தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது, இதில் 13பேர் இறந்துள்ளனர், பலர் படுகாயமடைந்துள்ளனர். இதில் உயிரிழந்த மாணவி ஸ்னோலினுடைய தோழி நக்கீரனுக்கு அளித்த பேட்டி...
நான், பாத்திமா நகர்ல இருக்கேன், எங்க ஏரியா ஆட்களோடதான் நான் வந்தேன். போராட்டத்துக்கு வந்ததுக்கப்பறம் எங்களுக்கு முன்னாடி திருநங்கைகள் போனாங்க, எங்களையும் கூப்டாங்க வாங்கனு. என்கூட இரண்டு பொண்ணுங்க இருந்தாங்க. ஒரு பொண்ணு பேரு ஃபினோலின், இன்னொரு பொண்ணு பேரு ஸ்னோலின். அந்தப்பொண்ணை எனக்கு பள்ளியில் படிக்கும்போதிருந்தே தெரியும். அதனாலயே நாங்கள் இருவரும் சேர்ந்து சென்றோம். முதலில் நாங்கள் கோரஸ் கொடுத்துக்கொண்டே சென்றோம். போகப்போக முன்னோக்கி சென்றோம். பெண்களை முன்னோக்கி செல்ல சொன்னார்கள். அதனால் நாங்கள் இன்னும் முன்னோக்கி சென்றோம்.
முதலில் போலிஸ்தான் அடிக்க ஆரம்பித்தார்கள். ஒரு போலிஸ்காரரெல்லாம் யூனிஃபார்மோட கல்லைத் தூக்கி எறிந்தார். பாலத்துகிட்ட மறைந்திருந்து அடித்தார்கள், குண்டு போட்டார்கள். நாங்க அங்கையே மாட்டிகிட்டோம். அங்க இருந்து தப்பிச்சு போனோம், பாலத்துக்கு அடியில பைக்கெல்லாம் போட்டு எருச்சாங்க. இத்தனைக்கும் எங்கள்ட்ட கம்பு ல இருந்து எதுவுமே கிடையாது. எங்கள்ட்ட பெட்ரோலும் கிடையாது, எந்த ஆயுதமும் கிடையாது, ஏன் எங்கள்ட்ட தீப்பட்டிகூட கிடையாது. அவுங்கதான் எல்லத்தையும் எருச்சாங்க, அவங்கதான் தீ வச்சாங்க. அப்பறம் தண்ணீ வச்சு அடுச்சாங்கா. இது எல்லாத்தையும் தாண்டிதான் கலெக்டர் ஆபிஸ் வாசல்ல போயி முற்றுகையிட்டோம். அப்பறம் எல்லாரும் உள்ள போயிட்டாங்க, நாங்களும் உள்ள போயிட்டோம். அமைதியாதான் எல்லாரும் போனாங்க. பேச்சுவார்த்தை நடத்ததான் போனோம். போற வழியிலேயே கல்லை விட்டு அடுச்சதுல என் தலைல அடிபட்டு வீங்கிடுச்சு. நான் ஒரு ஓரமாக போயி உக்காந்துட்டேன். அப்போ அந்தப் பொண்ணு கூப்ட்டுச்சு வாங்கக்கா, வாங்கக்கானு. அப்போ நான் சொன்னேன் வேணாம் பாப்பா போக வேண்டாம் நாம இங்கையே உக்காரலாம்னு. நீங்க உக்காருங்கக்கா நான் போய்ட்டு வந்துரேனு சொன்னா. ஒரு அஞ்சு நிமிஷம்தான் இருக்கும் இரண்டுபேரும் ஓடி வந்தாங்க. என்னாச்சுனு கேட்டுட்டு இருக்கும்போதே போலிஸ் இரண்டு பக்கத்தில இருந்தும் ஓடி வந்தாங்க. வந்தவுங்க லத்தி சார்ஜ்கூட பண்ணல, நேரா துப்பாக்கி வச்சு சுட ஆரம்புச்சுட்டாங்க. அங்க இருந்து சுட ஆரம்பிச்சாங்க, அதுக்கப்பறம் மாடில இருந்து கொஞ்சபேரு சுட ஆரம்பிச்சாங்க. அப்பறம் ஷார்ட் கட்ல வந்து காட்டுபாறைக்குள்ள ரவுண்ட் அப் பண்ணிட்டாங்க.
நாங்க மூணுபேரும் கைய புடுச்சுகிட்டோம், எங்க ஊரு பொண்ணு ஒண்ணும் என் கைய புடுச்சுகிச்சு. ஆபிஸ் வாசல்ல இருந்து நாங்க ஓட ஆரம்பிச்சோம். கலெக்டர் ஆபிஸ் பக்கத்துல ஒரு ஸ்பீட் பிரேக் இருக்கும் அங்க போயிட்டு இருக்குறப்ப லத்தி சார்ஜ் பண்ணாங்க அதுல ஃபினோலின் பொண்ணு கீழ விழுந்து நெஞ்சுல அடி பட்டு மூச்சுதிணர ஆரம்பிச்சிருச்சு. இந்த பொண்ணு என்னவிட்டு ஓடிருச்சு. நான் இந்தப் பொண்ண தூக்க போனபோது, அந்தப்பொண்ண சுட்டாங்க அது அந்த இடத்திலயே இறந்திருச்சு. வாயில சுட்டுட்டாங்க. அக்கா என்னை விட்டுரு நான் செத்துருவேன் அப்படினு அந்தப்பொண்ணு சொல்லுச்சு, இந்தப்பொண்ண நான் தர,தரனு இழுத்துட்டுபோனேன். அதுக்கப்பறம் நாலு பசங்க வந்து தூக்கிட்டு போய்ட்டாங்க. போயி பக்கத்துல இருந்த கண்ணாஸ்பத்திரில அட்மிட் பண்ணாங்க, அங்க டாக்டர்ஸ் அவ்வளவா யாரும் இல்லை, பெட்டும் அவ்வளவா இல்லை. அதுக்கப்பறம் குண்டடிபட்ட இன்னும் கொஞ்ச பேரோட ஆட்டோல வந்து நாங்க ஜி.ஹெச். ல சேர்ந்துட்டோம்..