ஹிந்தி பாடல்கள், மணிரத்னம் படங்கள், கொரியன் சிரீஸ்கள், வீடியோ கேம்கள் என இளம்வயதினரின் எண்டர்டைன்மெண்ட் விருப்பம் காலம்தோறும் மாறிவருகிறது. அந்த வரிசையில் சமீபத்திய விருப்பமாக இருப்பது வெப் சிரீஸ்கள். சில ஆண்டுகளாகவே வெப் சிரீஸ்கள் மீதான மோகம் மெல்ல மெல்ல அதிகரித்து வந்தாலும் கரோனா காரணமான லாக்டவுனில் வெப் சிரீஸ்களின் ரீச் வேற லெவலில் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு ரசிகர்களிடையே அதிகம் பார்க்கப்பட்ட, பேசப்பட்ட வெப் சிரீஸ்கள் சில...
ஸ்காம் 1992
ஹே ஹே... என பலரை முனுமுனுக்க செய்து வருகிறது வெப் சிரீஸ் ‘ஸ்காம் 1992’. சமீபத்தில் வெளியாகி அனைத்து மொழிகளிலும் சக்கைப்போடு போடும் இந்த சிரீஸின் வெற்றிக்கதை, உண்மையிலேயே 90களில் மும்பை ஸ்டாக் மார்க்கெட்டில் ஹர்சத் மேத்தா என்பவர் நடத்திய ஊழலால் உருவானது. லியானார்டோ டிகாப்ரியோ நடிப்பில் வெளியான வுல்ஃப் ஆஃப் தி வால் ஸ்ட்ரீட் படத்தின் இந்திய வெர்ஷன் இது என்னும் அளவிற்குக் கொண்டாடப்படுகிறது. அனைத்து தளங்களிலும் இந்த சிரீஸின் ரேட்டிங் வெளிநாட்டு வெப் சிரீஸுக்கு இணையாக இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இன்றைய 90களின் பம்பாயை காட்டியிருப்பது பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. ஸ்டாக் மார்க்கெட் என்பது பலருக்கு தெரிந்திடாத ஒன்று, ஆனால் இந்த சிரீஸை பார்க்கும் அனைவருக்கும் அது பெரிய பிரச்சனையாக தெரியவில்லை என்பதுதான் இந்த சிரீஸ் இவ்வளவு கொண்டாடப்பட காரணம் என்று தோன்றுகிறது. அதேபோல இதில் நடித்திருக்கும் அனைவரது கதாபாத்திரமும் 'செம', அதற்கான நடிப்பும் 'செம'.
பாதாள் லோக்
நடிகை அனுஷ்கா ஷர்மா தயாரிப்பில் அமேசானில் வெளியாகி பெரும் எதிர்ப்பையும் வரவேற்பையும் சம்பாதித்த சிரீஸ். லாக்டவுன் சமயத்தில் வெளியான இந்த சிரீஸில் அரசியலின் நிழலுலகம் பேசப்பட்டிருக்கிறது. குறிப்பாக தலித் அரசியல், ஆணாதிக்க அரசியல், உத்தரப் பிரேதச அரசியல் என்று வட இந்தியாவில் நடைபெறும் பல பிரச்சனைகளை மையமாக வைத்து பேசப்பட்டிருக்கிறது. விறுவிறுப்பாகவும் உண்மைத் தன்மை பாதிக்கப்படாமலும் எடுக்கப்பட்டிருக்கும் இந்த சிரீஸின் அடுத்த பாகத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர் ரசிகர்கள். மற்றொரு பக்கம் இந்த சிரீஸின் இரண்டாம் பாகம் வெளியானால் பிரச்சனையாகிவிடும் என்று எதிர்ப்பையும் வெளிப்படுத்துகின்றனர்.
