திருக்குறள் தொடர்பான விவாதங்கள் கடந்த இரண்டு தினங்களாக தமிழகத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக திருவள்ளுவருக்கு காவி உடையை அணிவிப்பது, அவரின் சிலைக்கு மை அடிப்பது, சிலையை சேதப்படுத்துவது என்று தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், " தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக வன்முறை அரசியலை வளர்த்தெடுக்க வேண்டும் என்று மத்திய பாஜக அரசு விரும்புகிறது. திருக்குறள் தமிழர்களுடைய சொத்தாக இருக்கிறது. அது தமிழர்கள் உலக மக்களுக்காக படைத்த ஒரு வாழ்வியல் நெறி, உன்னத நெறி. தமிழர்களின் இந்த அற நூலை ஒரு மத நூலாக, இந்துத்துவ நூலாக மாற்ற பாஜக முயன்று வருகிறது. இன்னும் சொல்லப்போனால் திருவள்ளுவரையே பாஜக உறுப்பினர் போல காட்டுகின்ற வேலைகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது. இத்தகைய தனித்துவமான திருக்குறளை ஏதோ இந்து மதத்தின் அடையாளமாக்க காவிகள் முயன்று வருகிறார்கள். அவர்களின் எதேச்சதிகார தன்மை தமிழகத்தில் செல்லுபடியாகாது. திருக்குறள் மற்ற நூல்களை விட தனித்துவமானவை. இந்து நூல்களில் உள்ளதை போன்று மனிதனை சாதி ரீதியாக இது பிரித்து பார்க்கவில்லை. அனைவரும் ஒன்றே என்ற கருத்தை அழுத்தமாக அனைவரும் உணர்த்தும் சமத்துவமான நூல். அதனால், இது மதவாதிகளின் கண்களை உறுத்துகிறது. இதனால் தான் திருக்குறளுக்கு காவி சாயம் அடிக்க முயல்கிறார்கள். திருவள்ளுவர் சிலைகளை சேதப்படுத்துகிறார்கள்.
வெளிநாட்டில் பிரதமர் இரண்டு திருக்குறளை சொல்வதினால், தமிழர்களுக்கு நல்லது செய்வீர்கள் என்று நாங்கள் யாரும் நினைக்கப் போவதில்லை. அங்கே தமிழை பெருமையாக பேசிவிட்டு தமிழகத்தில் ஹிந்தியை எந்த வழியில் திணிக்கலாம் என்று பார்ப்பீர்கள். இந்தியா முழுவதும் இந்தி என்பதே அவர்களின் நோக்கம். இதற்கிடையே இந்தமாதிரி திருக்குறளை பரப்புவதாக கூறி தங்களுக்கு தாங்களே நடித்துக்கொள்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து தமிழர்கள் ஏமாந்து போவார்கள் என்று பாஜக நினைத்தால், ஏமாந்து போவது அவர்களாகத்தான் இருக்கும். தொலைப்பேசி வரை இந்தியியை திணிக்கும் அவர்கள், தமிழை நேசிக்கிறோம் என்றால் எப்படி நம்புவது. தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் தொலைப்பேசியில் ஹிந்தி பேச வேண்டிய அவசியம் என்ன. தமிழர்கள் ஏமாற தயாரில்லை என்பதை பாஜக புரிந்துகொள்ள வேண்டும். விரைவில் புரிந்து கொள்ளும் என்று நம்புகிறேன்" என்றார்.