கேட்க கேட்க தூண்டுகிறது அந்த தமிழச்சியின் நாட்டுப் புறகானம். காடு மேடுகளில் பாடித் திரிந்த பூர்வகுடி தமிழச்சியை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்திருக்கிறது கேரள திரையுலகம்.
வயநாடு அருகே உள்ள அட்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்த நஞ்சம்மாள் என்ற 60 வயது மூதாட்டியின் குரல், அந்தப் பகுதி முழுவதும் பிரபலம்.
மலைவாழ் இனத்தைச் சேர்ந்த நஞ்சம்மாள் ஆடு மேய்த்துக் கொண்டே பாடும் பாடலுக்கு அட்டப்பாடி கிராமமே மயங்கிக் கிடந்த நிலையில், பூர்வகுடி தமிழச்சியின் குரல் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல மலையாள நடிகர் பிரிதிவிராஜ், பிஜூமேனன் நடித்த 'அய்யப்பனும் கோஷியும்' என்ற படத்தில் நஞ்சம்மாளை பாட வைத்துள்ளனர். எந்த படத்திற்காக பாடுகிறோம் என்று தெரியாமல் நஞ்சம்மாள் பாடிய பாடல், அந்த படத்தில் டைட்டில் சாங்காக இடம் பெற்றுள்ளது. 'களக்காத்த சந்தனமேரம்...' என்ற இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் ஹிட் அடித்துள்ளது.
கிராமத்திற்கு உரிய வாஞ்சாய் நஞ்சம்மாள் பாட, அவர் இயல்பாய் ஆடு மேய்க்கும் காட்சிகளை படக்குழு படமாக்கி வெளியிட, இணையதளத்தில் பெரும் ரசிகர் கூட்டத்தை ஈர்த்துள்ளது.
கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக காடு மேடுகளில் பாடி வரும் நஞ்சம்மாவிற்கு திடீர் என படத்தில் பாட கிடைத்த வாய்ப்பு, உறவினர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
பாடலின் வரிகள், பாடலின் இசை, பாடிய நஞ்சம்மாளின் அப்பாவித்தனம் என அனைத்தும் சேர்ந்ததால்தான் ‘களக்காத்த சந்தனமேரம்’ பாடல் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.