Skip to main content

கவர்னர் பெயரால் கல்லூரி மாணவிகளுக்கு வலை! -ஆடியோ ஆதாரம்!

Published on 09/10/2018 | Edited on 10/10/2018

தென் மாவட்டங்களில், கல்வி மாவட்டம் என்னும் பெருமையுடன் விளங்கும் மாவட்டத்தில், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருக்கும் மக்கள் நிறைந்த "அரு'மையான ஊரில் கல்விக்கோட்டையாக, ‘48 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட கலைக்கல்லூரி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துடன் இணைந்த தன்னாட்சி கல்லூரி ஆகும். சமுதாயப் பின்புலத்துடன், உன்னத நோக்கத்துடன் உருவான அந்தக் கல்லூரியில், நிர்வாகத்துக்கான போட்டா போட்டியில், துறைரீதியாக சில வி.வி.ஐ.பி.க்களின் ஆதரவு, கல்லூரி நிர்வாகத்தினருக்குத் தேவைப்படுகிறது.

maduraiuniversity

அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவியின் தந்தை நம்மிடம் தந்த ஆடியோ அதிர வைத்தது. அதில், பி.எஸ்சி. மூன்றாமாண்டு படிக்கும் நான்கு மாணவிகளை ஒரே நேரத்தில் தொடர்புகொண்டு பேசிய கணிதத்துறை உதவிப் பேராசிரியை டாக்டர் பி.நிர்மலாதேவி, கவனத்துடன் வார்த்தைகளைக் கையாண்டிருக்கிறார். அந்த 20 நிமிட ஆடியோவில், “""திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உன் போனை ஸ்பீக்கர்ல போடு. நீங்க நாலுபேரும் கேளுங்க'' என்று சொல்லிவிட்டு, ஆசை வார்த்தைகளை விதைக்கிறார். "முதலில் “நாங்க என்ன மேம் பண்ணணும்?'’என்று அப்பாவித்தனமாகக் கேட்ட நான்கு மாணவிகளும் பிறகு உஷாராகி, “"இது எங்களுக்கு செட் ஆகாது... இஷ்டம் இல்ல மேம்'’ என்று, நடுக்கத்துடன் மறுக்கிறார்கள். ஆனாலும், பேராசிரியை விடவில்லை. “

""உங்க எல்லாருடைய குடும்ப சூழ்நிலையும் எனக்கு நல்லா தெரியும். இந்த வாய்ப்பு திரும்ப வராது'' என்று தனது நோக்கத்திலேயே குறியாக இருந்து, அவர்களை சம்மதிக்க வைக்க முயற்சிக்கிறார். மாணவிகளோ, "வேணாம் மேம்...'’’என்று கெஞ்சுகிறார்கள். நிர்மலாவோ, “""நான் பேச வர்ற விஷயம் ரொம்ப ரொம்ப சாதாரணமானது. இதை பாஸிட்டிவா எடுத்துக்கங்க'' என்று வலியுறுத்துகிறார். ஒருகட்டத்தில் வெகுண்ட மாணவிகள், “""இதுக்கு மேல இதைப்பத்திப் பேச வேண்டாம். எங்களை விட்ருங்க மேம்'' என்று குரலை உயர்த்திச் சொல்கிறார்கள். சுதாரித்துக்கொண்ட பேராசிரியை, “""இஷ்டம் இல்லையாடா கண்ணா.. அப்படின்னா எனக்கு நீங்க உறுதியளிக்கணும். இந்த விஷயம் வெளியே போகக்கூடாது'' என்று உத்தரவு போடுகிறார். மாணவிகளும் வேறு வழியில்லாமல், ""யாருகிட்டயும் சொல்ல மாட்டோம் மேம்'' என்று அந்த நேரத்தில் அவரது பயத்தைப் போக்குகிறார்கள்.

டாக்டர் நிர்மலாதேவிக்கு வயது 46 ஆகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பல கல்லூரிகளில் நடந்த செமினார்களில் பங்கேற்றிருக்கிறார். போட்டிகளுக்கு மாணவிகளையும் அழைத்துச் சென்றிருக்கிறார். மாணவிகளுடன் அவர் பேசியதைக் கேட்கும்போது, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் தொடர்புகள் மட்டுமல்லாது, சென்னை வரையிலும் கல்வித்துறை வட்டாரங்களில், வி.வி.ஐ.பி.க்களுடனும் ராஜ்பவன் வட்டாரத்திலும் தொடர்பில் இருப்பதையும், தொலைதூரக் கல்வித் திட்டத்தை செயல்படுத்தும் தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் இவருக்கு செல்வாக்கு உண்டு என்பதையும் அறிய முடிகிறது.

