Skip to main content

வைகோ vs ஸ்டெர்லைட் - 22 ஆண்டுகளாக நடந்தது என்ன? 

Published on 28/03/2018 | Edited on 28/05/2018

இன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட ஆணை வெளியிட்டு சீல் வைத்துள்ளது தமிழக அரசு, பெரும் போராட்டத்துக்கும் 13 பேரின் (அரசு கணக்குப்படி) உயிர் பறிப்புக்குப் பிறகும் நடந்திருக்கிறது. இது நிரந்தரமா என்பதும் உறுதியில்லை. ஆனாலும் இவ்வளவு பெரிய மக்கள் எழுச்சி இப்பொழுது வந்திருக்கிறது. இந்த ஸ்டெர்லைட் விவகாரத்தைப் பற்றி தமிழக மக்கள் அறிய இருபது வருடங்களுக்கு மேல் ஆகியிருக்கிறது. நச்சு புகையை வெளியிடும் ஸ்டெர்லைட் தாமிர தொழிற்சாலையை எதிர்த்து பல வருடங்களாக நீதிமன்றங்களில் போராடி வருகின்றனர். இன்றைக்கும் இந்த ஸ்டெர்லைட் விவகாரத்திற்காக போடப்பட்ட ரிட் மனு, வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு நிலுவையில் தான் இருக்கிறது. ஒரு முறை சென்னை உயர் நீதிமன்றம் இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என் தீர்ப்பு வழங்கியது. போராட்டங்களோடு நிற்காமல் சட்ட போராட்டமாகவும் கொண்டு சென்றவர் மதிமுக தலைவர்  வைகோ. 

 

Sterlite protest



முதன் முதலில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட்டின் விளைவை அந்த ஆலையை அடித்து உடைத்த மராத்தியர்களிடம் தான் கேட்கவேண்டும். அப்படி அடித்து விரட்டப்பட்டவர்களுக்குத்தான் தான் 1994ஆம் ஆண்டில் தமிழகத்தில் அப்போதைய அரசு இடமும்  கொடுத்தது. இதற்குப் பின்னர் ஸ்டெர்லைட் தொழிற்சாலை எந்த தடையும் இன்றி ஆரம்பித்து நடக்க தொடங்கியது. ஒரு சிலர் மட்டும் இதன் விளைவுகள் தெரிந்து இதனை எதிர்த்து போராடத்  தொடங்கினர். அதில் ஒருவர் தான் வைகோ.

 

 


வைகோ தலைமையில் 1996 மார்ச் 5  தூத்துக்குடியில் உண்ணாவிரதப் போராட்டம், 1996 மார்ச் 12  கடையடைப்பு கருப்புக்கொடி போராட்டம், 1996 ஏப்ரல் 1 ஸ்டெர்லைட் எதிர்ப்புப் பேரணி, 1996 டிசம்பர் 09 தூத்துக்குடியில் உண்ணாவிரதப் போராட்டம், 1997 பிப்ரவரி 24 மாவட்ட ஆட்சித் துணைத்தலைவர் அலுவலகம் முற்றுகை, மறியல், ஆயிரக்கணக்கானோர் கைது, ஜூன்2, 3, 4 தேதிகளில் திருவைகுண்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான கிராமங்கள் வழியாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு பிரச்சார நடைப்பயணம், 1997 ஆகஸ்ட் 30 ஆம் தேதி பத்து ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்ற ஸ்டெர்லைட் முற்றுகைப் போராட்டம், கைது என, தொடர்  போராட்டங்கள் நடந்தது. 

  Vaiko sterlite protest



இதைத் தொடர்ந்து, 1998ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, வைகோவே வாதாடினார். பின் பல அமர்வுகளுக்குப் பின்னர் 2010ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் இதை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. வழக்கில் வைகோ வெற்றிபெற்றார் என்றாலும் இதை சுலபமாக கையாண்டது, ஸ்டெர்லைட் தொழிற்சாலை. உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை நீரி (NEERI - தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம்) அமைப்பு ஆய்வு செய்ய வேண்டுமென்றும் அந்த ஆய்வில் வைகோவும் உடனிருக்கலாம் என்றும் கூறியது. வைகோவும் கலந்து கொண்ட அந்த ஆய்வு 2011 ஏப்ரல் 6, 7 ஆம் தேதி நடந்தது. அனைத்தும் தூத்துக்குடி மக்களுக்கு சார்பாக இருந்த போதிலும், தொழிற்சாலை சட்டவிரோதமாக நடத்தப்பட்டது தெரிந்தும், தமிழக சுகாதாரத்துறை பரிசோதித்து, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இதை மூடிய போதும் உச்சநீதி மன்றம் இதற்கான தடை உத்தரவை உடைத்து ஸ்டெர்லைட்டுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. அதற்கு அவர்கள் சொல்லிய பதில்,  'இவர்களால்தான் இந்தியாவுக்கு தாமிர உலோகம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. அது இந்திய பொருளாதாரத்துக்கு தேவைப்படுவது' என்பது. இப்படி சொல்லிவிட்டு, ஆலையின் சுற்றுப்புற சூழல் விதிமீறலுக்கு  நூறு கோடி அபராதத்தை முன்பணமாக கட்டச் சொல்லி முடித்துவைத்தது.  
 

vaiko vs sterlite



யாரும் எதிர்பார்க்காத தீர்ப்பை அளித்த உச்சநீதி மன்றத்திடமே வைகோ  சீராய்வு மனு போட்டார். அதுவும் தள்ளுபடி செய்யப்பட,   தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் ஸ்டெர்லைட்டை எதிர்த்து வழக்குத் தொடுத்தார். டெல்லிக்கு மாற்றப்பட்டது இந்த வழக்கு. தமிழக அரசும், வைகோவும் தனித்தனியாக உச்சநீதி மன்றத்தில் ஸ்டெர்லைட் வழக்கில் ரிட் மனு தாக்கல் செய்திருக்கின்றனர். வைகோவின் ரிட் உச்ச நீதிமன்றத்தால் விசாரணைக்கு  வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு நிலுவையில் உள்ளது. ஆனால், தற்போது ஸ்டெர்லைட்டோ சிப்காட்டை வைத்து ஆலை விரிவாக்கத்துக்காக 650 ஏக்கர் நிலத்தைப் பெற்றிருக்கிறது. தொடர்ந்து வைகோவும் இன்னும் சில சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்பாட்டாளர்களும்  நடத்திய இந்தப் போராட்டத்தை இன்று மக்கள் தங்கள் கைகளில் எடுத்துள்ளனர். வெற்றி கிடைக்குமென்று நம்புவோம்.