Skip to main content

"எனக்காக அஞ்சு லட்சம் தான் வாங்குனாரு; பிறகு அதுவும் வேண்டாம்னு சொல்லிட்டாரு..." - வைகோ நெகிழ்ச்சி

Published on 20/10/2022 | Edited on 20/10/2022

 

ghj


தமிழகத்தின் மிக மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேசிய அரசியலில் எப்போதும் தவிர்க்க முடியாதவராகவே இருந்திருக்கிறார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியில் ஆரம்பித்து பல பிரதமர்களோடு நல்ல தொடர்பிலிருந்துள்ளார். குறிப்பாக வாஜ்பாய், மன்மோகன் சிங் உள்ளிட்டவர்களோடு நெருங்கிப் பழகியவர். நம்முடைய நக்கீரனில் சரித்திரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன்னுடைய கடந்தகால அரசியல் நினைவலைகளை பகிர்ந்து வரும் அவர், பேரறிவாளனுக்கு தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டவுடன் நடைபெற்ற சம்பவத்தை தனக்கே உரிய வார்த்தை நடையில்  அவர் விவரித்தார். 

 

இதுதொடர்பாக பேசிய அவர், " பேரறிவாளன் உட்பட மூனு பேரோட தூக்குத் தண்டனைய ரத்து பண்ணுறது சம்பந்தமா வாஜ்பாய போய் பார்த்தப்போ அவர் அத்வானிய பார்க்க சொல்லிட்டார். நான், நெடுமாறன், மணியரசன், இன்னும் சில பேர் போய் அவர சந்திச்சோம். அத்வானி, இதை நாங்க செஞ்சோம்னா காங்கிரஸ்காரன் எங்கள குறை சொல்லுவான். அதனால இந்த ஃபைல தூக்கி மூலைல போட்டுட்றோம். பேசாம கெடக்கட்டும்னு போட்டாரு. அதுனால தான் அத்தன வருசம் தாமதம் ஆச்சு. அதன் பிறகு அவங்கள எப்படியாவது விடுவிக்கனும்னு நான் போயி மன்மோகன் சிங்க பார்க்கிறேன். அவரு ப.சிதம்பரத்துக்கு போன் பண்ணி வைகோ வராரு முக்கியமான விசயமா. நீங்க பேசுங்கங்கிறார். ப.சிதம்பரம் அதைப்பத்தி ஒரு முடிவும் எடுக்க முடியலன்னு ரொம்ப மழுப்பலா பதில் சொன்னார். 

 

அவங்களோட தூக்க ரத்து பண்ணிடுவாங்கன்னு நான் நெனச்சிட்டு இருந்தேன். ஒரு நாலஞ்சு நாள் இருக்கும். ஈழத்தமிழர் மற்றும் சில பிரச்சினைக்காக மத்திய அரச எதிர்த்து போராட்டம் பண்ண ஒரு ஐந்நூறு பேர அழைச்சிக்கிட்டு நான் டெல்லிக்கு போயிருந்தேன். அப்போ இங்க இருந்து தியாகு போன்ல  கூப்பிட்டு டைம்ஸ் ஆப் இந்தியா பாத்திங்களா? மூனு பேருக்கும் தூக்கு உறுதி ஆயிடுச்சினு சொன்னார். நான் அப்படியே அங்கயே படியில தடுமாறி விழப் போனேன். கணேசமூர்த்தி வந்து என்ன பிடிச்சிக்கிட்டார். அந்த ஷாக்க என்னால தாங்கிக்க முடியல.

 

ராம்ஜெத்மலானி ஒருத்தரால தான் அவங்கள காப்பாத்த முடியும், அது வைகோவால தான் முடியும்னு எல்லாரும் சொல்றாங்க. நான் பேரறிவாளன் உட்பட மூனு பேரையும் பார்க்கிறதுக்கு வேலூர் போயிட்டு இருந்தேன். அப்போ ஜெத்மலானிக்கு போன் பண்ணி மூனு பேருக்கும் கேபிடல் பனிஷ்மெண்ட், ஆகஸ்ட் 9ம் தேதி தூக்குனு தீர்ப்பு கொடுத்துட்டாங்கனும், நீங்க வந்து தடுத்து நிறுத்தனும்னும் சொல்றேன். நெறைய கேஸ் இருக்கு என்னால வர முடியாதேங்கிறாரு, எனக்காக வாங்க, தமிழர்களுக்காக வாங்க. I’m your friend. For my sake you please come. அப்படிங்கிறேன். சரினு ஒத்துக்கிட்டு 30ம் தேதி கோர்ட்ல ஸ்டே வாங்குறாரு. 

 

காங்கிரஸ் அப்பீல் பண்ணி கேஸ் டெல்லிக்கு போச்சு. சுப்ரீம் கோர்ட்ல ஒவ்வொரு வாய்தாவுக்கும் பதினஞ்சுல இருந்து இருபது லட்சம் வாங்குறவரு ஜெத்மலானி. எனக்காக அஞ்சு லட்சம் தான் வாங்குனாரு. ஒரு ஆறு தடவ கொடுத்திருப்பேன். அதுக்கப்புறம் என் கைல இருந்து தான் கொடுக்குறேன்னு தெரிஞ்சி அதுவும் வேண்டாம்னு சொல்லிட்டாரு. அவருடைய வாதங்களால தான் மூனு பேரோட தூக்கு ரத்தாச்சு" என்றார்.


 

சார்ந்த செய்திகள்