Skip to main content

எட்டிப் பார்க்கும் வறுமை!

Published on 15/04/2020 | Edited on 15/04/2020

 

கரோனா வைரஸ் எனும் உயிர்க் கொல்லி உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இந்நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, இந்தியா முழுவதும் 40 நாட்கள் ( மார்ச் 23 முதல்  மே 3) வரை 144 தடை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
 

காட்டுத் தீ போல் பரவி மக்களின் இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட கரோனா, தீவிரமடைந்துள்ள நிலையில் இவவைரசைக் கட்டுப்படுத்த மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலை நீடித்தால் பல குடும்பங்களில் வறுமை எட்டிப் பார்க்க வாய்ப்புள்ளது.

உலகப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. 
 

நிலைமை சீரடைய, உடனடியாக மீண்டெழ காலதாமதமாகும் என்று பொருளாதார வல்லுனர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். 
 

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமரின் ஏழைகள் நிதி உதவி (கரீப் கல்யாண் யோஜனா) திட்டத்தின் கீழ் 30 கோடி ஏழை-எளிய மக்களுக்கு ரூபாய் 28,256 கோடி மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

ffff

                                                              பி.விஜயலட்சுமி


பிரதமரின் விவசாயிகள் உதவித் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட 8 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தலா ரூபாய் 2,000 வீதம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், பிரதமர் மக்கள் நிதி திட்டத்தின் கீழ் (ஜன்தன்) வங்கியில் கணக்கு வைத்துள்ள 19.86 கோடி பெண்களுக்கு தலா ரூபாய் 500 வீதம் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாகவும், தேசிய சமூக உதவித் திட்டத்தின் (என்.எஸ்.ஏ.பி.) கீழ் 2.82 கோடி முதியோர், விதவை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 1,400 வீதம் கருனைத் தொகையாக அளிக்கப் பட்டதாகவும் நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

மாநில அரசு நிவாரணத் தொகை  ரூபாய் 1,000/- மற்றும் அரிசி, எண்ணெய், சர்க்கரை, பருப்பு மற்றும் கோதுமை போன்ற மளிகைப் பொருட்கள் வழங்கியது.
 

http://onelink.to/nknapp


மேலும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நல வாரியத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு உதவித் தொகையாக ரூபாய் 1,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
 

பொருளாதார ரீதியில் நலிவடைந்த பெரும்பாலான மக்கள் அன்றாடம் வருமானம் ஈட்டும் தொழிலாளர்கள், சிறு-குறு வணிகர்கள், நடுத்தர தொழில் நிறுவனங்கள்,  நல வாரியத்தில் பதிவு செய்யாமலும், இது குறித்து அறியாமலும் இருக்கின்றனர்.
 

இவர்களின் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாகிறது?
 

ccccc


             அபர்ணா                ஜெயசெல்வி                 பிரதீபா                       ரேணுகா



பின்தங்கிய நிலையில் உள்ள  நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் வேதனையுடன் தெரிவித்ததாவது: -
 

ரேணுகா:- நான் ‘தையல்’ வேலை செய்கிறேன். எனக்கு அப்பா இல்லை. அம்மா மற்றும் ஒரு சகோதரர். வாடகை வீட்டில் வசிக்கிறோம். நான் துணி தைத்தால்தான் எங்களுக்கு வருமானம். கிட்டத்தட்ட ஒரு மாதம் வருமானம் இல்லை. யாரிடம் உதவி கேட்பது? மிகவும் கவலையாக உள்ளது. எனக்குத் திருமனம் ஆகவில்லை. என் அம்மா எப்படி வாழ்க்கை நடத்துவதென்று வேதனைப்படுறாங்க. மோடி என்னென்மோ திட்டங்கள் சொல்றார். அதெல்லாம் என்னான்னே தெரில! எங்களுக்கும் பேங்கில பணம் போட்டா என்னவாம். செய்தால் கஷ்டப்படுறவங்க எல்லார்க்கும் செய்யணும். வறுமை வந்துவிடுமோன்னு பயமா இருக்கு!
 

