தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் மாநில தலைவர் இளங்கோவன் வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்திவருகின்றனர். ஏற்கனவே அண்மையில் முன்னாள் மருத்துவத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்திய நிலையில், இன்று (22.10.2021) இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை தற்போது நடைபெற்றுவருகிறது.
சேலத்திலுள்ள இளங்கோவனின் வீடு, சென்னை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள இளங்கோவனுக்கு சொந்தமான இடங்கள் ஆகியவற்றில் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன்குமார் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு உள்ளாகியுள்ள இளங்கோவன், சேலம் புறநகர் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை செயலாளராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய நான்கு இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திவருகிறது. சென்னை நந்தனத்தில் உள்ள விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் வீடு, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள விஜயபாஸ்கரின் நண்பர் சந்திரசேகரின் ரியல் எஸ்டேட் நிறுவனம் உள்ளிட்ட இடங்களிலும், அதேபோல் மற்றொரு உதவியாளரான முருகன் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த 18ஆம் தேதி சோதனைக்காகச் சென்ற நிலையில், சீல் வைக்கப்பட்ட 4 இடங்களிலும் நீதிமன்ற அனுமதி பெற்று பூட்டை உடைத்து இன்று சோதனை நடத்தப்பட இருக்கிறது. சென்னையில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் உட்பட நான்கு இடங்களில் 18ஆம் தேதி சோதனை நடத்த ஒத்துழைப்பு இல்லாததால் சீல் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது.