Skip to main content

எஸ்ஐயை எகிறி வந்து எட்டி உதைத்த முன்னாள் எம்.பி.! காவல்துறைக்கு இது போதாத காலம்!!

Published on 29/06/2020 | Edited on 29/06/2020
Former MP who kicked the policemen

 

சேலம் அருகே, வாகன சோதனையின்போது, அடையாள அட்டை கேட்டதால் ஆத்திரம் அடைந்த முன்னாள் திமுக எம்.பி. அர்ஜூனன், சீருடையில் இருந்த காவல்துறை உதவி ஆய்வாளரை பாய்ந்து வந்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (77). திமுகவில் 1980 முதல் 1984 வரை எம்.பி. ஆகவும், பின்னர் அதிமுகவில் இணைந்த அவர் 1989 &1991, 1991 - 1996 வரை எம்எல்ஏ ஆகவும் இருந்தார். பின்னர், மீண்டும் திமுக, தேமுதிக என்று கட்சிகளுக்குச் சென்ற அவர் சில ஆண்டுக்கு முன்பு மீண்டும் அதிமுகவில் இணைந்தார். தற்போது அக்கட்சியில் இருந்தும் ஒதுங்கி இருக்கிறார்.

அவருக்கு மேச்சேரி அருகே காமனேரியில் சொந்தமாக தோட்டம் உள்ளது. அவ்வப்போது தோட்டத்திற்குச் சென்று வருவார். ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) தோட்டத்திற்குச் சென்ற அவர், இரவு 7.30 மணியளவில், டிஎன் 30 ஏஏ 5859 என்ற பதிவெண் கொண்ட தனது கார் மூலம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். காரை ஓட்டுநர் ஒருவர் ஓட்டி வந்தார். ஓமலூர் சுங்கச்சாவடி அருகே கார் வந்தபோது, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கும், அர்ஜூனனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. ஒருகட்டத்தில், அவர் காவல்துறை எஸ்ஐ ஒருவரை எட்டி உதைக்கும் அளவுக்குச் சென்றுள்ளார். இந்த காட்டில் வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடங்களில் வேகமாக பரவி வருகிறது.

நடந்த சம்பவங்கள் குறித்து நாம் விசாரித்தோம், கரோனா நோய் பரவல் காரணமாக வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை காவல்துறையினர் சிறப்பு சோதனைச்சாவடிகள் அமைத்து தணிக்கை செய்து வருகின்றனர். அதன்படி ஓமலூர் சுங்கச்சாவடி அருகே காவல்துறையினர் ஞாயிறன்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த அர்ஜூனனிடமும், காவலர்கள் ஆவணங்களை காவலர்கள் கேட்டுள்ளனர்.

 

Former MP who kicked the policemen

 

அப்போது அவர், தான் ஒரு முன்னாள் எம்பி., முன்னாள் எம்.எல்.ஏ. என்றார். அப்படியெனில் அதற்கான அடையாள அட்டை இருந்தால் காட்டுங்கள் என்று காவலர்கள் கேட்டனர். அதற்கு அவர், தன்னிடம் அடையாள அட்டை இப்போது இல்லை. வீட்டில் இருக்கிறது என்றதோடு, ஒருமையில் அவர்களை கோபமாக ஏதோ ஏதோ பேசியதாக தெரிகிறது.

இதுகுறித்து காவலர்கள், அங்கிருந்த இரும்பாலை காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்எஸ்ஐ) ரமேஷிடம் கூறினர். அவர், ''ஏன் அவர் காரை விட்டு இறங்கி  வர மாட்டாரா?,'' என்றார். அதைக் கேட்டு ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அர்ஜூனன், காரில் இருந்து இறங்கி வந்து எஸ்எஸ்ஐ ரமேஷிடம், ''இறங்கச் சொல்லி  என்னடா... அறைஞ்சா...'' என்று மீண்டும் ஆபாச வார்த்தைகளால் அவரையும், மற்ற காவலர்களையும் மிரட்டினார்.

