Skip to main content

நம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக அறிவித்த அமித்ஷா, மோடி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்! 

Published on 20/02/2020 | Edited on 20/02/2020

மத்திய மோடி அரசு நிறைவேற்றிய குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தேசம் முழுவதும் முஸ்லிம்களின் போராட்டம் வலுத்து வருகிறது. முஸ்லிம் பெண்களும் குழந்தைகளும் மட்டுமே டெல்லி ஷாஹின்பாக் பகுதியில் கடந்த 60 நாட்களாக தொடர்ந்து நடத்திவரும் போராட்டம் வலிமையடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும் ஒரு ஷாஹின்பாக்காக உருவாகியிருக்கிறது வண்ணாரப்பேட்டை.
 

admk



போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய தடியடி குறித்தும், தேசிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் பிரச்சனைகளை எழுப்பும் என்பதை அறிந்து, உள்துறை செயலாளர் பிரபாகர், டி.ஜி.பி. திரிபாதி, உளவுத் துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட உயரதிகாரிகளிடம் தீவிர ஆலோசனை நடத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதனையடுத்து முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் பலரையும் அழைத்து விவாதித்தார் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன். இதனைத் தொடர்ந்து காவல்துறை உயரதிகாரிகள் தயாரித்த நீண்ட நெடிய ஒரு அறிக்கை எடப்பாடியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
 

admk



எடப்பாடி எதிர்பார்த்தது போலவே வண்ணாரப் பேட்டை போராட்டம், தேசிய குடியுரிமைச் சட்டம் குறித்து விவாதிக்கவும் தீர்மானம் நிறைவேற்றவும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும், அ.தி.மு.க. கூட்டணியிலுள்ள எம்.எல்.ஏ. தமீமுன் அன்சாரியும் சட்ட மன்றத்தில் பிரச்சனையை எழுப்பினர். ஆனால், வண்ணாரப்பேட்டை போராட்டம் குறித்து பேச அனுமதி தந்த சபாநாயகர் தனபால், குடியுரிமைச் சட்டம் குறித்து விவாதிக்கவோ தீர்மானம் நிறைவேற்றவோ அனுமதிக்க மறுத்துவிட்டார். இந்தச் சூழலில், வண்ணாரப் பேட்டை போராட்டம் குறித்து எடப்பாடி விளக்கமளிக்க, அதில் திருப்தியில்லை என சொல்லி சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தார் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின். தி.மு.க. கூட்டணிக் கட்சிகளும் வெளியேறின. அதேபோல, எடப்பாடியின் விளக்கத்தை முஸ்லிம் கட்சிகளும் அமைப்புகளும் ஏற்க மறுத்ததால் போராட்டங்கள் பல இடங்களிலும் வலிமையடைந்து வருகிறது.


14-ந் தேதி வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் நடந்த விரும்பத்தகாத சம்பவங்களையடுத்து கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை அழைத்து விவாதித்தார் எடப்பாடி. அப்போது போராட் டத்தில் நடந்தவற்றை விவரித்த கமிஷனரிடம், "போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துங்கள்' என உத்தரவிட்டார் எடப்பாடி.

இதனைத் தொடர்ந்து, ஜமாத் உலமா சபை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, த.மு.மு.க., பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இண்டியா, எஸ்.டி.பி.ஐ., பள்ளிவாசல்கள் கூட்டமைப்பு, ஐ.என்.டி.கே., ஜமாத் இஸ்லாமிக் உள்ளிட்ட முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களையும் முக்கிய பிரதிநிதிகளையும் அழைத்து விவாதித்தார் கமிஷனர் விஸ்வநாதன்.

அந்த விவாதத்தில், "முஸ்லிம்களின் போராட்டம் எதுவாக இருந்தாலும் அதற்கு தடையின்றி அனுமதி தந்து வருகிறது போலீஸ். மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடுகிறீர்கள். உங்களுக்கு எந்த பிரச்சனையும் போலீஸாரால் வந்ததில்லை. ஆனால், வண்ணாரப் பேட்டை போராட்டத்தில் போராட்டக்காரர்கள் தரப்பிலிருந்து பாட்டில்களும் கற்களும் வீசப்பட்ட நிலையிலும் போலீஸார் ஆவேசம் காட்டவில்லை. போலீஸார் ஏற்படுத்திய தடுப்புகளை உடைத்தெறிந்து போராட்டத்திலிருந்தவர்கள் முன்னேற நினைத்தபோதுதான் அவர்களை போலீஸார் தடுத்தனர். இதனை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என இயல்பாக பேசினார் கமிஷனர்.


அப்போது, பேசிய முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் ஒரே குரலில் பல விசயங்களை வலியுறுத்தினர். அந்த ஆலோசனை குறித்து, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவிடம் நாம் விசாரித்தபோது, ‘மக்களுக்கு இருக்கும் ஒரே உரிமை தேசிய குடியுரிமைதான். அதையும் பறிக்கிற விதத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட்டதில் இருக்கும் சந்தேகங்கள் பற்றி அழுத்தமான அச்சம் மக்களிடம் இருக்கிறது. அந்த அச்சம் நியாயமானது. காரணம், அசாமில் நடந்தது எல்லோருக்கும் தெரிந்ததுதானே. அதை இந்தியா முழுக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா அமல்படுத்த நினைக்கிறார். இப்படியான சூழலில் தான், போராட்டங்களுக்கு தன்னெழுச்சியாகத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் மக்கள்.

