தலைக்காவிரியில் இருந்து கடந்த 3-ம் தேதி புறப்பட்ட ஜக்கி வாசுதேவ், 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட டுகாட்டி பைக்கில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் வந்து இறங்கினார். ஜக்கியின் இந்த யாத் திரைக்கு "காவேரியின் கூக்குரல்' என பெயரிட்டுள்ளார். இந்தத் திட்டத்திற்காக நடிகர் கமல்ஹாசன், தி.மு.க.வின் கே.என்.நேரு, ஜி.கே.வாசன், சி.பி.எம்.மின் கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுவை முதல்வர் நாராயணசாமி, கவர்னர் கிரண்பேடி என அனைவருடன் போட்டோ எடுத்ததோடு பொதுமக்களிடம் "ஒரு மரம் நட்டு பராமரிக்க 42 ரூபாய் தாருங்கள்' என கோரிக்கையும் வைத்திருக்கிறார் ஜக்கி. இப்படி 12 வருடங்களில் பத்தாயிரத்து நூறு கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளார். "காவேரியின் கூக்குரல் மூலம் பத்தாயிரம் கோடி; "இது என்ன விஷயம்' என கேட்டோம்.
இந்தத் திட்டத்திற்கான நிதி வசூலை மேற்பார்வையிட ஒரு போர்டை அமைத்துள்ளார் ஜக்கி. அந்த போர்டில் Worldwide Fund For India (WWF) இந்திய இயற்கை மேம்பாட் டிற்கான உலக வங்கி உதவி பெறும் நிறுவனத்தின் இந்திய தலைவர் ரவிசிங், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அர்ஜித் பசாயத், மத்திய அரசின் நீர்வளத்துறையின் முன்னாள் செயலாளர் சசிசேகர், டாடா நிறுவனத்தின் முன்னாள் துணை சேர்மன் முத்துராமன், இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கிரண்குமார் ஆகியோர் இருக்கிறார்கள். இது முன்பு சங்கர மடம் இருந்த நிலையை நினைவுபடுத்துகிறது. இப்படித்தான் சங்கர மடத்தில் மத்திய- மாநில அதிகார மையத்துக்கு நெருக்கமானவர்கள் நிறைந்திருப்பார்கள். அதன் மூலமாக தென்னிந்திய அரசியலில் பொருளாதாரத்தில் ஆதிக்கத்தை பெற முடியும்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்குள் இயங்கும் எந்த அமைப்பும் சங்கர மடத்துக்கு வெளியே நின்றதில்லை. அரசியல்வாதிகள் அதிகார வர்க்கம், பெருமுதலாளிகள், நீதித்துறை எல்லாம் இணைந்து காணப்படும் சங்கர மடத் தைப் போன்றே ஜக்கியின் ஈஷா யோகா மைய மும் உருவெடுத்திருக்கிறது. அதன் அதிகார சக்தியை காட்டவே ஜக்கி காவேரியின் கூக்குரல் என்கிற இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்'' என்கிறார் கோவையின் பிரபலமான வழக்கறிஞர் முருகவேல். ஆன்மிக அரசியலும் வியாபாரமும் இணைந்ததுதான் காவேரியின் கூக்குரல்.
ஜக்கியின் விசுவாசிகளை கேட்டால், "மரம் நடுவது ஒன்றும் ஜக்கியின் புதிய விஷயம் அல்ல. மரம் நடுவதற்கென்றே (Project Green Hands ) "பச்சைக் கரங்கள்' என்கிற என்.ஜி.ஓ. அமைப்பை 2004-ம் ஆண்டு தொடங்கி கடந்த பதினைந்து வருடங்களாக நடத்தி வருகிறார். இதற்கு இந்தியா முழுவதுமுள்ள அரசு மற்றும் தொழிலதிபர்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்துள்ளார். உலகமயமாதல் கோட்பாடு வந்த பிறகு அரசு மரம் நடுதல் போன்ற சேவைத் தொழில்களை செய்யக்கூடாது. அதை என்.ஜி.ஓ. அமைப்புகள்தான் செய்ய வேண்டும் என்கிற சித்தாந்தம் நடைமுறைக்கு வந்துவிட்டது. அதன்படி பச்சைக் கரங்கள் அமைப்புக்கு தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் உறவினரான, நடிகர் நெப்போலியனின் நெருங்கிய சொந்தக்காரரான, ஜக்கியின் நிழல் என வர்ணிக்கப்பட்ட ஏகா என்கிற தாயுமானவனும் மத்திய அரசில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்த பாலகிருஷ்ணனும் இருந்தார்கள். இந்த இருவரும் ஜக்கி ஆசிரமத்தை விட்டே ஓடிப் போய்விட்டார்கள். காரணம், பச்சைக்கரங்கள் அமைப்பில் நடந்த முறைகேடுகள்தான். அந்த அமைப்பின் சார்பாக திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் லட்சக்கணக்கான மரங்கள் நடப்பட்டதாக ஜக்கி அறிவித்தார். அதில் ஒன்று கூட தற்பொழுது உயிருடன் இல்லை'' என்கிறார்கள்.
