Skip to main content

“என் முதல் பரிசு ஒரு ரூபாய்; ஆனால், அதுவும் பறிமுதல் செய்யப்பட்டு விட்டது” தன் வாழ்வின் வழித்தடங்களை பகீரும் எழுத்தாளர் கே.ஜி. ஜவஹர்

Published on 13/01/2022 | Edited on 13/01/2022

 

Writer Jawahar interview

 

எழுத்தாளர், பத்திரிகையாளர், வங்கிப் பணி, இசை என பன்முகம் கொண்டவர் எழுத்தாளர் கே.ஜி. ஜவஹர். தைத் திருநாளை முன்னிட்டு அவரைச் சந்தித்து அவரின் வாழ்க்கை பயணத்தைப் பற்றி பேசினாம். அவர், தனது வாழ்க்கையின் ஸ்வாரசியமான திருப்பங்களையும், வாழ்வின் வழித்தடங்களையும் நம்முடன் பகிர்ந்துக்கொண்டார். 

 

அவர் கூறியதாவது; “தமிழ் வாசகர்களுக்கு என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இனிய நாளில் என் வாழ்வின் அனுபவ பயணத்தை உங்களோடு சேர்ந்து நான் திரும்பிப் பார்க்கிறேன்.

 

'வாழ்க்கையில் நம் வழித்தடத்தை நிர்மாணிப்பது யார்?' என்ற கேள்வி இன்று வரை என்னுள் வியப்பான கேள்வியாகவே இருக்கிறது. யானையின் வழித்தடத்தை மனிதன் மாற்றிவிட்டு அதற்கு பல இன்னல்களை உருவாக்குவது போல் மனிதனின் வாழ்க்கைத்தடத்தை விதி மாற்றிவிட்டு அவனுக்கு பல திருப்பங்களைத் தருகிறதோ என்று தோன்றுகிறது!

 

ஒரு குழந்தையின் அப்பாவிற்கு கண் உபாதை என்று கிளம்பிய போது, ' நானும் வருகிறேன் அப்பா' என்றது குழந்தை. அப்பாவும் கண்மருத்துவரைப் பார்த்து விட்டு திரும்பும்போது, வழியில் அப்பாவின் நண்பர் எதிர்ப்பட்டு நலம் விசாரித்துப் பேசிக் கொண்டிருந்த போது, குழந்தையிடம், "நீ பெரியவளா ஆனா யாரா வருவே?" என்று கேட்டார்.

 

உடனே குழந்தை பட்டென்று, "கண் டாக்டரா வருவேன்" என்றது. அப்பாவும் நண்பரும் மகிழ்ந்தார்கள். சிறிது நேரத்தில் பஸ் வந்தது. பஸ்ஸில் ஏறியதும் அப்பாவின் வேறு ஒரு நண்பர் அதில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த நண்பர் குழந்தையிடம், "நீ பெரியவளா ஆனதும் யாரா வருவே?" என்று கேட்டார். உடனே குழந்தை சற்றும் யோசிக்காமல், "கண் டக்டரா வருவேன்" என்று சொன்னதும் அப்பா அதிர்ந்தார்.

 

சில நிமிடங்களுக்கு முன் "'கண்டாக்டரா வருவேன்' என்று சொன்ன குழந்தை இப்போது கண்டெக்டரா வருவேன்' என்று சொல்லிவிட்டதே? நல்ல தொழிலில் எதற்கும் பாகுபாடு கிடையாது என்றாலும், குழந்தை மனது சூழ்நிலைக்கேற்ப மாறிவிட்டதால்தானே இது?' என்று நினத்துக் கொண்டார்.

 

பிற்காலத்தில் அக்குழந்தை இந்த இரண்டில் எதுவுமே இல்லாமல், ஒரு திரை நட்சத்திரமாக மாறியது. இதிலிருந்து  நாம் அறிந்து கொள்வது ஒருவனின் வாழ்க்கைத்தடம்  அமைவது அவன் கையில் இல்லை என்பதே.