ஜெயசெல்வி: நான் வீட்டு வேலை செய்கிறேன். கிடைக்கும் வருமானத்தில் வீட்டு வாடகை, குடும்பச் செலவு மற்றும் அத்தியாவசியச் செலவுகளை ஒவ்வொரு மாதமும் நெருக்கடி நிலையில் குடும்பம் நடத்துவேன். இந்நிலையில் தொடர்ந்து வேலையில்லை என்றால் குடும்பம் நடத்துவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. மத்திய – மாநில அரசுகள் மக்களுக்கு இதைச் செய்றோம்  - அதைச் செய்றோம்ன்னு சொல்றாங்க. எங்களுக்கு 1000 ரூபாயும், ரேசன் சாமானும் கொடுத்தாங்க. வேற எதுவும் கொடுக்கவில்லை. ஏதாவது உதவி செய்தாங்கனா கொஞ்சம் கஷ்டம் இல்லாம நல்லா இருக்கும். இப்பவே மண்டைய பிச்சிக்குது. மேலும் வறுமை நிலையைச் சந்திக்க நேரிடுமோன்னு அச்சம் ஏற்படுது!
 

பிரதீபா: என் வீட்டுக்காரர் ‘சேல்ஸ்’ வேலை செய்கிறார். பொருளை விற்றால்தான் சம்பளம் கிடைக்கும். வருமானம் பத்தாமல் என் அம்மா வீட்டில்தான் இருக்கிறோம். இப்ப கரோனாவால் வெளியில் போகக்கூடாதுன்னு சொல்றாங்க. யார்கிட்டனா கடன் கேட்டாலும், எங்களுக்கே வருமானம் இல்லைன்னு சொல்றாங்க.  என்ன பன்றதுன்னு தெரியலே. மெல்ல வறுமை நிலைக்கு வந்து விடுவோமோன்னு ஒரே சங்கடமா இருக்கு. வீட்ல இருங்கன்னு சொல்றாங்க. நம்ம நல்லதுக்குத்தான் சொல்றாங்க. பேங்க்ல ஒரு 5,000 ரூபாய் போட்டாங்கனா, சாப்பாட்டுக்கு கவலையில்லாம வீட்ல இருப்போம். நாங்கள் பெண்கள் கஷ்டத்தை வெளியிலே சொல்றோம்.  பாவம் ஆண்கள் வருமானம் இல்லாம வெளிய சொல்லமுடியாம தவிக்கிறாங்க.
 

அபர்ணா: என்னமா, இந்த கரோனா வந்து இப்படி எல்லாரையும் வீட்ல உக்கார வெட்ச்சிடுச்சி. நான் ‘எக்ஸ்போர்ட்’ல வேல செய்றேன். பீஸ் ரேட்டு. எனக்கு கணவர் இல்ல. வாடகை வீடு. 2 பசங்க. இத்தன நாளா வீட்ல இருக்கேன். எப்படி குடும்பம் நடத்துறது. இருக்கிற பொருளை அடமானம் வைத்துதான் வாழ்க்கை ஓடுது. வேற எதுவும் இல்ல. இன்னும் 2  வாரம் வீட்ல இருக்கணும்னு சொல்றாங்க. கவர்மென்ட் எதாவது செய்யணும். பேங்கில பணம் போட்றாங்கன்னு சொல்றாங்க. எங்களுக்கு ஒன்னும் வந்த மாதிரி தெரியல. கவர்மென்டுதான் பொறுப்பு. அவங்கதான் எங்கள மாதிரி ஏழ்மை நிலையில் இருக்கிறவங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். சும்மா மக்கள ஏமாத்தக்கூடாது. அப்பதான்  இவங்க சொல்ற  மாதிரி வீட்ட விட்டு வெளியே வராம இருக்க முடியும்.
 

உண்மையில் வாழ்வாதாரத்தை இழந்து துன்பப்படுபவர்களை அடையாளம் கண்டு மத்திய – மாநில அரசுகள் நிவாரணம் வழங்கவேண்டும். வரும் வருமானத்தை நம்பி அன்றாடம் குடும்பத்தை நடத்தும் நடுத்தர கீழ்த்தட்டு மக்களின் நிலைதான் மிகவும் கேள்விக்குறியாகியுள்ளது.  அரசின் பல திட்டங்கள் இவர்களைப் போல் உள்ளவர்களுக்குச் சென்றடைவதில்லை. மத்திய  - மாநில அரசுகள் ஏழை – எளிய மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்யவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் ஒருமித்த கருத்தாகும்.
 

http://onelink.to/nknapp


சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்போம். விழித்திருப்போம். விலகியிருப்போம். கரோனாவின்  கோரப்பிடியிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வோம்!
 


பி.விஜயலட்சுமி
சமூக ஆர்வலர்
pvssaravan@gmail.com