Skip to main content

பாலாறு ஏற்படுத்திய துயரம்; 200 பொதுமக்கள் ஒருநள்ளிரவில் பலி! வருடாவருடம் நடைபெறும் நினைவஞ்சலி! 

Published on 13/11/2021 | Edited on 13/11/2021

 

The tragedy caused by Palaru; 200 civilians passes away in one night! Annual Memorial!
                                                    கோப்புப் படம்  

 

வடஇந்திய மன்னர்கள் தமிழ்நாடு மீது படையெடுத்து தமிழகத்துக்குள் நுழைய முடியாமல் நீண்ட காலம் தடுத்ததில் மிக முக்கிய பங்கு வகித்தது பாலாறு என்கிறது சோழர்கள் ஆட்சிக் குறித்த கல்வெட்டு. பாலாற்றை கடந்து எப்படி தமிழ்நாட்டுக்குள் நுழைந்தோம் என விவரிக்கிறது விஜயநகர பேரரசு வரலாறு. பாலாற்றின் அகலம் 500 மீட்டர்க்கும் அதிகம். அதாவது சென்னை அண்ணா சாலையின் அகலத்தை விட 10 மடங்கு அதிகம். இது தமிழ்நாட்டுக்கு இயற்கை அரணாக இருந்தது.

 

கர்நாடாகா மாநிலம், கோலார் நந்திமலையில் உற்பத்தியாகி கர்நாடகா மாநிலத்தில் 93 கி.மீ தூரமும், ஆந்திரா மாநிலத்தில் 33 கி.மீ தூரமும், தமிழ்நாட்டுக்குள் 222 கி.மீ தூரமும் பயணமாகி சென்னைக்கு அருகில் வயலூரில் வங்காளவிரிகுடாவில் கலக்கிறது பாலாறு.

 

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வரை கரை புரண்டு ஓடும் அளவுக்கு தண்ணீர் வந்துக்கொண்டிருந்த வற்றாத ஜீவநதி பாலாறு. இன்றைய பாலாறு என்பது மழைக்காலங்களில் மட்டும் மழைநீர் கருமை நிறத்தில் ஓடும். பாலாற்றின் அகலம் சுருங்கி வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு, விஷாரம், இராணிப்பேட்டை பகுதிகளில் இயங்கும் தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீரும், வேலூர் மாநகரம் உட்பட பல நகரங்கள், பேருாட்சிகளின் கழிவுநீர் ஓடும் ஆறாக பாலாறு மாறியுள்ளது. அப்படிப்பட்ட பாலாற்றில் தற்போது சென்னை மாநகரை மிதக்கவிட்டுள்ள மழைப்போன்று சரியாக ஓரு நூற்றாக்கு முன்னர் பெய்த மழையால் பாலாற்றில் திரண்டுவந்த நீரில் 200க்கும் அதிகமான பொதுமக்கள் இறந்தார்கள் என்றால் இன்றைய சமுதாயம் ஆச்சிரியத்துடனும், பெரும் கேள்விக்குறியுடனும் அணுகும். ஆனால், அது நடந்தது உண்மை. 

 

1903ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியிலும் நவம்பர் மாதம் தொடக்கத்திலும் அன்றைய மைசூர் மாகாணத்தின் பல பகுதிகளில் பெரும் மழை பெய்தது. மைசூர் சாம்ராஜ்ஜியத்தின் கோலார்ஜில்லா பகுதிகளில் பதினைந்து நாட்களாக தொடர்மழை பெய்துள்ளது. அந்த மழையால் நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி கரைகள் உடைந்துள்ளன. குறிப்பாக கோலார் ஏரி, ஹொலையல் ஏரி, பேத்தமங்கலம் ஏரி, புக்க சமுத்திரம், பங்காநத்தம் ஏரி, பங்காருப்பேட்டை ஏரி உள்ளிட்ட பெரிய ஏரிகள் உடைந்து பெருவெள்ளம் பாலாற்றில் வந்தது.

 

பாலாறு, தமிழ்நாட்டுக்குள் வாணியம்பாடி அடுத்த கனகசமுத்திரம் கிராமத்தில் நுழைகிறது. அதன்வழியாக பாலாற்று நீர் வாணியம்பாடி நகரத்துக்குள் நுழைந்து அன்றைய வாணியம்பாடி நகரை மூன்றாக பிரித்து பாதி நகரை முற்றிலுமாக மூழ்கடித்து விட்டது. இந்த பெருவெள்ளத்தில் மூழ்கி 200 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. நூற்றுக்கணக்கான வீடுகள் காணாமல் போயின. சின்ன பாலாற்றில் இருந்த பெரிய பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் வாணியம்பாடி நகரின் உள்ளூர் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது. உடைமைகளை இழந்த மக்கள், பெருந் துன்பத்திற்கு ஆளாயினர்.

 

இந்தத் துயர சம்பவத்தை அப்போதைய சென்னை மாகாண கவர்னராக இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த லார்டு கர்சன், தந்தி மூலமாக இங்கிலாந்து மகாராணி விக்டோரியாவுக்கு தெரிவித்துள்ளார். அந்த தந்தியில் 1903 நவம்பர் 12 ஆம் தேதி பாலாற்றில் பெருவெள்ளம் வந்ததால் சேலம் மாவட்டம், வாணியம்பாடி நகரம் மூன்றாக பிரிக்கப்பட்டு பாதி நகரம் முற்றிலும் மூழ்கிவிட்டது. பெரு வெள்ளத்தில் மூழ்கி இருநூறு மக்கள் தங்கள் உயிரை இழந்துவிட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த துயரசம்பவத்தை பம்பாய், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க பத்திரிக்கைகள் செய்தியாக வெளியிட்டுள்ளன. குறிப்பாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து வெளிவரும் தி கால் என்ற ஆங்கில பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பெருவெள்ள நிகழ்வை நினைவுக் கூறும் வகையில் வாணியம்பாடி நகரின் பிரதான சாலையான கச்சேரி சாலையில் சின்ன பாலாறு சந்தைமேம்பாலம் அருகில் நகராட்சி சார்பில் ஒருமுப்பட்டக வடிவிலான கல்தூண் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கல் தூணின் ஒரு பக்கத்தில் PALAR என்றும் ஒரு பக்கத்தில் MFL என்று பதிவு செய்து அளவு கோடுகளாக வெட்டப்பட்டுள்ளது. அந்த சாலையில் ஐந்தரை அடி உயரத்திற்கு வெள்ளம் போனதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கல் தூணின் தலைப்பகுதியில் VMC என்றும் அதனடியில் 12.11.1903 என்றும் செதுக்கப்பட்டுள்ளது.

 

The tragedy caused by Palaru; 200 civilians passes away in one night! Annual Memorial!

 

இந்த நினைவுத்தூணை இருபது ஆண்டுகளுக்கு முன்புதான் கண்டுபிடித்து அதன் வரலாற்று பிண்ணனிகளையும் கண்டெடுத்தனர். கடந்த 15 ஆண்டுகளாக நவம்பர் 12ஆம் தேதி  பாலாறு பெருவெள்ளத்தில் இன்னுயிரை இழந்த ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாலாறு பாதுகாப்பு சங்கத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் சமூக ஆர்வலர்கள் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் நவம்பர் 12 ஆம் தேதி நினைவாஞ்சலி செலுத்துவர். அதன்படி இந்த ஆண்டும் அஞ்சலி செலுத்தினர். அப்போது பாழடைந்த பாலாற்றை காக்க தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம், போராடுவோம் என்றனர்.