 

பலருக்கு அவர்கள் ஆசைப்பட்ட வாழ்க்கை அமையவில்லை என்பதே உண்மை. பெரிய விஞ்ஞானி ஆக ஆசைப்பட்டவர்கள் தொழிலதிபர்களாகவும், பெரிய தொழிலதிபர் ஆகி, கார் பங்களா என்று இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள், பிற்காலத்தில் ஒரு அரசாங்க குமாஸ்தாவாக, அன்றாட வரவு செலவு பார்த்து அதற்குள் வாழ அவஸ்தைப்பட்டு, அரசு பஸ்களில் பயணம் செய்து கொண்டிருப்பவர்களாகவும் இருப்பதைப் பார்க்கத்தானே செய்கிறோம்? என்னைப் பொறுத்தவரை சிறு வயதிலேயே எழுத்தில் ஒரு ஈர்ப்பு. கதை எழுத வேண்டும், கவிதை எழுத வேண்டும் என்றெல்லாம் ஆசை. இப்போது நினத்தாலும் வியப்பாக இருக்கிறது. என் பதினோறாவது வயதிலேயே கவிதை எழுதினேன்! இரண்டு வரி வந்தது. அதன் பிறகு எழுத வரவில்லை. நிலவைப் பற்றிய கவிதை அது.

"இருளென்னும் கருஞ்சாந்து பூசிவிட்ட வானில்
இரண்டாக உடைத்த ஒரு தேங்காயைப் போல''

அதற்கு மேல் வரவில்லை! அதை வீட்டில் யாரிடமும் காண்பிக்கவில்லை. நண்பர்களிடமும் சொல்லவில்லை. காரணம் என் வயதொதத்த சிறுவர்களுக்கு கவிதை என்றால் என்னவென்றே தெரியாது. சினிமா, எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, வில்லன் வீரப்பாதான் சுவாரசியமான விஷயம்! மேலும் ஏதாவது கவிதை, கதை என்று காண்பித்தால், உடனே என் வீட்டில் வந்து, "ஜவஹர் கவிதைல்லாம் எழுதறான்" என்று கோள் மூட்டி விடுவார்கள். வீட்டில் எல்லோரும் படித்தவர்கள்தான் என்றாலும், அவர்களுக்கு உடனே என் படிப்பும், ப்ராக்ரஸ் கார்டும்தான் நினைவிற்கு வரும். 

 

"பாடத்தைப் படிக்காம கதையா எழுதறே" என்று செம டோஸ் விடுவார்கள். இதற்கெல்லாம் பயந்தே நான் என் ஃபர்ஸ்ட் க்ளாஸ் கற்பனைகளை எல்லாம் நான் படுக்கும் பத்தமடை பாய்க்கு அடியில் பதுக்கி வைத்தேன். தபால் செலவு, ஸ்டாம்ப் செலவு என்பதெல்லாம் கற்பனைக்கு எட்டாத விஷயமாக இருக்கும். அந்த வயதிலேயே கதை எழுதும்போது, "அவனும் அவளும் பார்க்கின் ரகசிய புதருக்குள் உருண்டார்கள். ரோஸி - ஜனா, ஜனா - ரோஸி என்று புரள்வதை எழுதினேன்! இதையெல்லாம் வீட்டில் எப்படி காண்பிப்பது? வீட்டில் பாரதியார் கவிதை, பாரதி தாசன் கவிதைகள், திருக்குறள் போன்றவை மட்டுமே அனுமதி. இப்படி இருக்க என் எழுத்து ஆசைகள் நீறு பூத்த நெருப்பாகவே இருந்தன. கொஞ்சம் பெரியவன் ஆனதும் வீட்டிற்கு தெரியாமல் மாலை முரசுவிற்கு ஜோக் எழுதிப்போட்டேன். 

 

போஸ்ட் கார்டிற்கு என்று காசு கிடைக்காது. கடலை மிட்டாய்க்கு ஷாங்ஷன் ஆகும் பத்து பைசாவை போஸ்ட் கார்டு வாங்க வைத்துக் கொள்வேன். கடலை மிட்டாயை தியாகம் செய்வேன். என் முன்னாடி வந்து என்னைப் பார்த்துக் கொண்டே கடக்முடக் என்று கடலை மிட்டாய் கடிக்கும் தம்பியை ஒரு ஞானிபோல பார்ப்பேன்.

 

என்ன ஆச்சரியம்; வியப்பு! என் ஜோக் பிரசுரமாகி ஒரு ரூபாய் பரிசு. போஸ்ட் மேன், "ஐயா உங்க பையன் ஜவஹருக்கு ஒரு ரூபாய் மணியார்டர் வந்திருக்கு" என்று அப்பாவிடம் சொன்னபோது ஒரே நாளில் ஹீரோவாகிவிட்டேன். ஆனாலும் போஸ்ட்மேன் போனபிறகு, "எல்லாம் சரிதான். பாடத்துல நல்ல மார்க் வாங்குற வழியைப்பாரு" என்றார் முறைத்துக் கொண்டே. அந்த ஒரு ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டு விட்டது.

