சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் 90வது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் தனக்கும் ஆசிரியருக்குமான உறவு குறித்து மிக உணர்ச்சிகரமாக உரையாற்றினார். இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, " இன்றைக்கு ஆசிரியர் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறோம். இந்த அனைத்து கொண்டாட்டங்களுக்கும் அவர் தகுதியான நபர். இந்த தமிழ்ச் சமூகத்துக்கு அவர் ஆற்றிய தொண்டு என்பது ஒரு சில மணி நேரத்தில் கூறி முடிக்கக்கூடியது அல்ல.
தமிழகத்தில் நடைபெற்ற பல இக்கட்டான நிகழ்வுகளில் பங்கெடுத்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர் இந்த கருப்பு சட்டைக்காரர். குறிப்பாக எமர்ஜென்சி காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் இவரின் பங்களிப்பு என்பது இன்றியமையாத ஒன்றாக இருந்து. குறிப்பாக அந்த காலகட்டத்தில் இவர் ஆரம்பத்திலேயே கைது செய்யப்பட்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு நான் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டோம். நாங்கள் சிறையில் அடைக்கப்பட்ட சில நாட்களிலேயே எங்கள் மீது தாக்குதல்கள் நடத்த ஆரம்பித்தார்கள். குறிப்பாக என்னைக் குண்டாந்தடிகள் கொண்டு தாக்கினார்கள். அடிகள் ஒவ்வொன்றும் எப்படி இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
அது மிகக் கடுமையான தாக்குதல்களாக இருந்தது. இப்போது இருப்பதைப் போல் கூட அப்போது நான் இருக்கமாட்டேன். மிக ஒல்லியாக மெலிந்த தேகமாகவே இருந்தேன். அவர்களின் தாக்குதலைத் தாங்கும் அளவுக்குக் கூட அப்போது என்னிடம் உடல் பளு இருக்காது. அந்த நேரத்தில் சிறையில் என் மீது விழுந்த அடிகளைத் தாங்கிக்கொண்டவர் ஒருவர் சிட்டிபாபு. மற்றொருவர் நம்முடைய ஆசிரியர். என் மீது விழுந்த அடிகளை தான் வாங்கிக்கொண்டு என் உயிரைக் காப்பாற்றியவர் அவர். தற்போது கூட எங்களின் அரசியல் எதிரிகள் எங்களைத் தாக்கும்போது எங்களுக்கு முன் அதனைத் தடுத்து நிறுத்தி எங்களைக் காக்கும் கேடயமாக இருப்பவர் ஆசிரியர் அவர்கள். இதனை திமுகவைச் சேர்ந்த அனைவரும் அறிவர். அதிலே இருவேறு மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
தினந்தோறும் அவர் விடுகின்ற அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் எடுக்கின்ற முடிவுகளைத் தீர்மானிக்கின்றோம். ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாகவே அவர் இத்தனை ஆண்டுக்காலம் இருந்து வந்துள்ளார். பத்து வயதில் கூட்டத்திலே பேச ஆரம்பித்த அவர் அண்ணாவால் மேடையிலேயே பாராட்டைப் பெற்றவர். அத்தகைய பேச்சாற்றல் கொண்டவர். அவரை தனித் தனியாகப் புகழ வேண்டும் என்று சொன்னால் இந்த நாள் மட்டும் பத்தாது. பேசிக்கொண்டே போனால் அடுத்த நாளே வந்துவிடும். அந்த அளவுக்குத் தனிச்சிறப்புகள் பலவற்றை தன்னகத்தே கொண்டவர்.
இத்தகைய சிறப்புக்களைக் கொண்ட அவரை நாங்கள் வாழ்த்துவது என்பது ஏதோ அவருக்கு நாங்கள் சேர்க்கின்ற புகழோ அல்ல. அவரை வாழ்த்துவதே எங்களுக்கு நாங்கள் தீட்டிக்கொள்கின்ற புகழாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த தமிழ்ச் சமூகத்திற்கு அளவில்லாத உழைப்பைக் கொடுத்துள்ளார். குறிப்பாக பெரியாரின் பேரன்பைப் பெற்றவராக அவர் இறக்கும் வரையில் தொடர்ந்து இருந்து வந்துள்ளார். அவரிடம் தொடர்ந்து நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பது மிகக் கடினமான காரியம். ஆனால் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து அதையும் அவர் சாதித்துள்ளார். எனவே இவர் இன்று 90வது பிறந்தநாளைக் கொண்டாடுவது மட்டுமல்ல, நூறாவது பிறந்த நாளையும் இவர் கொண்டாட வேண்டும் அதனை இந்த தமிழ்ச் சமூகம் பார்க்க வேண்டும் என்று இந்த நேரத்தில் கூறி மகிழ்கிறேன்" என்றார்.