தந்தை பெரியார் இன்று இருந்திருந்தால், மனுசாஸ்திரத்தின் மண்டையில் உச்சநீதிமன்றம் சுத்தியலால் அடித்து வழங்கியுள்ள இரண்டு தீர்ப்புகளை கொண்டாட விழா எடுத்திருப்பார்.
தந்தை பெரியார் 1942 ஆம் ஆண்டு பெண் ஏன் அடிமையானாள்? என்ற புத்தகத்தை வெளியிட்டார். அந்தப் புத்தகத்தைப் போல பெண்களுக்கு சமத்துவம் கோரும், பெண்களுடைய உரிமைகளைப் பேசும், பெண்களின் பிரச்சனைகளுக்கு ஆதரவாக வாதாடும் புத்தகம் இதுவரை உலகில் எங்கும் வெளிவந்ததில்லை என்று கூறுகிறார்கள்.
பெண்களை குழந்தைபெறும் மிஷினாகவும், கணவனுக்கு தொண்டூழியம் செய்யும் அடிமையாகவும், சமையல்காரியாகவும் பலவிதமாக பயன்படுத்திய சமூக அமைப்பில், தானே ஒரு பெண்ணாக பாவித்து, பெண்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணங்களையும், தீர்வுகளையும் சொன்னவர் தந்தை பெரியார்.மனைவிக்கு கணவன் எஜமானன் அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கம் இந்த வழக்கு விசாரணையில் எடுத்துவைத்த பெண்ணடிமை வாதங்களை எட்டி உதைத்திருக்கிறது.
இந்தியாவில் 'பிறன் மனை புணர்தல்' என்பது தொடர்ந்து குற்றமாகவே நீடிக்க வேண்டும் என்று ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு விரும்புகிறது. "திருமணமான பெண்ணுடன் உறவுகொள்வதை குற்றமில்லை என்றாக்கினால் திருமண உறவின் புனிதம் கெட்டுவிடும், " என்று அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்த வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.
இந்திய தண்டனை சட்டத்தின் 497ஆவது பிரிவு பெண்கள் ஆண்களின் சொத்து எனும் ஆணாதிக்க சிந்தனைப்படி அமைந்துள்ளது என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது. ஏற்கெனவே, அந்தரங்க உரிமை அடிப்படை உரிமைகளில் ஒன்று என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சட்டபூர்வ வயதை அடைந்த இருவர் விருப்பத்துடன் உடலுறவு கொள்வது அவர்களுடைய அந்தரங்க உரிமை என்பதால், இந்த 497 ஆவது சட்டப்பிரிவு அந்தத் தீர்ப்புடன் பொருந்தாது என்பதே இந்தத் தீர்ப்பின் அடிப்படை.
கள்ள உறவு, மகிழ்ச்சியற்ற திருமண வாழ்க்கைக்கும், விவாகரத்து உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைகிறது. அதேசமயம், மகிழ்ச்சியற்ற திருமண வாழ்க்கையே கள்ள உறவுக்கும் காரணமாக அமைகிறது. இதனாலேயே அத்தகைய உறவை கிரிமினல் குற்றமாக கருத முடியாது என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.
பெண்ணின் பாலியல் சுதந்திரத்தை இந்தச் சட்டப்பிரிவு பறிக்கிறது. தனி்ப்பட்ட வாழ்க்கையை தேர்வு செய்வதற்கான சுதந்திரத்திலிருந்து, பாலியல் உறவுக்கான தேர்வை துண்டிக்க முடியாது. திருமணம் ஆகிவிட்டது என்பதற்காகவே தனது பாலியல் உறவு சுதந்திரத்தை கணவனிடம் மனைவி அடகு வைத்து விடுவதில்லை. தனது விருப்பப்படி பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் உரிமையை பெண்ணிடமிருந்து பறிக்கக்கூடாது என்று தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவரான சந்திரசூட் கூறியிருக்கிறார்.
497 ஆவது பிரிவை நீக்கி தீர்ப்பளித்தாலும், கள்ள உறவு தொடர்பாக கணவனோ மனைவியோ தனக்கு பாதிப்பு ஏற்படுவதாக கருதினால், அவர்கள் விவாகரத்து கோரி வழக்கு தொடரலாம். விவாகரத்து பெற இந்தக் காரணத்தின் அடிப்படையில் உரிமை இருக்கிறது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
"நாம் யாருடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று சட்டம் சொல்லக்கூடாது"
"திருமண உறவுக்கு வெளியே உறவு கொள்வது சரியா, தவறா என்பதைவிட, விரும்பும் நபருடன் பாலுறவு கொள்ள சுந்திரம் உள்ளதா, இல்லையா என்பதே முக்கியக் கேள்வி" என்றெல்லாம் விமர்சகள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.
இதற்கிடையே, இந்தத் தீர்ப்பு ஆண், பெண் உறவுகளை கொச்சைப்படுத்தும் என்று ஆண்களும் பெண்களுமே கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால், கள்ள உறவை சட்டவிரோதம் இல்லை என்பது பெண்களுக்கு மேலும் வலியைக் கொடுக்கும் என்று சொல்லியிருக்கிறார்.
உச்சநீதிமன்றம் ஒரு சட்டப்பிரிவை தேவையி்ல்லை என்று நீக்கி உத்தரவிட்டிருப்பதால் மட்டுமே, மனைவியர் தங்களுடைய கணவர்களுக்கு தெரிந்தே வெளி ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்வார்கள் என்றோ, கணவர்கள் தங்கள் மனைவியருக்கு தெரிந்தே வெளி பெண்களுடன் உறவு வைத்துக் கொள்வார்கள் என்றோ கருதினால் அதைப்போன்ற சிறுபிள்ளைத்தனம் வேறு இருக்க முடியாது.