 

பாளையம் கோட்டை சேவியர் கல்லூரியில் படிக்கும் போது கல்லூரி இதழில் கதைகள் எழுதினேன். பெரிய படைப்புகளை அச்சில் பார்த்து சந்தோஷப் பட்டாலும் பிரபல பத்திரிகைகளில் என் எழுத்துக்களைப் பார்க்க காத்துக் கொண்டு இருந்தேன். எழுத்தாளராக ஆகி பேரும் புகழும் பெறவேண்டும் என்று நினத்தேன். ஆனால் என் எழுத்துத் தடத்தை உடைத்தது பெற்றோரின் ஆசை!

 

ஆம். என்னை எப்படியாவது கலெக்டராக்கி அழகு பார்க்க ஆசைப்பட்டார்கள். பெண்ணிடம் கேட்காமலேயே கல்யாணப்பேச்சை ஆரம்பித்து மாப்பிள்ளையைக் கூட காட்டாமல் மணமேடைக்கே அவளை அழைத்துச் சென்றுவிடும் அந்தக் காலத்து பெற்றோர் போல, என் விருப்ப வெறுப்பு எதுவும் கேட்காமலேயே என்னை டெல்லிக்கு‌ பேக் அப் செய்து விட்டார்கள். அப்போது டெல்லியில்தான் ஐ.ஏ.எஸ். கோச்சிங் சென்டர் இருந்தது. அங்கு என் அண்ணன், வங்கியில் உயர் பதவியில் இருந்தார். அவருடன் தங்கிப் படித்துவந்தேன். சில காலம் சுத்தமாக எழுத்தை மறந்தேன். என் அண்ணனும், "எழுத்துல வருமானம்லாம் வராது. புரிஞ்சுதா. ஒழுங்கா கலெக்டராகி பெரிய ஆளா வர வழியைப் பாரு.." என்று விடாமல் உபதேசித்தார். நானும் "அதுதான் என் வழித்தடம் போல" என்று நினைத்து ஒழுங்காக வகுப்பிற்கு போய் வந்தேன். 

 

ஒரு நாள் மாலை டெல்லியில் பூஜா பார்க் என்று நினைவு. மீண்டும் என் தடம் மாறிய சம்பவம்: கிருபானந்தவாரியார்  சொற்பொழிவு. அதில் பிரபல இசை விமர்சகர் பீக்கில் இருந்த சுப்புடு ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருந்தார். "ஆஹா.. மாட்டிகிச்சு மேட்டர்" என்று பரவசம் அடைந்த மனசில் மெள்ள மீண்டும் துளிர்த்தது எழுத்து ஆசை!  'சுப்புடு ஆர்மோனியம் இசைப்பது பற்றி எந்த பத்ரிகையிலும் மேட்டர் வந்தது இல்லையே" என்று பத்திரிகை மனசு விழித்துக் கொள்ள, உடனே குமுதம் இதழுக்கு மேட்டர் அனுப்ப அது பிரசுரமாகியது. ஒரு புகழ் பெற்ற பத்திரிகையில் மேட்டர் வந்ததில் அளவற்ற சந்தோஷம். என் கலெக்டர் ஆசையை ஓரம் கட்டிவைத்து டெல்லி முழுக்க சுற்றி மேட்டர் எழுதி அனுப்பினேன்.

 

