எளிமையான வாழ்க்கை, அனைவரையும் அரவணைக்கும் குணம், அன்பாக பழகுகிற விதத்தால் வாஜ்பாய் அனைவரையும் அரவணைத்தார். அனைவராலும் பாராட்டக்கூடியவராக திகழ்ந்தார் என்று பாஜக மாநில செயலாளர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
நக்கீரன் இணையதளத்திடம் பேசிய அவர்,
ஆர்.எஸ்.எஸ். துவங்கப்பட்டதில் இருந்து இன்றுவரை அரசியலில் ஈடுபட்டது கிடையாது. துவக்கப்பட்டபோது ஒரு கலாச்சார அமைப்பாக, இந்த நாட்டின் தேசியத்தை இளைஞர்களிடம் வளர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு டாக்டர் ஹெட்கேவர் அவர்களால். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆர்.எஸ்.எஸ்.ஸை சம்மந்தப்படுத்தி அதன் மீது தடை விதிக்கப்பட்டபோது, அதற்கு பின்பாக ஒரு அரசியல் கட்சியின் அவசியத்தை ஷியாம் பிரசாத் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம், அரசியல் கட்சி துவங்க வேண்டும், அது ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த அமைப்போடு இணைந்திருக்கிற மாதிரி இருக்க வேண்டும் என்று கேட்கிறார்.
ஆர்.எஸ்.எஸ்.ஸின் அப்போதைய தலைவராக இருந்த ஸ்ரீ குருஜி கோல்வல்கர், ஆர்.எஸ்.எஸ்.ஸின் தீனயாள் உபாத்யாயா, வாஜ்பாய் போன்ற முக்கியமானவர்களை அனுப்பி வைக்கிறார். அதற்கு பின்பாக ஷியாம பிரசாத் முகர்ஜி, பாரதிய ஜனசங்கத்தை ஆரம்பித்து மிக குறுகிய காலக்கட்டத்தில் காஷ்மீருக்கான போராட்டத்தில் உயிரை இழக்கிறார். அதற்கு பின்பாக தீனயாள் உபாத்யாயா, கட்சியினுடைய சித்தாந்தத்தை வடிவமைத்தவர். அவரும் துரதிர்ஷ்டவசமாக படுகொலை செய்யப்படுகிறார்.
இதற்கிடையிலேயே இந்த கட்சி நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் பங்கெடுக்க ஆரம்பித்துவிட்டது. குறிப்பிட்ட வாக்கு வங்கியையும் அது பெற்றுக்கொண்டு வருகிறது. ஆனால் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் கூடிய காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக இந்த நாட்டில் இன்னொரு அரசியல் கட்சி ஆட்சியை பிடிக்க முடியும் என்று அடல் பிஹாரி வாஜ்பாய்யின் உழைப்பும், எல்.கே.அத்வானி போன்றவர்களுடைய ஈடுபாடுகள், கடினமான உழைப்பும் நாடு முழுவதும் இந்த அரசியல் கட்சியை கொண்டு போய் சேர்ந்துள்ளது.
வாஜ்பாய் திருமணம் செய்து கொள்ளாமல், தனது வாழ்க்கையை இந்த நாட்டுக்காக அர்ப்பணித்தவர். அவர் அந்த அரசியல் சித்தாந்தத்தை வெற்றிக்கரமாக அரசாங்கமாகவும் மாற்றிக் காட்டியவர். கூடுதல் சிறப்பு என்னவென்றால், மாநிலக் கட்சிகளையெல்லாம் ஒருங்கிணைத்து, 24 கட்சிகளை வைத்து 5 வருட காலம் கட்சியை நடத்த முடியும் என்று நிரூபித்து காட்டியவர். பேசப்படுகின்ற கூட்டணி அரசாங்கங்கள், கூட்டணி அரசியலுக்கெல்லாம் வெற்றிக்கரமான மாதிரி என்பது வாஜ்பாய் அவர்களால் கொடுக்கப்பட்டதுதான்.
தமிழகத்தை எடுத்துக்கொண்டால்கூட பாஜக ஒரு தீண்டத்தகாத கட்சி என்று ஒரு நிலை இருந்தபோது, இங்கு இருக்கக்கூடிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் நீங்கலாக அத்தனை பேரையும் ஒரே மேடையில் இணைத்தவர் வாஜ்பாய் அவர்கள். வாஜ்பாய் முயற்சியால்தான்.
அதுமட்டுமல்ல கவிதை, இலக்கியம் போன்ற அவருக்கு இருந்த ஈடுபாடு, பன்முகத்தன்மையும் இந்த கட்சி வளருவதற்கு பெரும் உதவி செய்தது. அவருடைய வசீகரமான, சரளமான மேடைப் பேச்சும், நகைச்சுவை உணர்வும், கவிதை நடையிலான அவரது உரையும் மக்களிடம் ஒரு மிகப்பெரிய சக்தியாக கொண்டு சேர்த்தது.
இந்த நாட்டைப் பற்றிய மிகப்பெரிய கனவுகள் அவருக்கு உண்டு. தங்க நாற்கர சாலை திட்டம் வாஜ்பாயின் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்று. தொலைநோக்கு பார்வையுடன் இந்த நாட்டிற்கு அறிமுகம் செய்தவர். நதிநீர் இணைப்பையெல்லாம் ஆரம்பக்கட்டத்திலேயே ஊக்கவித்து அதற்கென ஒரு பிரம்மாண்டமான வடிவத்தையும் கொடுத்தவர்.
அவரது ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கென்று ஒரு உயர்ந்த மரியாதையை உலக அரங்கிலே ஏற்படுத்திக்கொடுத்தார். தனது வாழ்க்கை முழுவதையும் இந்த பாரதத்திற்காகவே சமர்பித்த அந்த தலைவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.
ஒவ்வொரு தலைவருக்கும் ஒவ்வொரு தனித்திறமை இருக்கும், தனித்தன்மை இருக்கும். அந்த வகையில் எளிமையான வாழ்க்கை, அனைவரையும் அரவணைக்கும் குணம், அன்பாக பழகுகிற விதத்தால் வாஜ்பாய் அனைவராலும் பாராட்டக்கூடியவராக திகழ்கிறார்.