Skip to main content

"பணம் கொடுத்தால் சமாதானமாகி விடுவோமா..." - அமைச்சர்களை அதிர வைத்த தூத்துக்குடி மக்கள்

Published on 28/05/2018 | Edited on 28/05/2018

ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டம் -சுற்றுச்சூழலுக்காக, உயிருக்காக, வருங்காலத்திற்காக நடந்த ஒன்று. ஆலையால் பாதிப்பு ஏற்படும் என தெரிந்தே அன்றைய அதிமுக அரசு அனுமதியளித்தது, திமுக அரசு உற்பத்தி அளவை அதிகரிக்க அனுமதியளித்தது. இதெல்லாம் மக்களை நின்று கொன்றது என்றால், இப்போதிருக்கும் அதிமுக அரசு மக்களை அன்றே கொன்றது துப்பாக்கிச்சூட்டின் மூலம். மக்கள் போராட்டமாக இந்தப் பிரச்சனை வளரும் முன்பே ஆலையை மூட உத்தரவிட்டிருக்கவேண்டும். அதை செய்யாமல் விட்டதே தவறு, இதில் மக்களுக்கு எதிராக துப்பாக்கிச்சூடு நடத்தும் அளவிற்கு சென்றது அதைவிட மிகப்பெரிய தவறு.

 

sterlite

 

 

நேற்று நிவாரணத்தொகை அதிகரித்ததற்குப் பின்னே இருப்பது வெறும் பண அரசியல் மட்டுமே. பணத்தைக் கொடுத்தால் சமாதானமாகிவிடுவார்கள் என்ற எண்ணம்தான். ஆனால் மக்கள் அதை பொய்யென நிரூபித்துவிட்டனர். இன்று காலை துணைமுதல்வர் தூத்துக்குடி செல்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நேற்றிலிருந்தே தொடங்கிவிட்டன. அதன்படி, நேற்று காலை செய்தித்துறை அமைச்சர் சென்று கள நிலவரத்தைப் பார்வையிட்டார். மாலை நிவாரணத்தொகை அதிகரிக்கப்பட்டது. இன்று காலை, போராட்டத்தை பதிவு செய்த சிசிடிவி பதிவுகள் வெளியிடப்பட்டன, சரியான இடங்களில் வெட்டப்பட்டு. இவையெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையே, அனைத்துமே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்தான். அடுத்தபடியாக முதல்வர் தூத்துக்குடி செல்வார் என்ற அறிவிப்பு கூட வெளியாகலாம். இருந்தும் மாவட்ட ஆட்சியர் முதல் இன்று போன துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வரை அங்கு சென்றவர்கள் அனைவரின் எதிர்ப்பை மட்டுமே பெற்றனர்.

 

ஓட்டுக்கு பணம் கொடுத்தபோது எதிர்க்காமல் வாங்கிக்கொண்டதுதான் இத்தனைக்கும் காரணம். முன்பு பணம் கொடுத்தால் வாக்கை வாங்கிவிடலாம் என்று நினைத்தார்கள், இன்று பணத்தை வைத்து உயிரை வாங்கிவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். இப்படியே சென்றால் நாளை என்ன நடக்கும் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.