க்ராஷ் லேண்டிங் ஆன் யூ
இந்திய இராணுவ வீரர் பார்டரில் பணிபுரியும்போது பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணை காதல் செய்தால் எப்படி இருக்கும்?இதனுடைய கொரியன் வெர்ஷன்தான் க்ராஷ் லாண்டிங் ஆன் யூ என்னும் இந்த கொரிய சீரிஸின் கதை. ஹியுன் பின் என்னும் பிரபல கொரிய நட்சத்திரத்தின் நடிப்பில் வெளியாகி இந்த வருடத்தின் ஹிட் வரிசையில் இணைந்துள்ளது இந்த சிரீஸ். கொரியர்கள் பொதுவாக ரோம்காம் ஜானரில் கில்லாடிகள். அந்த யுக்தியை ஒரு சர்ச்சையான கதைக்களமான வடகொரிய இராணுவ வீரருக்கும் தென்கொரிய பெண்ணுக்கும் இடையே எதிர்பாராத சம்பவத்தால் நடைபெறும் சந்திப்பு - அதன்பின் நிகழும் காதல் என்ற பின்னணியில் பொருத்தி விளையாடியிருக்கிறார்கள். இப்போது இந்தியாவில் தங்கள் மொழி சிரீஸ்களோடு பார்ப்பதுபோல, கொரிய மொழி சிரீஸ்களும் பள்ளி மற்றும் கல்லூரி பெண்களின் லிஸ்ட்டில் இருக்கிறது. உலகமெல்லாம் பிடிஎஸ்க்கு (இசைக்குழு) அதிக செல்வாக்கு இருப்பதற்கு ஒரு முக்கிய காரணமும் இந்த கொரிய வெப் சீரிஸ்களின் இந்த பத்து ஆண்டு கால வளர்ச்சி என்றால் பார்த்துக்கோங்களேன். பார்க்காவதர்கள் கண்டிப்பாகப் பாருங்க, வொர்த்.
இட்ஸ் ஓகே டூ நாட் பி ஓகே
கொரிய சிரீஸ்களின் சூப்பர் ஸ்டாரும் அதிக தொகையை சம்பளமாகப் பெறும் நடிகருமானவர் கிம் சோ க்யூன். 2014ஆம் ஆண்டு வெளியான ‘லவ் ஃப்ரம் தி ஸ்டார்’ சிரீஸ் பலருக்கும் பரிச்சயமான ஒன்று. முழுக்க காதலில் நம்மை அழவைத்து, ரசிக்க வைத்து, சிரிக்க வைத்த 20 எபிசோட்களே கொண்ட மெகா தொடர். மெகா தொடர் என்று சொல்வதற்குக் காரணம் அதன் நீளமல்ல, அவ்வளவு செண்டிமெண்ட் காட்சிகள் நம்பை அழ வைக்க உள்ளே ரெடியாக இருக்கும் என்பதுதான். இதன்பின் பெரிய ஹிட் கொடுக்கவில்லை என்று அவருடைய ரசிகைகள் காத்திருந்ததற்கு, டபுள் ட்ரீட்டை இந்த வருடம் வெளியான இட்ஸ் ஓகே டூ நாட் பி ஓகே சிரீஸின் மூலம் கொடுத்திருக்கிறார். ஜானர் வேண்டுமானால் ரோம் காம் வகையாக இருக்கலாம், ஆனால் அதை நமக்கு காட்சிப்படுத்தியதிலிருந்து கரு வரை முழுக்க முழுக்க கொரிய ட்ராமா துறையின் வளர்ச்சி கண்ணில் தெரிகிறது. ஒரு தரமான படத்தின் ஒளிப்பதிவு, இசை, நடிப்பு என அனைத்திலும் நம்மை சிலிர்த்து சில்லரையை எறிய வைக்கிறார்கள்.
