Skip to main content

எங்களுக்கும் போலீஸ்ல தெரிஞ்சவங்க இருக்காங்க... காசிக்கு ஸ்கெட்ச் போடும் முக்கியப் புள்ளிகள்... விசாரணையில் வெளிவந்த தகவல்!

Published on 26/06/2020 | Edited on 26/06/2020

 

suji

 

இந்த விசயத்தில் என் கூட இருந்திட்டு இப்பம் என்னையே அழிக்க நினைக்கும் அவர்களையும் காட்டி கொடுப்பேன்னு சிறைக்குள்ளேயிருந்து உறவினர்களிடம் கூறிய காசியின் ஆவேசத்தால் அவனின் வி.ஐ.பி. கூட்டாளிகளுக்கு கலக்கத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

 

ஏற்கனவே காசி விசயத்தில் லோக்கல் போலீசின் விசாரணையில் இருந்து தப்பித்த அவனின் நெருங்கிய வி.ஐ.பி. கூட்டாளிகள் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. கைக்குச் சென்றதும் இதில் அந்தக் கூட்டாளிகள் சிக்குவார்கள் என்று பலரும் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்த நிலையில்தான் காசியை அடுத்து கைது செய்யப்பட்ட அவனின் நண்பன் டைசன் ஜினோவையும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் பாளையங்கோட்டை சிறையில் இருந்து கடந்த 15-ஆம் தேதி 5 நாட்கள் கஸ்டடி எடுத்து விசாரித்தனர்.

 

இந்த விசாரணையில் காசியிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் அவனின் கூட்டாளிகள் குறித்து எந்தக் கேள்வியும் கேட்கப்படவில்லையென்றும் மேலும் அவனை 18-ஆம் தேதி இரவு வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே லோக்கல் போலீசார் கைப்பற்றாத, நாகர்கோவில் வி.ஐ.பி. குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் காசிக்கு வாங்கிக் கொடுத்த விலை உயர்ந்த வாட்ச் ஒன்றை கைப்பற்றினார்கள். இதைத் தவிர காசியின் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.

 

காசியை சிறைக்குள்ளேயே தீர்த்துக்கட்ட சதி நடப்பதாக அவனது உறவினர்களிடம் பதட்டம் தெரிகிறது. காசியின் தந்தை தங்க பாண்டியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை நாடியிருக்கிறார். கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக தனது மகன் மீது பொய்ப் புகாரில் குண்டாஸ் போட்டிருப்பதை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

 

suji

 

காசியின் உறவினர்கள் சிலரிடம் நாம் பேசிய போது... "காவல் துறையும் சி.பி.சி.ஐ.டி.-யும் காசிக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதைவிட அவனோடு சேர்ந்து எல்லாச் செயல்களிலும் ஈடுபட்டவர்களைக் காப்பாற்றுவதில் தான் அக்கறை எடுத்துள்ளது. இதில் அவனுங்கள காசி காட்டி கொடுத்தாலும் போலீஸ் காட்டி கொடுக்காது. பெரிய இடத்து ஆட்களின் மானம் போயிடும்.

 

எங்களுக்கும் போலீஸ்ல தெரிஞ்சவங்க இருக்காங்க. அவங்க அரசல் புரசலாக ஒரு தகவலைச் சொல்லுறாங்க குண்டாஸ்னால குறைஞ்சது 10 மாசமாவது ஜெயில்ல இருக்கணும் அந்த நேரத்துல ரவுடிகளை வச்சி உள்ளேயே அவன தீர்த்துக் கட்டவும் வாய்ப்பு இருக்கு. அதனால குண்டாஸை உடைச்சி அவன வெளியே கொண்டு வாங்கனு சொல்லுறாங்க என்கிறார்கள் அதிர்ச்சி விலகாமல்.

 

இந்தச் சம்பவம் பற்றி உளவுத்துறை நண்பர் ஒருவரிடம் பேசினோம். “காசியின் உறவினர்கள் சந்தேகப்படுறது உண்மைதான். காசியின் கூட்டாளிகளில் முக்கியமான ஒன்றிரண்டு பேரை காப்பாற்றுவதற்கும் அதேபோல் பாதிக்கப்பட்ட ஒன்றிரண்டு விஐபி குடும்பப் பெண்களையும் காட்டிக் கொடுத்து விடக்கூடாது என்பதால் டி.ஜி.பி. அந்தஸ்தில் இருக்கும் ஒருவரின் உதவியை நாடியிருக்கிறார்கள்.

 

மேலும் காசி யாரை காட்டிக்கொடுப்பான் என நினைக்கிறானோ அவனுங்க பிரபல ரவுடிகளின் நட்பில் இருப்பவர்கள். நாகர்கோவில் சிறைக்குள் புகுந்து ரவுடி லிங்கத்தை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்ததை யாரும் மறக்க முடியாது. அதனால் பயமா இருக்கு. என்கவுண்ட்டர் வரைக்கும் போகலாம். குண்டாஸ் குற்றவாளிகளை நாகர்கோவில் சிறையில் அடைக்க முடியாது பாளையங்கோட்டையில்தான் அடைக்க வேண்டும் ஆனால் காசியை சி.பி.சி.ஐ.டி. விசாரணை முடிந்து 19-ஆம் தேதி நாகர்கோவில் சிறையில் அடைத்து இருக்கிறார்கள். இதுவும் அவனின் உறவினர்களுக்குச் சந்தேகத்தை எழுப்பியிருக்கும்.

 

http://onelink.to/nknapp

 

காசியின் வழக்கை பொறுத்தவரை போலீசுக்கு எந்தவித தலைவலியையும் ஏற்படுத்தாத ரீதியில் கொண்டு செல்லணும்னு நினைக்கிறாங்க. இந்த நிலையிலதான் காசிமீது போட்ட குண்டாஸ் பொய்ப் புகார்னு அப்பன்காரரும் கோர்ட்டுக்குப் போய் இருக்கார். மேலும் பாலியல் சம்பவம்னாலே பலரும் பல ரீதியில் போலீஸ்மீது சந்தேகம் வச்சி பேசுறாங்க. புகார் கொடுத்தவங்ககூட போலீசுக்கு சரியான ஒத்துழைப்பும் கொடுக்கல. இதெல்லாம் போலீசுக்கு ஒரு விதத்தில் நெருக்கடிய கொடுக்குது" என்றார்.

 

காசியின் வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசைவிட அவனின் கூட்டாளிகளும் பாதிக்கப்பட்ட வி.ஐ.பி. குடும்பத்தினரும் வேகமாக உள்ளனர்.