டெல்லி ஷாஹின்பாக்கில் 60 நாட்களாக போராட்டம் நடக்கிறது. இந்தியாவில் 303 இடங் களிலும், அதில் 147 இடங்களில் ஷாஹின்பாக் போல இடைவிடாமலும் போராட்டங்கள் நடக்கின்றன. அப்படியிருக்கும்போது சென்னையில் மட்டும் ஏன் அனுமதிக்க மறுக்கிறீர்கள்?

ஒரு போராட்ட களத்தை தந்திருந்தால் வண்ணாரப்பேட்டை வன்முறை வந்திருக்காது. அதற்கு மாறாக, மக்கள் மீது மோசமாக தாக்கு தலை பிரயோகித்திருக்கிறார்கள். சென்னையை கலவர பூமியாக்கிவிட்டீர்கள். இதெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என எல்லோரும் ஒருமித்த குரலில் கேட்டோம்.

அதற்கு, "உங்களின் உணர்வுகளையும் நியாயங்களையும் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த போராட்டத்தை எப்போது முடித்துக்கொள்வதாக இருக்கிறீர்கள்?' என கமிஷனர் கேள்வி கேட்க, "போராட்டம் முடிவது அரசு கையில்தான் இருக்கிறது. ஏற்கனவே கடந்த ஜனவரி 10-ந்தேதி முதல்வரை சந்தித்து பிரச்சனையின் வீரியத்தை விரிவாக விவரித்திருக்கிறோம். அப்போதே இதில் சீரியஸ் காட்டியிருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை.

கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்கள் இதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றன. தமிழக அரசு மறுக்கிறது. குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தும் வகையில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றணும், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை நிறுத்தணும். இதெல்லாம் நடந்தால்தான் போராட்டம் ஒரு முடிவுக்கு வரும். இல்லையெனில் மக்களை அமைதிப்படுத்த யாராலும் முடியாது' என எல்லோருமே வலியுறுத்தினோம். இதனை உன்னிப்பாக கவனித்த கமிஷனர், "உங்களின் உணர்வுகளை முதல்வரிடம் தெரிவிக்கிறேன்' என்பதோடு முடித்துக்கொண்டார்'' என்கிறார் ஜவாஹிருல்லா.

இந்த நிலையில் காவல்துறை உயரதிகாரிகளுடன் எடப்பாடி நடத்திய ஆலோசனை குறித்து விசாரித்தபோது, "நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தை வாபஸ் பெற முடியாது என பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், இது குறித்து மேற்கொண்டு விவாதிக்கவே முடியாது. அந்த சட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் நாம் வாக்களித்திருப்பதால் எதிர்க்கவும் முடியவில்லை'' என எடப்பாடி சொல்ல, "குடியுரிமைச் சட்டம் மட்டுமே அவர்களுக்கு பிரச்சனை இல்லை. அந்த சட்டத்தின் ஒரு பகுதியாக குடிமக்கள் பதிவேடு திட்டத்தையும் செயல்படுத்த நாம் துவங்குவதால்தான் பிரச்சினை' என அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள்.

அப்போது, "இதுகுறித்து தெளிவான விளக்கம் கொடுக்குமாறு மத்திய அரசிடம் கேட்டிருக்கிறோம். அது வந்ததும் தெளிவுபடுத்தலாம். எது எப்படி இருப்பினும், சட்டம்- ஒழுங்குக்கு பிரச்சினை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். எப்போது, எதில் நான் சறுக்குவேன் என தி.மு.க. எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அதற்கு இடம் கொடுத்துவிடாதீர்கள்' என அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய எடப்பாடி, "குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானமெல்லாம் நிறைவேற்ற முடியாது. என்ன செய்யலாம் என மீண்டும் விவாதிப்போம். வண்ணாரப்பேட்டையில் நடந்தது குறித்து முழுமையான ரிப்போர்ட் கொடுங்கள்' என கேட்டு வாங்கி, அந்த ரிப்போர்ட்டைத்தான் பேரவையில் வாசித்தார் எடப்பாடி'' என்கின்றன உளவுத்துறை வட்டாரங்கள்.

மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக தன்னை மாற்றிக்கொள்ள எடப்பாடி தயாராக இல்லாத நிலையில், முஸ்லிம்களின் போராட்டமும் வீரியமடைந்து வருகின்றது. அதேசமயம், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் சட்டம்- ஒழுங்கிற்கும் பிரச்சினை உருவானால் தயவுதாட்சண்யமில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வழிகளை ஆராயுங்கள் என டெல்லியிலிருந்து வந்த உத்தரவை காவல்துறை அதிகாரிகளுக்கு பாஸ் செய்திருக்கிறது எடப்பாடி அரசு.

 

 

The Newstuff