டெல்லியில் பிரபல எழுத்தாளர்கள் தி. ஜானகிராமன், சுஜாதா, கடுகு என்ற அகஸ்தியன், லா.ச.ரங்கராஜன், இந்திரா பார்த்தசாரதி போன்றவர்கள் நண்பர்களானார்கள். ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதினேன். கிடைக்கவில்லை. "மறுபடியும் முயற்சி செய்" என்றார்கள் வீட்டில். மறுத்து விட்டு வங்கியில் சேர்ந்தேன். பம்பாயில் பணி. மறுபடியும் தடம் மாறியது! ஆனால் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டதால் என் எழுத்து ஆசைக்கு உயிர்த் தண்ணீர் ஊற்றிக்கொண்டே இருந்தேன். எந்த சூழ்நிலையிலும் மனதில் உள்ள எழுத்துக் கனல் அணையாமல் பார்த்துக் கொண்டேன்! பம்பாயில் இருந்து கல்கத்தா! அங்கு பணியில் இருந்து கொண்டே எழுத தீர்மானித்தேன். வங்க மொழி தெரியாது. இந்தி தெரியாது. ஆனாலும் சமாளித்து எழுதினேன். கல்கத்தா அழகிகள், அரசியல் வாதிகள், நடிகர்கள் பேட்டி எழுதிக் குவித்தேன். சாவியும், இதயம் பேசுகிறது மணியனும் என் எழுத்துக்களை தொடர்ந்து பிரசுரித்தார்கள். என் பெயர் பிரபலமானதும் மற்ற பத்திரிகைகள் போட்டி போட்டுக் கொண்டு எழுதச் சொல்லின. எழுதினேன். திடீரெனெ கல்கத்தாவில் இருந்து கேரளா கொச்சிக்கு மாற்றம். அப்போதுதான் சாவி எனக்கு முழு ஆதரவு அளித்தார். "உங்க கதைகள் நல்ல வரவேற்பு. பேட்டி கட்டுரையும் அமர்க்களமா பண்றீங்க! வாரா வாரம் இதழ் டம்மியில் உங்களுக்கு இரண்டு பக்கம் ஒதுக்கிடப் போறேன்" என்றவர் "பேசாமல் வங்கி பணியை ரிசைன் பண்ணிட்டு இங்க வந்துருங்க" என்றார். திடுக்கிட்டு மறுத்துவிட்டேன். 

 

கேரளாவில் இருந்து நான் சாவிக்கு எழுதிய கட்டுரைகள் ஏராளம். இந்திரா காந்தியை பேட்டி எடுத்தது, வாஜ்பாயை சந்தித்தது, அத்வானியைப் பார்த்தது எல்லாம் சாவியில்தான்! மீண்டும் பணியிட மாற்றம்! நான் வெகுநாளாக ஆசைப்பட்ட சென்னை. சென்னை வந்த பின்னர்தான் என் எழுத்துத் தடம் அழுத்தமாகப் பதிந்தது. ஜோக் எழுத்தாளர், துணுக்கு எழுத்தாளர், கட்டுரையாளர், கதாசிரியர் என்று குறுகிய காலத்தில் வளர்ச்சி கண்ட என்னை நாவலாசிரியர் ஆக்கியது சென்னை. மாலைமதி, குங்குமச்சிமிழ், பாக்கெட் நாவல், உதயம், தினத்தந்தி தொடர், மாலைமலர், கல்கண்டு தொடர், பாக்யா நாவல் என்று ஏராளமான படைப்புகள். ஒருவரி அச்சில் பார்க்கமாட்டோமா? என் எழுத்தாளர் தடத்தில் நடை போடுவேனா என்றெல்லாம் ஒரு காலத்தில் கவலைப் பட்டுக் கொண்டிருந்த என்னிடம் வீடு வந்து கதவைத்தட்டி கதை வாங்கிச் சென்றார்கள்! இதை விட ஒரு எழுத்தாளனுக்கு என்ன சந்தோஷம் இருக்க முடியும்? நான் நாவலாசிரியர் ஆன பிறகும், பேட்டி கட்டுரைகள் எழுதுவதை நிறுத்தவில்லை. காரணம் பிரமுகர்களும், உச்ச நட்சத்திரங்களும் என் நட்பில் இருந்தார்கள். மனோரமாவிடம் ஆயிரம் கேள்விகள் கேட்டு சாதனை, எஸ்.வி. சேகர் 24 மணி தொடர் நாடகம் போட்டபோது நானும் உடன் இருந்து விவரமாக எழுதியது போன்ற பல சாதனைகள்.

 

இந்த நிலயில்தான் என் நிலையில் ஒரு புதுத்தடம் உருவாகியது. இசைத்தடம்! ஆம், புல்புல் என்ற இசைக்கருவி. பழமையான கருவி. ஒரு காலத்தில் எல்லோர் இல்லத்திலும் இருந்த கருவி. உலகத்தமிழ் எழுத்தாளர் சங்க தலவராக இருந்த வாசவன் திருமண வைபவத்தில் (1948) வரவேற்பில்‌ புல்புல் இசையாம்! நான் சிறுவயதிலேயே புல்புல் இசைத்து இருக்கிறேன். ஆனால் அதே புல்புல் என்னை ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை ரசிகர்களுக்கு அளித்து, எனக்கு தமிழக அரசின் "கலை நண்மணி" விருது வாங்கும் அளவிற்கு என்னை புது தடத்திற்கு இட்டுச்செல்லும் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. என் எழுத்துக்கு உறுதுணையாக இருந்த மனைவி ராணி ஜவஹர் 2005ல் திடீரென மறைந்த போது தூள்தூளாக உடைந்துபோனேன்.