அதைப்போலவே, உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது, இனி நான் உன் சொத்து இல்லை. உனது அடிமையில்லை. நீ என் எஜமானன் இல்லை. உன்னுடன் நான் சந்தோஷமாக இல்லை. எனக்கு விவாகரத்து கொடு என்று பெண்களோ, ஆண்களோ பொங்கியெழப் போவதில்லை. இந்திய சமூக அமைப்பில் அத்தகைய நிலை உருவாக வாய்ப்பிருக்கிறதா என்பதே சந்தேகம்தான்.
எதிர்காலத்தில் ஆணும் பெண்ணும் நண்பர்களாக, சம உரிமையுடன் கூடிய இணையர்களாக வாழ்வதற்கு இந்த தீர்ப்பு உதவக்கூடும் என்ற வகையில் இது ஒரு முன்னோடி தீர்ப்பாகக் கருதி வரவேற்கலாம்.
இரண்டாவது தீர்ப்பு!
கடவுளை வழிபடுவதில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் உச்சநீதிமன்றம் தகர்த்திருக்கிறது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் வழிபடச் செல்ல முடியாத நிலை இருந்தது.
பெண்களுக்கு இயற்கையாக ஏற்படும் மாதவிடாயைக் காரணம் காட்டி இந்த அனுமதி மறுக்கப்பட்டது. இந்தியாவில் பெண்கள் தங்களுடைய மாதவிடாய் காலங்களில் வீட்டில் உள்ள பூஜை அறைக்குள்ளேயோ, சாமி படங்களை வணங்கவோ மாட்டார்கள் என்பதுதான் நிஜம்.
ஐயப்பன் கோவில் தவிர, மாதவிடாயைக் காரணம் காட்டி வேறு எந்தக் கோவிலும் பெண்களை வழிபட அனுமதி மறுத்ததில்லை. எல்லாக் கோவில்களுக்கும் பெண்கள் செல்கிறார்கள். பழனி முருகன் கோவிலுக்கு விரதமிருந்து எல்லா வயதுப் பெண்களும் பாதயாத்திரை செல்கிறார்கள். அப்படிச் செல்லும்போது மாதவிடாய் வந்துவிட்டால் பயணத்தை ரத்து செய்து ஊருக்குத் திரும்பிவிடுவார்கள்.
ஐயப்பன் கோவில் விஷயத்தில் வனப்பாதை என்பதால் மாதவிடாய் காலங்களில் புலி உள்ளிட்ட விலங்குகள் ரத்தவாடை உணர்ந்து ஆபத்து விளைவிக்கக் கூடும் என்று கருதியே பெண்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது.
ஆனால், இப்போது போக்குவரத்து மிகவும் முன்னேறி இருக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் வசதிகளை செய்துதரும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்படிப்பட்ட நிலையில் பெண்களை வழிபாட்டுக்கு அனுமதி மறுப்பது தவறு என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது, சபரிமலை ஐயப்பன் கோவிலில்பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு எனகேரள அரசு தெரிவித்திருந்தது. இந்த விசாரணையில் கருத்துதெரிவித்த நீதிபதிகளும், “ஆண்களை போல பெண்களுக்கும் வழிபாடுநடத்த உரிமை உள்ளது. பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியல்சாசனத்திற்கு எதிரானது” என கூறியிருந்தனர். குறிப்பிட்ட வயதுடையபெண்களை கோவிலுக்குள் அனுமதிப்பது ஆகம விதிகளை மீறுவதாகும் என்று திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் வாதிடப்பட்டது.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இதற்கிடையேதான் கேரளாவில் தொடர் மழைபெய்து மிகப்பெரிய அழிவு ஏற்பட்டது. உடனே, அந்த வெள்ளத்திற்கு ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என்ற கேரள அரசு மற்றும் உச்சநீதிமன்றத்தின் கருத்துதான் காரணம் என்று ஆடிட்டர் குருமூர்த்தி கருத்து தெரிவித்தார். அவருடைய கருத்தை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு ஆதரித்திருந்தார்.
இத்தகைய பிற்போக்கு கருத்துகளை தகர்த்தெறிந்து உச்சநீதிமன்றம் ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. பெண் கடவுள்களை வணங்கும்நாட்டில் பெண்களை பலவீனமானவர்களாக கருதக்கூடாது. கடவுளைவணங்குவதில் ஆண் - பெண் பாகுபாடு கூடாது. கோவிலுக்குள் பெண்கள்செல்ல அனுமதி மறுப்பது சட்ட விரோதம் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட நான்கு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
ஆனால், பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா மட்டும் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
மொத்தத்தில் இந்த இரண்டு தீர்ப்புகளுமே பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் மிக முக்கியமான தீர்ப்புகள் என்றே பார்க்க வேண்டும். தந்தை பெரியார் உயிரோடு இருந்திருந்தால் இந்த இரண்டு தீர்ப்புகளையும் கொண்டாடி வரவேற்றிருப்பார். அவர் இல்லாவிட்டாலும், தமிழகத்தின் பெரும்பான்மையான மக்கள் அவருடைய சார்பில் இந்த இரண்டு தீர்ப்புகளையும் வரவேற்கிறார்கள்.