ஒவ்வொரு நாட்டின் அதிபர்கள், பிரதமர்களை பாதுகாக்க சிறப்பு பாதுகாப்பு படைகளை அனைத்து நாடுகளும் தன்னகத்தே வைத்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் பிரதமர்களை பாதுகாக்க சிறப்பு பாதுகாப்பு குழுவை (Special Protection Group) கடந்த 1988 ஆம் ஆண்டு உருவாக்கினார்கள். அதற்கு மிக முக்கிய அரசியல் காரணமும் உண்டு. 1984 ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை பாதுகாப்பு அதிகாரிகளே சுட்டுக் கொன்றதால், பிரதமரின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியானது. கமாண்டோ அதிகாரிகள் வழங்கிய பாதுகாப்பில் அரசியல் நுழைக்கப்பட்டதால், இந்திரா காந்தி மறைவுக்கு பிறகு அடுத்த சில மாதங்கள் பிரதமர் ராஜூவின் பாதுகாப்பை ராணுவம் ஏற்றது.
இந்திய சுதந்திர வரலாற்றில் பிரதமரின் பாதுகாப்பை ராணுவம் ஏற்றது அப்போதுதான் முதல்முறை. சில மாதங்கள் இடைவெளிக்கு பிறகு பிரதமர் மற்றும் அவர்களின் குடும்பத்தாரை பாதுகாக்க எந்த மாதிரியான பாதுகாப்பு அம்சங்களை கொண்ட குழுக்களை அமைக்கலாம் என்ற விவாதம் எழுந்த நிலையில், பிரதமர் ராஜூவ் காந்தி அதற்கான குழு ஒன்றை அமைத்தார். அவர்கள் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை உற்றுநோக்கி, நாட்டின் சிறந்த அதிகாரிகளை அனைத்து காவல் துறை பிரிவிலும் இருந்தும் எடுத்து ஒரு பாதுகாப்பு குழுவை அமைக்க பரிந்துரை செய்தார்கள். அவர்களின் பரிந்துரையின் படி அமைக்கப்பட்டதுதான் எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழு. இந்த குழுவினர்தான் இன்றைய நாள் வரைக்கும் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினரை பாதுகாத்து வருகிறார்கள். 1991 ஆம் ஆண்டு ராஜூவ் காந்தி பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே கொல்லப்பட்டதாக சர்ச்சை எழுந்ததால், முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் எஸ்பிஜி வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டார்கள். இந்த எஸ்பிஜி பிரிவில் 100க்கும் மேற்பட்ட சிறப்பு அதிகாரிகள் பணியில் இருப்பார்கள். இவர்களுக்கு என்றே தனி நிதி வருடாவருடம் ஒதுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இன்றைய தேதியில் பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மன்மோகன் சிங் ஆகிய நால்வருக்கும் இந்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு தற்போது குறைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி அவருக்கு இனி எஸ்பிஜி பாதுகாப்புக்கு பதில், இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள். பிரதமர்கள் பதவியில் இருந்து ஒருவர் விலகிய பிறகு ஓராண்டுக்கு எஸ்பிஜி பாதுகாப்பில் இருப்பார்கள் என்றும், அவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்தால் அது நீட்டிக்க படும் என்பதே எஸ்பிஜி பாதுகாப்பு சொல்லும் விதியாக உள்ளது.
அந்த வகையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக மன்மோகன் அந்த பாதுகாப்பில் இருந்ததாகவும், அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று எதுவும் இல்லை என்பதால் எஸ்பிஜி விலக்கப்படுவதாக அதிகாரிகள் காரணம் அதற்கு சொல்கிறார்கள். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணம் என்றால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சாகும் வரையில் எஸ்பிஜி பாதுகாப்பில் இருந்தாரே, அவருக்கு என்ன அச்சுறுத்தல் இருந்தது என்று எதிர்கேள்வி எழுப்புகிறார்கள் காங்கிரசார். மேலும், 2004ம் ஆண்டுக்கு பிறகு அரசியிலில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் சில ஆண்டுகளில் படுத்த படுக்கையாகி போன பிறகும் அவருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு குறைக்கப்படவில்லை என்ற போது, தற்போது ராஜ்ய சாபா எம்பியாக தேர்வாகி நாடாளுமன்றம் செல்ல இருக்கும் மன்மோகனுக்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாக கொதிக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள்.