அதிமுகவின் 50ம் ஆண்டு துவக்க விழா அடுத்த வாரம் கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகளை அதிமுக தலைமை செய்து வரும் நிலையில் சசிகலா அடுத்த வாரம் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தி எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சி கொடுப்பார் என்று சசிகலா ஆதரவாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக அதிமுக முன்னாள் செய்தித்தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தியிடம் பல்வேறு கேள்விகளை நாம் எழுப்பினோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் பின்வருமாறு,
வருகிற 17ம் தேதி அதிமுகவின் 50வது ஆண்டு பொன்விழா நடைபெற உள்ளது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக தலைமை, தொண்டர்கள் இந்த நாளை கட்சி கொடியேற்றி, புதிய வர்ணம் அடித்துக் கொண்டாட வேண்டும் என்று கூறியுள்ளனர். இதை எப்படி பார்க்கிறீர்கள்?
ஒருபுறம் சற்று மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது, நல்லவேளை காவி வண்ணம் அடித்து, தாமரை பூ படம் போட்டு தொண்டர்களைக் கொண்டாட சொல்லாமல் விட்டார்களே! ஒரு கட்சியின் 50 ஆண்டு விழா என்றால் அதை எப்படிக் கொண்டாட வேண்டும், யாரை அழைத்துக் கொண்டாட வேண்டும், இதுவரை அதற்காக எதாவது ஒரு முயற்சியை இவர்கள் எடுத்துள்ளார்களா? கலைஞருடைய படத்திறப்பு விழாவுக்கு ஸ்டாலின் யாரை அழைத்தார், இந்தியாவின் ஜனாதிபதியையே அவர்களால் அழைக்க முடிகிறது, உங்களால் அது முடியாதா? அம்மாவின் நினைவு மண்டபத்தை எப்படித் திறந்தீர்கள், மோடி எங்கே போனார். உங்களை கடைசி தொண்டன் உள்ள வரை யாரும் மன்னிக்கப் போவதில்லை. புரட்சித் தலைவரின் கட்சிக்கு விழா எப்படி எடுப்பது என்று எங்களுக்குத் தெரியும். நீங்கள் வேடிக்கை பாருங்கள்.
சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா அப்போதே ஜெயலலிதா நினைவிடம் செல்ல இருப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த நிகழ்வு நடக்காமலேயே போய்விட்டது. தற்போது வருகிற 16ம் தேதி அவர் ஜெயலலிதா நினைவிடம் கண்டிப்பாக செல்வார் என்று தகவல் வெளிவந்துள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
அவர் கண்டிப்பாகச் செல்ல வேண்டும், இந்த இயக்கத்தை எடப்பாடி குரூப் சிதைத்துவிட்டார்கள், அதை இவர்கள் சரி செய்ய வேண்டும். உங்களை தொண்டர்கள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள், ஜெயலலிதா என்ற சிங்கம் வழியிலேயே நீங்களும் சீறி எழவேண்டும். உங்களுக்கு துரோகம் செய்தவர்களுக்குத் தண்டனை கொடுத்தாக வேண்டும். அம்மா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியிருக்க வேண்டும். இதுவரை போகவில்லை என்றாலும் பரவாயில்லை, வரும் நாட்களில் போய்த்தான் ஆக வேண்டும். அங்கே செல்லுங்கள், தொண்டர்களுக்கு நம்பிக்கை கொடுங்கள். இதைத்தான் நான் பல்வேறு தொலைக்காட்சிப் பேட்டிகளில் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறேன். எடப்பாடி பழனிசாமி என்ற சர்வாதிகாரி அதிமுகவில் இருந்து தூக்கி எறியப்பட வேண்டும். அதிமுக புது வெளிச்சம் பெற வேண்டும். இந்த கட்சி நிலைபெற்றால் தான் திராவிட ஆட்சி தமிழகத்தில் தொடர்ந்து இருப்பதற்கு வாய்ப்புக்கள் இருக்கிறது.இல்லையென்றால் புதுச்சேரியில் நடைபெற்றதை போல் நடந்துவிடும். எனவே சசிகலா வர வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள், அதை அன்றைய தினம் நிறைவேற்றுவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் பன்னீர் செல்வம் கலந்துகொள்ள வில்லை என்று தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், கடைசி நேரத்தில் அவர் பிரச்சாரத்தில் கலந்துகொண்டார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?
அவர் மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை நீங்கள் தான் வைத்து வருகிறீர்கள். கட்சிக்காரர்கள் அவரை தொடர்ந்து அழைத்து வந்தார்கள், அவரும் விழுப்புரத்தில் வந்து பிரச்சாரம் செய்தார். சில இடங்களில் அவரும் தலைகாட்டிவிட்டுச் சென்றார். அங்கே என்ன நடந்தது, சி.வி சண்முகம் அவரிடம் புலம்பி தள்ளியிருக்கிறார். பாமகவுடன் கூட்டணி வேண்டாம் என்று பலமுறை கூறிபார்த்தும் கேட்காததால் இன்றைக்கு இந்த நிலைக்கு நாம் வந்திருக்கிறோம் என்று கூறியுள்ளார். கடைசி வரைக்கும் பாமக அதிமுகவுடன் இருக்க வேண்டும் என்று அதிமுக படாதபாடு படுகிறது. இன்றைக்கு அதிமுக அடைந்துள்ள தோல்விக்கு அத்தகைய மனநிலையே முக்கிய காரணமாக இருக்கிறது.
இன்றைக்கு பாமக தரப்பு என்ன நினைக்கிறது, அதன் தலைவர் ராமதாஸ் பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் என்ன பேசினார், அதிமுக கண்டிப்பாக இரண்டாவது இடத்திற்கு வரக் கூடாது என்று கூறியுள்ளார். அந்த ஏழு மாவட்டங்களில் அவர்கள் இரண்டாவது இடத்திற்கு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள், அதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் 20 இடங்களையாவது அதிமுகவிடம் கேட்கலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். அதை தவறு என்று நாம் சொல்ல முடியாது. அவர் கட்சி வளரத்தான் நினைப்பார்கள். ஆனால் அதிமுக தரப்பு ரப்பர் ஸ்டாம்பாக ஏன் வளைகிறார்கள் என்றுதான் நான் கேட்கிறேன். வளைந்து கொடுப்பதில் அவர் புதிய சாதனை படைத்து விடுவார்கள். எனவே அதிமுக காப்பாற்றப்பட வேண்டும். இவர்கள் தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும். அப்படி என்றால் அதிமுகவுக்கு விடிவுகாலம் விரைவில் பிறக்கும்.