ஜக்கி காவேரியின் கூக்குரல் என்ற அமைப்பை ஏன் ஆரம்பித்தார் என அவரிடம் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர் ஒருவர் தெளிவாகவே விளக்கினார். "ஜக்கியிடம் ஏராளமான தொண்டர்கள் இருக்கிறார்கள். வருடத்திற்கு ஒருமுறை ஒரு இயக்கம் தொடங்குவார். அதில் ஒன்றுதான் காவேரியின் கூக்குரல். உயர்ந்த லட்சியங்களோடு ஆரம்பிக்கும் அமைப்பிற்கு பிரபலங்கள் ஆதரவு தருவார்கள். இலவச விளம்பரமும் கிடைக்கும். கமல்ஹாசனுக்கு சாமியார் என்றால் பிடிக்காது. இளையராஜாவின் உதவியாளர் சௌந்தர் என்பவர் ஜக்கியிடம் இணைந்து மொட்டையடித்து சாமியாரானார். அதனால் ஜக்கி ஒரு ஏமாற்றுப் பேர்வழி என பேட்டியளித்தார். பினராய் விஜயன் கம்யூனிஸ்ட். இவர்கள் மூவரையும் காவேரியின் கூக்குரல் என்கிற இயக்கத்தின் மூலம் ஜக்கி நெருங்கிவிட்டார்.
"நரேந்திரமோடியிடம் நேரில் பேசுவேன். அமித்ஷா வீட்டில் தங்குவேன்' என ஜக்கி காட்டும் பில்ட் அப்-பால் தமிழக பா.ஜ.க.வையும் அ.தி.மு.க. வையும் வீழ்த்தி விட்டார் ஜக்கி. அதுபோல கோவை மாவட்ட தி.மு.க.வினரின் கதறலையும் மீறி முந்தைய ஆட்சியில், ஜக்கி வனத்தை ஆக்கிரமித்துள்ளார். அதை நான் ஜெயித்தால் மீட்பேன் என்ற சி.பி.எம்.மின் கோவை எம்.பி. நடராஜனின் வாக்குறுதியையும் காற்றில் பறக்கவிட்டு தி.மு.க.வின் கே.என்.நேருவுடனும் சி.பி.எம்.மின் பினராயி விஜயனுடனும் சேர்ந்து "அனைத்து கட்சியின் ஆதரவும் எனக்குள்ளது' என விளம்பரம் தேடி விட்டார் ஜக்கி. இதுதான் ஜக்கியின் ஸ்டைல்'' என்கிறார்கள்.
2017-ம் ஆண்டு மத்திய CAG அறிக்கைப் படி, யானைகளின் வாழ்விடத்தை ஆக்கிரமித்து பள்ளியையும் ஆசிரமத்தையும் கட்டியுள்ள ஜக்கி அடுத்தகட்டமாக காவிரி கூக்குரல் மூலம் கிடைக் கும் பணத்தை வைத்து ஒரு ஆயுர்வேத கல்லூரி கட்டுகிறார். அதற்கு தமிழக அரசு வனத்துறை நிலத்தை தரத் தயாராக உள்ளது. அதை பழங்குடி மக்கள் காட்டில் வீடு கட்டினாலே எதிர்க்கும் WWF அமைப்பு ஆதரிக்கப் போகிறது. காவேரியின் கூக்குரல் என்கிற ஒரே கல்லில் கொத்துக் கொத்தாக மாங்காய் அடிக்கிறார் ஜக்கி'' என்கிறார்கள் கோவை நகர மக்கள்.