 

எழுத்தே நின்றுபோய்விடுமோ என்று கூட அஞ்சினேன். என் அடையாளங்களாக இருந்த மீசை, தலை முடி, திருநீறு, முகப்பவுடர் எல்லாவற்றையும் துறந்தேன். நெருங்கிய நண்பர்கள் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், லேனா தமிழ்வாணன், மேலும் சிலர் பதறிப்போய் "இதென்ன கோலம். ஒரு எழுத்தாளர் இப்படி எல்லாம் இருக்கலாமா? பழைய ஜவஹராய் திரும்புங்கள்." என்று அன்பாய் கடிந்து கொள்ள நான் இயல்புக்கு வந்தேன். அப்போதுதான் என் கவலையை மறக்க எழுத்துப் பணியுடன், புல்புல் இசையையும் கையில் எடுத்தேன்.

 

மேடைகளில் இசைக்க ஆரம்பித்தேன். என் இசையைக் கேட்காத பிரபலங்கள் இல்லை. திரை நட்சத்திரங்கள், பிரமுகர்கள், இசைவாணர்கள் என்று எல்லோரும் ரசித்தார்கள். எல்லா தமிழ் ஆங்கில பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் என்று என்னைப் பேட்டி கண்டன. "நாத ஒலி மாமணி", "புல்புல் இசைக்குயில்", "புல்புல் குன்னக்குடி" என்று பல விருதுகள் வந்தன. இன்றைய தலைமுறைக்கு புல்புல் பார்த்தே இல்லாதவர்கள் வியந்து பார்த்தார்கள். ஆதரவற்றோர் இல்லங்கள், கேன்ஸர் ஆஸ்பத்திரி நோயாளிகள், கல்யாணம், பொழுதுபோக்கு என்று எல்லா இடங்களிலும் வாசித்தேன். வாழ்க்கையில் இப்படி ஒரு தடம் அமையும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. பேட்டி, எழுத்து, வங்கிப்பணி என்று  மூன்று குதிரைகளில் பயணித்துக் கொண்டிருந்த நான் இசை என்ற நான்காவது குதிரையிலும் ஒரே சமயத்தில் வெற்றிகரமாக பயணிக்க ஆரம்பித்தேன். இப்போது வங்கிப்பணி ஓய்வு. ஆயினும் என் தடத்தில் மற்ற மூன்று குதிரைகளும் தொடர்ந்து பயணிக்கும். என் பணிகளைப் பாராட்டி சென்னை அமுதத் தமிழ் ஆய்வரங்கம் எனக்கு அளித்த "பல்கலை வித்தகர் விருது" மேலும் மகிழ்வுறும்.

 

இந்தப் பொங்கல் நன்னாளில்  வாழ்வில் எனக்குக் கிடத்த வழித்தடங்களை அசைபோட வைத்த நக்கீரன் இணைய இதழுக்கும், ஆசிரியர் குழுவிற்கும், வாசகப் பெருமக்களுக்கு  என் நன்றிகளும் வாழ்த்துக்களும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவுக்கு தனியாகச் செல்ல வேண்டாம் எனத் தோழிகளிடம் கூறினேன்” - பிரபல எழுத்தாளரின் பரபரப்பு கருத்து

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
sensation by America writer says I have told my friends not to go to India alone

ஸ்பானிஷ் பெண் ஒருவர் தன்னுடைய கணவருடன் மோட்டார் சைக்கிளிலேயே உலகின் பல்வேறு நாடுகளில் சுற்றுலா மேற்கொண்டு வந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் 66 நாடுகளுக்கு இந்த தம்பதி பயணம் செய்துள்ளனர். 

