரியல" என்றார்.  

 

karunya

 

காருண்யாவில் நடக்கும் பிரச்சனை குறித்து தன் சமூக வலைதள  பக்கத்தில்  பகிர்ந்திருந்த   சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷிடம்  கேட்டபோது,

"கட்டணம் அதிகம் என்பது மட்டும்தான் காரணமா?

சாதாரணமாகவே ஒரு தனியார் கல்லூரியில் ஜனநாயக ரீதியாக எதுவுமே நடப்பதில்லை. ரவுடித்தனமாகத்தான் செயல்படுவார்கள். அதற்கு காருண்யாவும் விதிவிலக்கில்லை. காவல்துறையை வைத்து தடியடி நடத்தியதிலேயே அவர்களின் நிலைப்பாடு தெரிகிறது. பொதுவா ஒரு மாணவன் தனது கருத்தை சொல்கிறானென்றால், கல்லூரிதான் அந்தக் கருத்தை கேட்க வேண்டும். அதைவிட்டுவிட்டு காவல்துறையை வைத்து தடியடி நடத்துவது எப்படி சரியாகும்.

அதிக ஃபீஸ் வாங்குறது என்பது ஒரு பெரிய பிரச்சனை. ஒவ்வொரு தனியார் கல்லூரியும் கணக்கு காட்டாம பல வழிகளில் அதிக கட்டணம் வாங்குறாங்க. ஏன் மக்களை ஏமாற்றவேண்டும்? இன்றைக்கு எப்படி மக்களை சுரண்டுவது என கற்றுக்கொள்ளும் மாணவன், அவன் ஒரு நிறுவனத்தை தொடங்கும்போது மக்களை சுரண்டத்தான் பார்ப்பான். ஒரு நேர்மை, ஒழுக்கம், சுயக்கட்டுப்பாடு எல்லாம் கல்லூரி படிக்கும் போதிருந்தேதான் இருக்கணும். ஆனா இவுங்களே எப்படி ஒருத்தர சுரண்டுவது என்பதையெல்லாம் சொல்லித்தராங்க. 

அது போல காட்டுக்கருகில் கல்லூரியை வைத்துக் கொண்டு கட்டிட விரிவாக்கம் செய்வது, ஒலிபெருக்கியை பயன்படுத்துவது இப்படி செய்வதெல்லாம் காட்டை அழிக்கும் வேலைதான். சுற்றுச்சூழலை கெடுப்பதில் ஈஷாவும், காருண்யாவும் ஒன்றுதான்" என்றார்.

காருண்யா கல்லூரியை தொடர்பு கொண்ட பொழுது பதிவாளர் அலுவலகத்தில் இல்லை, வேலையாக இருக்கிறார் என்று பதில் வந்தது. மாணவர்கள் சஸ்பெண்ட் பற்றி கேட்ட பொழுது 'போராட்டம் என்ற பெயரில் கல்லூரி சொத்துகளை சேதப்படுத்திய, உடைத்த மாணவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுத்தோம்' என்று கூறப்பட்டது. மீண்டும் உயர் அலுவலரிடம் பேச முயன்ற போதும் பதில் பெற முடியவில்லை. இதனிடையே நேற்று மீண்டும் போராட்டம் நடந்ததாகவும், கலை பிரிவு மாணவர்களையும் இடைநீக்கம் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் எண்ணிக்கை பெருகிய போது, போட்டி போட்டு பல்கலைக்கழக ரேங்கிங்கில் முன்னே செல்வதற்காக பல கல்லூரிகளில் மாணவர்கள் மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அடிமைகள் போல் நடத்தப்பட்டார்கள். அந்தப் பழக்கம் கலை கல்லூரிகளுக்கும் பரவியது. கட்டணம் பற்றி கேள்வியெழுப்பிய மாணவர்களை போலீசை விட்டு ஒடுக்குவதும், உடனே இடைநீக்கம் செய்வதும் சரியான செயலில்லை. தமிழகத்தில் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் பல வகைகளில் கட்டுப்பாடின்றி செயல்படுகின்றன. அரசும் பல்கலைக்கழக மேற்பார்வை குழுவும் இதை கவனிக்க வேண்டும். ஆனால், அவர்களை இவர்கள் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிப்பதால் யாரும் கவனிப்பதுமில்லை, கண்டும் காணாதது போலத்தான் இருக்கிறார்கள்.