நிர்மலா பேசிய ஆடியோவில் உள்ள "ஹைலைட்டான' வார்த்தைகளை அவரது வாய்ஸிலேயே கேட்போம்!

university-vcs""எம்.கே. (மதுரை காமராஜர்) யுனிவர்சிட்டிய பொறுத்தவரைக்கும் அவங்க ஹையர் அஃபிசியல்ஸ்.

காலேஜ் ஸ்டூடண்ட்ஸை, சில விஷயங்களுக்காக எதிர்பார்க்கிறாங்க. இதுவரைக்கும் அந்த லெவலுக்கு நான் இறங்கினது இல்ல. இந்த அளவுதான் என்னால சொல்ல முடியுது. ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருக்காங்க. இதுக்கு முன்னால ஒரு தடவை பேப்பர் வேல்யூசனுக்காக வந்தேன்ல. ரெண்டு நாள் ஓ.டி.ல நானும் நாகராஜன் சாரும் வந்திருந்தோம்ல. அந்த சந்தர்ப்பத்துல என்கிட்ட ரிக்வஸ்ட் பண்ணிக் கேட்டாங்க. அவங்க என்கிட்ட பேசியத வச்சுத்தான் சொல்லுறேன். உங்கள பெரிய லெவலுக்கு கொண்டு போயிருவேன்.

எஸ்பெஷலி திவ்யா பேர்ல கொஞ்சம் இது இருக்கு. அதாவது, நீ அந்தமாதிரி நடந்துக்கிட்டாத்தான்... மார்க் விஷயத்துல மட்டுமில்ல, ஃபினான்சியலாவும் நல்ல சப்போர்ட் கிடைக்கும். இதை நீங்க வீட்ல சொன்னீங்கன்னா... அதுக்கேத்த மாதிரி பிளான் பண்ணிடலாம். ஆனா... அமவுன்ட்டை பேங்க் அக்கவுண்ட் ஓப்பன்பண்ணி, அதுல போட்டுவிடறேன்.

யுனிவர்சிட்டிய எப்படியெல்லாம் நாம யுடிலைஸ் பண்ண முடியுமோ, அந்த அளவுக்கு யுடிலைஸ் பண்ண முடியும். பி.ஜி.க்கு ரெகுலர் கிளாஸ் தேவையில்லை. மன்த்லி மன்த்லி சம்பளம் கொடுக்கிற மாதிரி, உங்க வீட்டுக்கு அமவுன்ட் வந்திரும்.

நீங்க வந்து சின்னக் குழந்தைங்கடா... கண்ணுங்களா... பொலிடிகல் இன்ஃபுளூயன்ஸ் இல்லாம யாரும் வி.சி. போஸ்ட்டுக்கு வர முடியாது. இன்னும் நிறைய விஷயங்களை என்னால டீடெய்லா பேச முடியாது. இப்ப இவ்வளவுதான் ஹின்ட் கொடுக்க முடியும்.

நீங்க என் பேச்சைக் கேட்கமாட்டேன்னு சொல்லுறதுக்காக... உங்க மார்க்ல எல்லாம் கை வைப்பேன்னு நினைக்காதீங்க. ஒரு ஆபர்சூனிட்டி வந்தது. இதையே நான் ரொம்ப நாளா யோசிச்சு.. யோசிச்சு.. கேட்கவா? வேணாமா? அந்த எண்ணத்துல.. ரொம்ப டைலமால்லதான் கேட்டேன். நெக்ஸ்ட் வீக், அவங்களுக்கு ஒரு இம்பார்டன்ட் அசைன்மெண்ட் இருக்கும் போல. அதனாலதான், வேணும்னு என்னை அவசரப்படுத்துறாங்க. யாருங்கிறதை மட்டும் சொல்லமாட்டேன்.

என்னையவே நிறைய செக் பண்ணிட்டாங்க. அப்புறம்தான் இந்த விஷயங்களைச் சொன்னாங்க. ரொம்ப ரொம்ப ஹையர் அஃபிசியல். இதுவரைக்கும் சில விஷயங்கள்ல என்னைய இன்டிவிஜுவல் பண்ணி, ஸ்பெஷலைசேஷன் பண்ணிருக்காங்க.

உங்களுக்கு கவர்னர் வர்ற வீடியோவெல்லாம் அனுப்பிச்சிருந்தேன்ல. இன்னும் சில விஷயங்கள் நடந்துச்சு. கவர்னர் லெவல்ல்... கவர்னர் தாத்தா’ இல்ல. அந்த கவர்னர் மீட்டிங் வீடியோவுல, நான் எந்த அளவுக்கு பக்கத்துல இருந்து எடுத்திருக்கேன்னு உங்களுக்குத் தெரியும். ஸோ.. அந்த அளவுக்கு என்னால மூவ் பண்ண முடியும்.

