சட்டமன்றத் தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அதிமுக மற்றும் அமமுகவைச் சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகளிடம் தொலைபேசியில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார் சசிகலா. தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல திட்டமிட்டுள்ள சசிகலா, அதற்கு முன்பாக ஆதரவாளர்களுடன் பேசியுள்ளார். அந்த ஆடியோக்கள்தான் எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சசிகலாவுடன் பேசிய அதிமுகவினரை கட்சியில் இருந்து நீக்கி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.
இந்தநிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனனை பார்க்க எடப்பாடி பழனிசாமி வந்தார். உடனே சசிகலாவும் அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்தார். இதனால் அவசரம் அவசரமாக எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார். அதேபோல மதுசூதனன் மறைந்ததும் அவருக்கு அஞ்சலி செலுத்த சசிகலா வருவது தெரிந்ததும், மதுசூதனன் இல்லத்தில் இருந்து புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் சசிகலா, தற்போது அதிமுகவை கைப்பற்ற மேலும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறாராம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதேபோல சசிகலா தரப்பு அப்பல்லோ வீடியோவை வெளியிடப் போகிறது என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.
தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல திட்டமிட்டுள்ள சசிகலா, சுற்றுப் பயணத்திற்கு முன்பு அப்பல்லோ தொடர்பான வீடியோவை வெளியிடப்போகிறராம். அதில் தானும் ஜெயலலிதாவும் இணக்கமாகவும் அன்பாகவும் இருக்கும் காட்சிகள் இருக்குமாம். அதன் மூலம் ஜெயலலிதாவின் கடைசி நேர அன்பையும் பெற்ற பெருமை தனக்கு மட்டுமே உள்ளது என்று உணர்த்தப்போகிறாராம். இதற்காக கரோனா நிலவரம் குறித்தும், கட்டுப்பாடுகள் தளர்வுகள் குறித்தும் விசாரித்துக்கொண்டே இருக்கிறாராம் சசிகலா.