ஸ்பெஷல் ஓபிஎஸ்
ஸ்பை த்ரில்லர் ஜானரை சேர்ந்த இந்த வெப் சிரீஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியாவின் ராவில் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவில் இருக்கும் ஹிம்மத் சிங்கின் கீழ் ஐந்து பேர் வேலை பார்க்கின்றனர். இந்தியாவில் நடைபெற்ற ஒரு அட்டாக்குக்குப் பின் இருப்பது யார் என்பதை கண்டுபிடித்து, உலகெங்கும் சுற்றித்திருந்து அவர்களை வேட்டையாடும் உழவாளி கதை. மிகவும் விறுவிறுப்பாக செல்லும் இந்த சிரீஸ் வெறும் 8 எபிசோட்களே கொண்டது என்பதால் பார்ப்பவர்களுக்கு இன்னும் ஈஸியாக இருக்கிறது.
த குயின்'ஸ் கேம்பிட்
எப்படி இப்படி, இவ்வளவு பேர் பார்த்தார்கள் என்று தெரியாமல் சைலண்ட்டாக ஹிட் அடித்திருக்கிறது த குயின்'ஸ் கேம்பிட். தற்போதுவரை நெட்ஃபிளிக்ஸில் அதிக பேர் பார்த்த சிரீஸ் லிஸ்ட்டில் இதுவும் ஒரு இடம் பிடித்திருக்கிறது. 1950ஆம் ஆண்டு காலகட்டத்திலிருந்து நடைபெறும் கதைக்களத்தை கொண்டது. ஆதரவற்றோர் இல்லத்தில் வளரும் சிறுமி தனக்கு சதுரங்க விளையாட்டில் அபார திறமை இருப்பதை கண்டுபிடித்து, அதனை பயன்படுத்தி முன்னேறுகிறார். ஆணாதிக்க உலகத்தில் பெண்ணாகப் பிறந்த ஒருவர் எப்படி அதிகாரத்தையும், வர்க்க பாகுபாட்டையும், போட்டியையும், பிறரின் தொல்லையையும் எப்படி எதிர்க்கொண்டு கெத்தாக வாழ்கிறார் என்பதுதான் கரு.
இந்த வருடம் பல இந்தி வெப் சிரீஸ்கள் ஓடிடியில் கொட்டிக்கிடக்கின்றன. அது போல சில அடல்ஸ் ஒன்லி வகைகளும் இந்தியில் வந்திருக்கின்றன. லாக்டவுனை பயன்படுத்தி தற்போதுதான் தமிழில் அந்தாலஜி படங்கள் நிறைய வர தொடங்கியுள்ளன. கடந்த வருடம் ஜிவிஎம் மற்றும் கிடாரி இயக்குனர் பிரசாத் இணைந்து குயின் என்ற வெப் தொடரை இயக்கியிருந்தது பெரிதும் பேசப்பட்டது. ஆனால், இந்த வருடம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தமிழில் வெப் சிரீஸ்கள் வரவில்லை. ஆனால், அடுத்த வருடம் தமிழிலும் பல சிரீஸ்களை எதிர்பார்க்கலாம் என்று தோன்றுகிறது. இதுமட்டுமல்லாமல் இந்த வருடம் பல அதிரடி சூப்பர் ஹிட் வெப் சிரீஸின் அடுத்த பாகங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு லாக்டவுன் விருந்தாக அமைந்தன. குறிப்பிட்டு பார்த்தால், மணி ஹெய்ஸ்ட்-4, டார்க்-3, தி க்ரவுன்-4, தி பாய்ஸ்- 2, மாண்டலோரியன்- 2 போன்று பல சிரீஸ்கள் வெளியாகியுள்ளன. கடந்த வருட ஹிட்டை தொடர்ந்து தற்போதுதான் குக் வித் கோமாளி சீஸன் 2வும் ஒளிபரப்பாகி வருகிறது. இதையும் பின்ஜ் வாட்ச் செய்ய ரசிகர்கள் ஏராளம் என்பது குறிப்பிடத்தக்கது.