எஸ்எஸ்ஐ ரமேஷ், ''நல்ல அரசியல்வாதியாக இருந்தால், காவலர்களை தம்பீ...'' என்று மரியாதையாக சொல்லி இருக்க வேண்டும் என்றார். அப்போது காரில் அமர்ந்து இருந்த அர்ஜூனன், ''தம்பீனு நொட்டறாங்க. கிழிக்கறாங்க உன்கிட்ட. இப்ப என்னா பண்ணனுங்கற... அங்க ரெண்டு பேத்த அடிச்சுக் கொன்ன மாதிரி... போலீசுக்கு அவ்வளவு அதிகாரம் கொடுத்துட்டாங்களா இப்ப... ரொம்ப அதிகப்பிரசங்கி பண்ணிக்கிட்டு இருக்கீங்க... சொன்னா மூடிக்கிட்டு விட வேண்டியதுதானே... முன்னாள்  எம்எல்ஏ... எம்.பி.னா மரியாதை கிடையாதா...?,'' என மீண்டும் ஆவேசமாக தகராறில் ஈடுபட்டார்.

இந்த காட்சிகளை எல்லாம் அங்கிருந்த காவலர்கள் சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தனர். காரில் இருந்து வேட்டியை தூக்கி மடித்தபடி ஆவேசமாக வந்த ஆர்ஜூனன், வீடியோ எடுத்த காவலர்களையும் ஆபாச வார்த்தைகளால் திட்டினார். அதற்கு எஸ்எஸ்ஐ ரமேஷ், ''வயசுக்கு தகுந்த மாதிரி பேசுங்க,'' என்றார். மீண்டும் கோபம் அடைந்த அர்ஜூனன், ''செருப்பு பிஞ்சிடும்... வயசுக்கு தகுந்தா மாதிரி பேசணுமாம்... மறுபடி மறுபடி இறங்கி வந்தேன்... செருப்பு பிஞ்சிடும்... பரதேசி பயலுங்களா... பிச்சைக்கார....,'' என்று திட்டியவாறே காரில் ஏறி அமர்ந்தார்.

அப்போது எஸ்எஸ்ஐ ரமேஷ், ''அதைவிட பிச்சைக்காரன் நீதான்,'' எனக்கூற, காரில் இருந்து ஆவேசமாக இறங்கி வந்த அவர், ரமேஷை நெஞ்சில் தாக்கினார். பதிலுக்கு அவரும், அர்ஜூனனை நெஞ்சில் கைவைத்து தள்ளி விட்டார். நிலை தடுமாறி சில அடி தூரம் பின்னோக்கிச் சென்ற அர்ஜூனன், அவிழ்ந்த வேட்டியை சரிசெய்தபடியே மீண்டும் பாய்ந்து வந்து ரமேஷை செருப்பு காலால் எட்டி உதைத்தார். அதற்குள் அந்த இடமே களேபரமாக மாற, உடன் இருந்த மற்ற காவலர்கள், சார்... சார்... விடுங்க சார்... என்று இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர். இதையடுத்து அர்ஜூனன், காரில் ஏறி வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

இத்தனைக்கும் அர்ஜூனனும் காவல்துறையில் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர்தான். பணியை ராஜினாமா செய்து விட்டு அரசியலுக்குள் நுழைந்தவர். அப்படியிருந்தும் அவரே காவல்துறையினரிடம் கைகலப்பு வரை சென்றது, அவர் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

 

Former MP who kicked the policemen



இது தொடர்பாக நாம் அர்ஜூனனிடம் திங்களன்று (ஜூன் 29) பேசினோம்.

“ஓமலூர் சுங்கச்சாவடியில் கான்ஸ்டபிள்கூட இருந்த மற்ற போலீஸ் டீம் சுங்கச்சாவடி அருகே பிளாட்பாரத்தில் கும்பலாக இருதனர். இந்த கான்ஸ்டபுள் கூட ரெண்டு எடுபிடிகளும் என்னை விசாரித்தனர். டெய்லியும்தான் நான் தோட்டத்துக்குப் போய்ட்டு வர்றேன். வாகனத் தணிக்கையின்போது நான், தோட்டத்தில் இருந்து வருகிறேன். இப்போது சேலத்துக்குப் போறேன். நான் ஒரு முன்னாள் எம்பி, முன்னாள் எம்எல்ஏ என்றெல்லாம் சொன்னேன். அடையாள அட்டை கேட்டனர். வீட்டில் இருப்பதாகச் சொன்னேன்.