இப்ப வேணாம்னு சொல்லுறீங்க. உங்களுடைய சம்மதத்துக்காக வெயிட் பண்ணுறேன். இன்னும் கொஞ்சம் யோசிங்க. சனிக்கிழமை கால் பண்ணுறேன்'' என்று கழுவிய மீனில் நழுவிய மீனாக, வார்த்தைக்கு வார்த்தை, பொடி வைத்தே பேசியிருக்கிறார் நிர்மலா தேவி.

‘"யார் அந்த கவர்னர் லெவல் வி.வி.ஐ.பி.? ஹையர் அஃபிசியல்? கவர்னர் ‘தாத்தா இல்லை’ என்று ஏன் சொல்கிறார்? மாணவிகளிடம், அவர்களின் ஏழ்மையைச் சுட்டிக்காட்டி, ஆசை வார்த்தைகளைக் கூறி, எந்த லெவலுக்குக் கொண்டுசெல்ல வற்புறுத்துகிறார்?'’என, கேள்விகள் வரிசைகட்டி நிற்க... அந்தக் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள டாக்டர் நிர்மலா தேவியை தொடர்புகொண்டோம்.

“""நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் விவரம் சொன்னார்களா? நான் ஏற்கனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இதுகுறித்து போன்ல பேச வேண்டாமே... நேரில் பேசலாமே!'' என்று பதற்றத்துடன் கூறினார். தொடர்ந்து முயற்சித்தோம். நம்மைச் சந்திப்பதையே தவிர்த்தார்; தொடர்பு கொள்ளவும் மறுத்தார்.

அந்தக் கல்லூரியின் செயலாளரிடம் பேசினோம். ""ஆமாங்க.. விசாரணை நடந்துக்கிட்டிருக்கு'' என்று முடித்துக்கொண்டார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்லத்துரையை தொடர்புகொண்டோம். ""நான் ஹாஸ்பிடல்ல இருக்கேங்க..'' என்று கூறி, லைனைத் துண்டித்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சின்னையாவிடம் பேசினோம். ""இந்த விஷயத்தில் பதிவாளரான நான் கருத்து கூறமுடியாது. துணைவேந்தர் கண் ஆபரேஷன் பண்ணிருக்காரு. ஆனாலும், அவர் கவனத்துக்கு இந்த விவகாரத்தை முழுமையாகக் கொண்டு செல்கிறேன்'' என்றார்.

மகளின் எதிர்காலத்தை மனதில் நிறுத்தி, புகார் அளிப்பதற்கு முன்வராத அந்த மாணவியின் தந்தை, “""நிர்மலா தேவியை விடவே கூடாது. பெரிய லெவலில் விசாரணை நடத்தி, எவ்வளவு பெரிய வி.வி.ஐ.பி.க்களாக இருந்தாலும் அவர்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும்; கூண்டில் ஏற்ற வேண்டும்'' என்றார் குமுறலுடன்.

கவர்னர் பெயரைச் சொல்லி கல்லூரி மாணவிகளுக்கு வலைவீசும் கழுகுகளாக இன்னும் எத்தனை நிர்மலாக்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ? அவர்கள் பின்னணியில் எத்தனை வி.வி.ஐ.பி.க்களோ.

-சி.என்.இராமகிருஷ்ணன்

--------------------------------

'சாதனை"கள்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் செனட் உறுப்பினராக இருந்த சந்திரகாந்தா என்பவர், 15 ஆண்டுகளுக்கு முன் பழனியாண்டவர் அரசு மகளிர் கல்லூரியின் முதல்வராக இருந்தார். அந்தக் கல்லூரிக்கு 5 நட்சத்திர அந்தஸ்து வழங்குவதற்காக, "நாக்' அதிகாரிகளை சந்தோஷப்படுத்துவதற்கு, கல்லூரி மாணவிகளை அனுப்பி வைத்தார் என்று அப்போது மாநில அளவில் போராட்டம் வெடித்தது. அதன்பிறகு, தமிழக மாணவிகளை விட்டுவிட்டு, அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த, அப்பாவி மாணவிகளை சல்லடை போட்டுத் தேர்ந்தெடுத்து அனுப்புகிறார்கள். வடமாநிலங்களிலும் இதே நிலைதான். தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவினர் என பல தரப்பு மீதும் இந்தக் குற்றச்சாட்டுகள் உள்ளன.

பெரியார் பல்கலைக்கழகத்தின் முக்கிய பொறுப்பில் இருந்த அவர், இப்போது உயிருடன் இல்லை. விளையாட்டில் சிறந்து விளங்கிய ஒரு மாணவியோடு அவர் நெருக்கமானார். அந்த மாணவி பி.எச்டி. முடித்தவுடன், சீனியர்களை ஓரம் கட்டிவிட்டு, கல்லூரி ஒன்றில் வேதியியல் துறை நிரந்தரப் பணி கிடைப்பதற்கு வழி செய்தார். இவ்வகையான "சாதனை'கள் இப்போதும் தொடர்கின்றன.