இதுவரை இத்தாலி, ஈரான் எனப் பல நாடுகளுக்குச் சென்ற இந்த தம்பதி ஆப்கானிஸ்தான் சென்றதைத் தொடர்ந்து அடுத்த பயணமாக இந்தியாவை தேர்ந்தெடுத்தனர். அந்த வகையில், கடந்த மார்ச் ஒன்றாம் தேதி இருவரும் தனித்தனி பைக்கில் ஜார்க்கண்ட் வழியாக பாகல்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அன்று இரவு தும்கா மாவட்டத்தில் உள்ள குர்மஹாட் என்ற ஒரு குக்கிராமத்தில் தற்காலிகமாக டெண்ட் அமைத்து இருவரும் தங்கினர். அப்போது அந்த பகுதிக்கு வந்த இளைஞர்கள் சிலர், இருவரையும் தாக்கியதோடு அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து சமூக வலைத்தளங்களில் அந்த தம்பதி வீடியோ பதிவிட்டனர். அந்த பகுதியில் ரோந்து பணிக்கு வந்த காவல்துறையினர், காயமடைந்த அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தங்களுக்கு நேர்ந்த முழு துயரத்தையும் அப்பெண் போலீசாரிடம் தெரிவித்தார். அவர் சொன்ன அடையாளங்களை வைத்து விசாரித்த நிலையில், குற்றவாளி ஒருவன் சிக்கினான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர்.

sensation by America writer says I have told my friends not to go to India alone

இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், ஊடகவியலாளருமான டேவிட் ஜோசப் வோலோட்ஸ்கோ, இந்த சம்பவம் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தியாவில் வாழ்ந்தபோது, நான் கண்ட பாலியல் தொல்லைகள் போல் வேறு எங்கும் கண்டதில்லை. சில நாட்கள் மட்டுமே அங்கு தங்கியிருந்தாலும், துன்புறுத்தப்படாமலோ அல்லது தாக்கப்படாமலோ அல்லது பாலியல் வன்கொடுமை செய்யப்படாமலோ கூட ஒரு பெண் பயணியை நான் சந்தித்ததில்லை.

நான் இந்தியாவை நேசிக்கிறேன். உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாக இந்தியா எப்போதும் இருக்கும். ஆனால் அங்கு தனியாக பயணம் செய்ய வேண்டாம் என்று பெண் தோழிகளுக்கு அறிவுரை கூறியிருக்கிறேன். இந்திய சமூகத்தில் இது ஒரு முக்கியப் பிரச்சனையாகவே இருக்கிறது. இதில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். இவருடைய கருத்துக்கு பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.  

Next Story

எழுத்தாளர் தேவிபாரதியை நேரில் சென்று வாழ்த்திய அமைச்சர்!

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
Writer Devibharathi greeted the minister in person

ஒவ்வொரு வருடமும் இலக்கிய ஆளுமைகளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் சாகித்திய அகாடமி விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இந்த வருட விருது தமிழ் எழுத்தாளரான தேவிபாரதிக்கு அவர் எழுதிய ‘நீர்வழிபடூஉம்’ என்ற நாவலுக்காக சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் டெல்லியில் அவருக்கு மத்திய அரசின் சார்பில் விருது வழங்கி சிறப்பு சேர்க்கப்படுகிறது.

எழுத்தாளர் தேவிபாரதி சாதாரண எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். திருப்பூர் மாவட்டம் பழைய கோட்டை அருகே உள்ள நொய்யல் நதிக்கரையில் இருக்கும் புது வெங்கரையாம்பாளையம் என்ற குக்கிராமத்தில்தான் அவர் வசித்து வருகிறார். சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டவுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல் பல்வேறு தலைவர்கள் தொலைப்பேசி மூலமும் பல எழுத்தாளர்கள், அவரின் நண்பர்கள் எனப் பலரும் நேரில் சென்று தேவிபாரதியை வாழ்த்தி வருகிறார்கள்.

அந்த வரிசையில் தமிழக செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரான மு.பெ. சாமிநாதன், எழுத்தாளர் தேவிபாரதியை அவர் வசித்து வரும் கிராமத்திற்குச் சென்று எழுத்தாளர் தேவிபாரதியை தமிழக அரசின் சார்பாகவும் முதல்வர் சார்பாகவும் வாழ்த்தி கௌரவித்தார். அப்போது அவருடன் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் உடன் இருந்தார். சாகித்திய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் தேவிபாரதியை அமைச்சர் நேரில் சென்று வாழ்த்தியது அந்த கிராம மக்களையும், எழுத்தாளர்களையும், இலக்கிய ஆர்வலர்களையும் உற்சாகமடையச் செய்துள்ளது.