தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்துக்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அரசியல் களச் செயற்பாட்டாளர் சங்கத்தமிழன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
திருமாவளவன் அவர்கள் உடல்நலம் குறித்து சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினும், எடப்பாடியும் கூட விசாரித்தார். இதனை அரசியல் நோக்குடன் பார்க்கத் தேவையில்லை. ஏனென்றால், திருமாவளவன் அரசியலைக் கடந்து நட்பு வைத்துள்ளவர். அதிமுக குறித்து எங்கள் தலைவர் அக்கறை காட்டக் காரணம், அவர்கள் பா.ம.க., பா.ஜ.க. போன்ற கட்சிகளை உடன் வைத்திருப்பதால் அதில் இருந்து வெளிவர பலமுறை கூறியுள்ளார். விசிகவும் இவர்கள் இருவரும் இருக்கும் கூட்டணியில் இடம் பெறாது எனவும் முன்பே அறிவித்திருந்தோம். ஏனென்றால், பாஜக எவ்வாறு மாநிலக் கட்சிகளின் முதுகில் பயணம் செய்து பின் அதன் தலையை வெட்டும் என்பதை மும்பை(ஏக்நாத் ஷிண்டே) விவகாரத்தில் பார்த்தோம். இந்த நிலையில் அ.தி.மு.க. தனது கூட்டணியை முறித்து தான் ஒரு புரட்சித் தமிழன் என நிலைநாட்டி விட்டார் எடப்பாடி. தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் சமூகநீதி என்ற ஒரே கருத்தியலை பேசும் கட்சி என்பதால். பாஜக போன்ற சுமையை அதிமுக சுமக்க வேண்டுமா? என்பது எங்களின் நிலைப்பாடாக இருந்தது.
அண்ணாமலை ஐ.டி. ரெயிடுகள் வரும் என சொன்னது உள்பட பல பிரச்சனைகள் இருக்கும் நிலையிலும், அதிலும், பா.ஜ.க. தேர்தல் ஆணையம் தொடங்கி அமலாக்கத்துறை வரை நெருங்கிய உறவு வைத்திருக்கும் போதும் எடப்பாடி கூட்டணியை முறித்தது பெரிய சமூகநீதி தான். இப்படி சொல்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும் என நினைக்கிறேன். இதற்கு மேல், திருமாவளவன் கண்ட கனவும் இந்த கூட்டணி முறிவால் நிறைவேறிவிட்டது. இத்தனைக்கும் என்.டி.ஏ. கூட்டணியில் அ.தி.மு.க.தான் இரண்டாவது பெரிய கட்சி. இருந்தபோதிலும், இந்தியளவில் பெரும் கூட்டணி உடைப்பை எடப்பாடி ஏற்படுத்தியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அதிமுக, தன்னுடன் இருந்த பா.ம.க., பா.ஜ.க. போன்ற கட்சிகளை நீக்கினாலும், விசிக ஏற்கனவே திமுகவுடன் கூட்டணியில் இருப்பதால், அ.தி.மு.க.வை பரிசீலிக்கவில்லை.
தொடர்ந்து, விசிக கொடியேற்றும் பிரச்சனை குறித்தும் முதல்வரிடம் பேசியுள்ளோம். இனிவரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாது எனவும் நம்புகிறோம். சொல்லப் போனால், திமுக ஆட்சிக் காலத்தில் கூட கொடியேற்றுவதில் சிறிய சிக்கல்கள் இருந்ததுண்டு, ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை. தொடர்ந்து, ஒரு காலத்தில் விசிக - அதிமுக கூட்டணியில் இருந்தது. பின்னர், திருமாவளவன் ஒரு சிறிய முரண் காரணத்தால் வெளியே வந்தார். ஆனால், அதிமுகவிற்கும் எங்களுக்குமான உறவு சுமுகமாகவே இருந்துள்ளது. இவ்வளவு ஏன், ஜெயலலிதாவின் கூட்டணியில் இருந்து வெளியேறுபவர்கள் தன் கால் மயிருக்கு சமானம் எனச் சொன்னவர். மாறாக, திருமாவளவன் வெளியேறுகையில் "அன்புத் தம்பி திருமாவளவன் எங்கிருந்தாலும் வாழட்டும். ஆனால், தம்பிக்கு அரசியலில் அவசரம் கூடாது" என அறிவுறுத்தினார். ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர். நேரடியாக ஆர்.எஸ்.எஸ்.ஐ எதிர்த்தும் உள்ளார். எனவே, சமீபமாக சில வருடங்கள் அதிமுக, சங்கிக் கூட்டத்துடன் சுற்றுவது தான் வருத்தமளித்தது. ஒருவேளை, வருகிற தேர்தலில் சில எம்.பி. சீட்டுகள் வென்று பாஜகவில் இணைவார்களா என்று உறுதியாக கூற முடியவில்லை. தற்போதைக்கு அவர்களை விரட்டிவிட்டது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த கூட்டணி விவகாரத்திற்கு தலைமை தான் முடிவெடுக்கும் என்ற அண்ணாமலை அதன் பிறகு எந்தப் பேட்டியும் கொடுக்கவில்லை. அதேபோல், எந்த ஒரு கட்சி தனது தொண்டனின் கனவுகளை உள்வாங்கி செயல்படுகிறதோ அதன் தலைவர் மாபெரும் தலைவனாக வருவான். தொடர்ந்து, தமிழ்நாட்டில் தி.மு.க.வை விட பெரிய கட்சி என்று பார்த்தால் அது அ.தி.மு.க. தான். தற்போது நடந்து வரும் போஸ்டர் போரில், புலிகேசி என எடப்பாடியை விமர்சித்துள்ளனர். ஆனால், அவர்கள்(அண்ணாமலை) தான் ரசத்திற்கு பயன்படுத்தும் கொட்டை எடுத்த புளி என்பேன். அதிமுகவை பொறுத்தவரை தொண்டனின் முடிவும் கட்சியின் முடிவும் ஒரு சேரத்தான் இருக்கும். ஆனால், பாஜகவில் தலைமை தான் தீர்மானிக்கும். அதேசமயம், இந்த கூட்டணி முறிவிற்கு மோடி அவர்கள் வரை கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இன்றைக்கு அ.தி.மு.க. உடைந்து சிதறியதற்கு காரணமே பாஜக தான். எச். ராஜா, அ.தி.மு.க. நெல்லிக்காய் மூட்டையை தூக்கிச் சுமந்தோம் என்கிறார். நெல்லிக்கனி கூட நிறைய விசயங்களுக்கு உதவும். ஆனால், பாஜக என்பது கள்ளிப் பால் போன்றது. இனிமேல், தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., வி.சி.க. என்ற கட்சிகள் நிலைக்கும். இதனால் பா.ஜ.க.வினர் டெல்லிக்கு சென்று மோடி அவர்களுக்கு பாதுகாப்பாக செல்லவும் வாய்ப்புள்ளது. ஏன், அண்ணாமலையை கூட இந்த கூட்டணி பிரிவு விவகாரத்தில் தலைவர் பதவியில் இருந்து நீக்கவும் செய்யலாம். தற்போது நடந்த கூட்டணி பிரச்சனை பிறகு நடைப்பயணம் கூட நின்றுவிட்டது என சொல்கிறார்கள். அந்தளவு அவர்களின் கதை முடித்து வைக்கப்பட்டுள்ளது.
முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...