கரோனா வைரஸ் பரவுதலால் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வுகள் நடக்குமா? நடக்காதா? என்கிற குழப்பங்கள் பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் அதிகரித்தப்படி இருக்கிறது. இது குறித்து உறுதிப்படுத்தப்படாத பல்வேறு தகவல்கள் சோசியல் மீடியாக்களில் வலம் வருவதால், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்குப் புகார்கள் குவிகின்றன.
![K. A. Sengottaiyan](http://image.nakkheeran.in/cdn/farfuture/9hHK5FkbY-qoBS6koATbWtoFeCRBynqHlLUUvc5_Mdc/1586592637/sites/default/files/inline-images/401_16.jpg)
இதனையடுத்து, கல்வித்துறை அதிகாரிகளிடம் கலந்து பேசிவிட்டு, முதல்வர் எடப்பாடியிடம் விவாதித்தார் அமைச்சர் செங்கோட்டையன்.
அப்போது, ’’அரசு மற்றும் அரசு சாராத பணியிடங்கள், மேற்படிப்புகள் உள்ளிட்ட அனைத்திற்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்பது மிக முக்கியமாக இருக்கிறது. அதனால் தேர்வு நடத்தாமல் ஆல் பாஸ் என்கிற நிலைப்பாட்டை எடுக்க முடியாது. அதனால், கரோனாவின் தாக்கம் குறைந்ததும் தேர்வு நடத்தப்படும். ஊரடங்கு நீடிக்கும் பட்சத்தில், இந்தத் தேர்வை எப்படி, எப்போது நடத்தலாம் என்பதை ஆராயலாம். அதனால் தேர்வு நடத்துவது உறுதி.
தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் முடிவு தெரியாமல் கல்வித்துறை அதிகாரிகள் கருத்து சொல்லக்கூடாது. ஊரடங்கு நீடிக்கும் நிலையில், ஏப்ரல் இறுதி அல்லது மே இரண்டாவது வாரத்தில் தேர்வு நடத்துவது குறித்து முடிவு செய்வோம். பாதுகாப்பாக தேர்வுகளை நடத்துவதற்கும், தேர்வர்கள் அதிக தூரம் செல்லாமல் அந்தந்த பகுதிகளிலேயே தேர்வுகளை எழுதுவதற்கேற்ப மையங்களை உருவாக்குவது பற்றியும் விவாதிப்போம் ’’ என்பது உள்ளிட்ட விசயங்களை செங்கோட்டையனிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார் எடப்பாடி.