Skip to main content

"திருச்சி சூர்யா போன்ற நபர்கள் திருந்தமாட்டார்கள்; அமைதியாக இருந்தால் நாளை மற்ற பெண்களுக்கு நடக்கும்..." - காயத்ரி ரகுராம் ஆவேசம்

Published on 22/11/2022 | Edited on 24/11/2022

 

கச

 

பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் இன்று கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் அதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மாநில பாஜக தலைவர் தொடங்கி அனைவரையும் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, "இந்த எட்டு ஆண்டுகளில் எனக்குக் கொடுக்கப்பட்ட அனைத்துப் பணிகளையும் நான் சிறப்பாகச் செய்து வந்துள்ளேன். என் வேலையில் ஏதாவது குறை கண்டுபிடித்து அதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டால் கூட அது சரியாக இருக்கும். ஒரு நபர் தவறாகப் பேசுகிறார், அது தவறு என்று கூறியதற்காக நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றால் அதை எப்படிப் புரிந்துகொள்வது என்று தெரியவில்லை. என்னை ஓரங்கட்ட நடவடிக்கை எடுக்கிறார்களா என்று கேட்கிறீர்கள். நான் ஏற்கனவே ஓரமாகத்தானே இருக்கிறேன். திருச்சி சூர்யா மாதிரியான ஆட்களைத் தவறு செய்ததற்காகக் கேட்டதற்கு இந்த தண்டனை என்பது மிகவும் வருத்தத்துக்குரியது. நாளை யார் தவறு செய்தாலும் யாரும் கேட்கத் தயங்குவார்கள். 

 

திருச்சி சூர்யா போன்ற ஆட்கள் எல்லாம் எப்போதும் திருந்தமாட்டார்கள். இன்றைக்கு இந்தப் பெண்ணுக்கு நடந்த சம்பவம் நாளை வேறு ஒரு ஆளுக்கு நடக்கலாம். அம்மாவுக்கு நடக்கலாம், தங்கைக்கு நடக்கலாம். இந்த மாதிரி நபர்கள் யாருக்கும் தொல்லை கொடுப்பார்கள். ஆனால் அவரை தவறு செய்கிறீர்கள்  என்று கூறக்கூடாது என்றால் அது எப்படி சரி என்று நீங்கள்தான் கூறவேண்டும். சூர்யா மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் நான் கூற விரும்புகிறேன். இல்லை என்றால் அவர் எல்லாம் எந்தக் காலத்திலும் திருந்தமாட்டார். ஒரு  ட்விட் போட்டு எனது வருத்தத்தை இந்த விஷயத்தில் வெளிப்படுத்தினேன். 

 

அதை நான் அண்ணாமலையை எதிர்ப்பது மாதிரியான தோற்றத்தைக் கீழே இருப்பவர்கள் உண்டாக்கினார்கள். அவர்கள் ஒவ்வொருவரிடமும் நான் சென்று ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்க முடியாது. அண்ணாமலை அவர்களுடன் அவர் கட்சியில் இணைந்ததிலிருந்தே ஒரு சகோதரர் போன்ற உணர்வுடன் நல்ல முறையில் இணைந்து பணியாற்றினோம். ஆறு மாதம் கட்சியில் நல்ல முறையில் வேலை செய்தேன். எங்கே அநீதி நடக்கிறதோ அங்கே அதைத் தட்டிக்கேட்பேன். அது என்னுடைய பழக்கம், அது என்னுடைய சிறு வயதிலிருந்தே இருக்கும் பழக்கம். 

 

அண்ணாமலை அவர்களும் என்னுடைய நீக்கத்திற்குக் காரணம் என்று சொல்வதில் எனக்குத் தயக்கம் இல்லை. ஏனென்றால் இந்த அறிக்கையைத்தான் தலைமைக்கும் நீங்கள் அனுப்புவீர்கள். தப்பே பண்ணாதபோது நீதான் செய்த, நீதான் செய்த என்றால் அதை என்ன செய்வது, எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இந்த எட்டு வருடத்தில் நாங்கள் நல்ல முறையில் தான் வேலை செய்து வந்தோம். இந்த மாதிரி நீக்குவது சேர்ப்பது என்ற நடைமுறையெல்லாம் இப்போதுதான் நான் கேள்விப்படுகிறேன். இது தேவையில்லாத ஒன்று, தவறு செய்தவர்களை விட்டுவிட்டு அடுத்தவர்களைத் தண்டிப்பது என்பது எந்த வகையில் நியாயம். 

 

என்னை ஏன் கட்சியை விட்டு நீக்கினார்கள் என்பதை நீங்கள்தான் அண்ணாமலையிடம் கேட்க வேண்டும். மற்றவர்களுக்குக் கொடுக்கப்பட்ட விளக்கமும், கால நேரமும் கூட எனக்கு வழங்கப்படவில்லை என்பது உங்களுக்கே தெரியும். அது எப்படி தவற்றை எடுத்துச் சொல்வது தவறாகிவிடும் என்று எனக்குத் தெரியவில்லை. நான் யாருடைய வளர்ச்சிக்கும் தடங்கலாக இருந்ததில்லை. அடுத்தவர்களை வளர்த்துவிட வேண்டும் என்றுதான் நினைப்பேனே தவிர யாரையும் காயப்படுத்த வேண்டும், வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. நினைக்கவும் மாட்டேன்" என்றார்.