1930 மார்ச் 12-ஆம் தேதி ஆங்கிலேயர்கள் விதித்த உப்பு வரியை எதிர்த்து மகாத்மா காந்தி அவர்களின் தலைமையில் வெறும் 78 சத்யாகிரகவாசிகளுடன் தொடங்கி, பல்லாயிரகணக்கான சுதந்திர போராட்ட வீர்களின் அறப்போரால் வெற்றியடைந்த தண்டி யாத்திரை ஆரம்பித்த நாள்.
பெரும்பணக்காரர்கள் முதல் அடித்தட்டு மக்கள் வரை அனைவருக்கும் அத்தியாவசிய பொருளாக இருக்கும் உப்பின் மீது வரிச்சுமையை விதித்த ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து மாபெரும் அறப்போர் நடத்தி, போராட்டத்தின் முடிவில் உப்பு காய்ச்சி ஆங்கில அரசை கதிகலங்க செய்த முக்கிய போராட்டங்களில் தண்டி யாத்திரையும் ஒன்று. அகமதாபாத்திலிருந்து, குஜராத் மாநிலத்தின் நவ்சாரி மாவட்டத்தில் உள்ள சிறிய கடற்கரை கிராமான தண்டி வரை மொத்தம் 24 நாட்கள், 241 கிலோமீட்டர் தொடர் நடைப்பயணத்தின் மூலம் 4 மாவட்டங்கள் உட்பட சுமார் 48 கிராமங்களை கடந்து சென்று உப்புக்காய்ச்சிய அந்த அறப்போராட்டம் வரலாற்றின் வியத்தகு நிகழ்வாகும்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் ''இந்திய சுதந்திர போர்'' என்ற நூலில் காந்தியின் தண்டியாத்திரையைப் பற்றி குறிப்பிடுகையில், 'நெப்போலியன் எல்பாவில் இருந்து திரும்பியவுடன், பாரிஸ் நகர் நோக்கி நடந்த காட்சியுடனோ, அல்லது முசோலினி இத்தாலியில் அரசியல் ஆதிக்கத்தை கைப்பற்ற ரோம் நோக்கி நடந்த காட்சியுடனோ இதை ஒப்பிட முடியும் அந்த அளவுக்கு சிரத்தை வாய்ந்தது காந்திஜியின் தலைமையில் நடந்த அந்த நிகழ்வு' என கூறியுள்ளார்.
தன்னுடைய 61-வது வயதில் மூட்டு வலியுடன் நடக்கமுடியாத நிலையிலும், பயணம் பாதியில் முடிந்தால் என்ன ஆவது என அதற்கு ஏற்பாடு செய்திருந்த குதிரையை நிராகரித்துவிட்டு, ஒரு குச்சியியை மட்டும் ஊன்றிக்கொண்டு, மக்களோடு மக்களாக பெரும் உணவு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற இந்த பயணம்தான் வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்யாகிரகத்திற்கு முன்னோடி ஆகும்.
''நாளை உப்புடன் திரும்பி வருவேன் அல்லது என் உடல் பிணமாக கடலில் மிதக்கும், இதில் எதாவது ஒன்றுதான் நடக்கும்'' என அவர் ஆற்றிய வீரவுரை மக்களையும் தண்டியாத்திரையில் பங்குபெற செய்தது. காந்தி நினைத்திருந்தால் இரயிலிலோ, மோட்டரிலோ பயணித்து ஏதோ ஒரு கடற்கரையில் சட்டத்தை மீறியிருக்கலாம். ஆனால் தேசப்பற்றுடன் ஒரு விரதமாக, அறைகூவலுடன் மக்களின் ஒருமித்த ஈர்ப்பை பெற்று ஆங்கிலேயரை கதிகலங்கச் செய்த அந்த நிகழ்வு சரித்திரத்தில் என்றும் அழிக்கமுடியாத ஒன்றுதான்.