
எங்கோ நடப்பதாக நாம் கேள்விப்பட்டுக்கொண்டிருந்த 'ப்ளூ வேல்' மரணங்கள், இந்தியாவுக்கும், ஏன் தமிழகத்துக்கும் வந்துவிட்டன. மதுரையிலும் புதுச்சேரியிலும் மாணவர்கள் 'ப்ளூ வேல்' விளையாட்டால் மரணமடைந்தார்களோ என்று சந்தேகப்படும்படி தற்கொலை செய்திருக்கிறார்கள். உலகெங்கும் "ப்ளூ வேல்" இந்த விளையாட்டை ஆன்லைனில் விளையாடி நூறுக்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். இந்த விளையாட்டு 'பிலிப் புட்கின்' என்ற 22 வயது இளைஞரால் கண்டுபிடிக்கபட்டது. மக்களைக் கொல்லவே இந்த விளையாட்டினை கண்டுபிடித்தேன் என்றும் கூறியுள்ளார். இவரைக் கைது செய்துவிட்டனர், இருந்தாலும் கூட உலகம் முழுவதும் பரவி எல்லோரிடமும் அச்சுருத்தலை ஏற்படுத்தி வருகிறது "ப்ளூ வேல்".
இதனை விளையாடுபவர்களின் மனதைச் சிதைத்து, அவர்கள் கையாலேயே அவர்களை சித்திரவதை செய்ய வைத்து, நம் மனநிலையை மாற்றி, கடைசியில் இதனை விளையாடும் நபர்களை தற்கொலை செய்து கொள்ளும்படி உத்தரவு வருகிறது. இப்படிப்பட்ட விளையாட்டினை நாம் விளையாடுவதற்கான காரணம், இந்த கணிணிமயமான உலகில் நாம் தனிமையில் இருப்பதே. "இதில் மாட்டிக்கொள்ள வேண்டாம்" என்று மன தத்துவ மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதுவரை நாம் பார்த்தது தொழில்நுட்பம் கெட்டவர்கள் கையில் கிடைத்தால் அது எவ்வாறு கெடுதல் உண்டாக்கும் என்பதை. இரட்டையர்கள் தோற்றத்தில் ஒற்றுமைப்பட்டு, குணத்தில் வேறுபட்டு இருப்பர். இவ்வாறுதான் இந்த வேல் என்னும் ஆன்லைன் விளையாட்டு வரிசையில் முதலில் தோன்றிய "ப்ளூ வேல்" என்னும் விளையாட்டு மக்களை துன்பப்படுத்தவும், கொல்லவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இதேபோல் "பிங்க் வேல்" என்னும் இன்னொரு விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்களிடம் அன்பைப் பரப்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பிரேசில் நாட்டை சேர்ந்தவர் உருவாக்கியுள்ளார். தொழில்நுட்பங்களை வைத்து உலகில் அன்பையும் பரப்பரலாம் என்று நிரூபிப்பதே இவரின் முக்கிய குறிக்கோள் ஆகும்.
அந்த "ப்ளூ வேல்" விளையாட்டை போன்று இதிலும் உத்தரவு வருகிறது ஆனால் இதில் அது சற்று வித்தியாசமாக வருகிறது. உங்களை பற்றி நல்லவிதமாக மார்க்கரை வைத்து எழுதுங்கள், தாத்தா பாட்டியிடம் பேசுங்கள், கண்ணாடியின் முன் நின்று நல்ல விதமாக பாராட்டிக்கொள்ளுங்கள், கடைசியில் மற்றொரு உயிரை காப்பாற்றுதல் என்று அன்பு கட்டளைகளுடன் முடிகிறது. இது முழுக்க முழுக்க அன்பால் பின்னப்பட்டே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டை ஆண்டிராய்டு, ஐஓஎஸ் கைப்பேசிகளில் தரவிறக்கம் செய்யலாம்.

நிஜ வாழ்க்கையை, உறவுகளைவிட்டு கைபேசியில் வாழ்ந்து வருவதுதான் இது போன்ற அச்சுறுத்தல்களெல்லாம் உருவாகக் காரணம். தொழில்நுட்பத்தால் நல்லவையும் உண்டு தீயவையும் உண்டு. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, இந்த இரண்டு விளையாட்டுகள் தான்.தொழில்நுட்பம் நல்லவர்கள் கையில் இருக்கும்வரை நலமே!
சந்தோஷ்