 

former mp

 

எக்ஸ் எம்பி, எக்ஸ் எம்எல்ஏ என்று நாங்கள் எப்படி நம்புவது என்றனர். வண்டி பதிவெண் சேலத்துக்குரியது. நான் யார் என்பதற்கெல்லாம் சத்தியமா பண்ண முடியும்? அதுக்கோசரம் என்ன பண்ணச்சொல்ற என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், போலீஸ் ஸ்டேஷன் வந்து பதில் சொல்லிவிட்டுப் போங்கனு சொல்லவும் எனக்கும் எரிச்சல் ஆகிப்போச்சு. என்னால் அவ்வளவு தூரம்லாம் நடக்க முடியாது. உங்க ஆபீசர வேணும்னா வந்து விசாரிச்சுட்டு போங்கனு சொன்னேன். அங்கே இருந்த எடுபுடி ஒருத்தரு என்னை காரை விட்டு இறங்கச் சொன்னார். அதற்கு நான் இறங்க முடியாதுனு சொன்னேன்.

எஸ்எஸ்ஐ ரமேஷ் வேகமாக வந்து, யார்ரா அவன் ஆர்கியூ பண்ணிக்கிட்டு இருக்கான். இறங்குடா கீழேனு சொல்லிட்டு வந்தான். என்னய்யா வேண்டும்... இறங்கிட்டேன்... என்ன பண்ணனுமோ பண்ணுனு சொன்னேன். அதுக்குள்ள பிளாட்பாரத்துல இருந்த போலீஸ்லாம் வந்துட்டாங்க. எடுபுடி போலீஸ்காரங்க ரெண்டுபேரு என் நெஞ்சுமேல கைய வச்சு கீழே தள்ளிப்புட்டான். அதுல என் வேட்டி அவிழ்ந்து போச்சு. மண்டி போட்டு எழுந்து வந்தேன். வயசாகிப்போச்சு. அதுக்கு மேல தம்மு  இல்ல. வண்டி ஏறலாம்னு பாத்தா எஸ்எஸ்ஐ விட மாட்டேங்கறானே.

ஏண்டா ரெண்டுபேர கொன்னுப்புட்டீங்க பத்தலயா. பிச்சைக்கார நாயிங்கனு திட்டிப்புட்டு கிளம்பி வந்துட்டேன். நடந்த சம்பவத்துல பாதி எடிட் பண்ணிட்டுதான் காவல்துறை வீடியோவா போட்டுருங்க்காங்க. இங்கேனு இல்லை. போலீசாருடைய அட்ராசிட்டி அதிகமாயிடுச்சு. முதல்மந்திரி பேரைச் சொன்னாலும்கூட யாரும் கண்டுக்க மாட்டேன்கிறார்கள்,'' என்றார் அர்ஜூனன்.

இதுபற்றி எஸ்எஸ்ஐ ரமேஷிடம் கேட்டோம். ''சம்பவத்தின்போது, கடலூரைச் சேர்ந்த நான்கு பட்டாலியன் போலீசார் உள்பட 11 பேர் பணியில் இருந்தோம். கடலூரை சேர்ந்த காவலர்கள்தான் அவருடைய வாகனத்தை சோதனை நடத்தி, ஆவணங்களைக் கேட்டனர். எங்களுக்கும் அவர் முன்னாள் எம்.பி. என்ற விவரம் எல்லாம் தெரியவில்லை. அவர்தான் மரியாதைக் குறைவாகத்தான் பேசினார். அதனால்தான் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துவிட்டது,'' என்றார்.

இச்சம்பவம் குறித்து சேலம் மாநகர காவல்துறையினர் அர்ஜூனன் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை.

அதிமுக எம்எல்ஏ வெங்கடாசலத்திடம் கேட்டபோது, ''அர்ஜூனன், மூத்த அரசியல்வாதி. தற்போது அதிமுகவில்தான் இருக்கிறார். ஆனால் கட்சியில் அவருடைய செயல்பாடு எதுவும் இல்லை. ஒதுங்கி இருக்கிறார். எல்லாம் கெட்ட நேரம்தான் சார்...,'' என்றார்.

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் காவல் மரணங்களால் ஒட்டுமொத்த தமிழகமும் காவல்துறையினரை புரட்டி எடுத்து வரும் நிலையில், சேலத்தில் காவல்துறையினரை முன்னாள் எம்பி எட்டி உதைத்த சம்பவம் மேலும் பரபரப்பை கூட்டியிருக்கிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.