Skip to main content

இளசுகளை இழுக்கும் கொடைக்கானல்! 

Published on 16/02/2020 | Edited on 17/02/2020

“உலகத்துல எந்தெந்த நாட்டுல அந்தமாதிரி சமாச்சாரத்துக்கு கட்டுப்பாடு இல்லைங்கிறது நெட்ட தட்டினா தெரிஞ்சி போயிரும். அதுக்காக, ஃபிளைட் பிடிச்சு அந்த நாட்டுக்கெல்லாம் பறந்து போயி,  ஜாலி பண்ண முடியுமா? அவ்வளவு பணம் எங்கேயிருக்கு? அதுக்கெல்லாம் நேரமும் இல்ல.  வேலை வேலைன்னு ஐ.டி. கம்பெனிங்க  மண்டை காய வச்சிருது. காலேஜுக்கு போனப்புறமும் படிப்பு படிப்புன்னு ஸ்கூல் லெவல்லதான் பசங்கள ட்ரீட் பண்ணுறாங்க. எத்தை தின்னா பித்தம் தெளியும்கிற கணக்கா,, மாசத்துக்கு ஒண்ணு ரெண்டு நாளு..  எங்கேயாச்சும் கண்காணாத இடத்துக்குப் போயி, இந்தக் குடும்பம், படிப்பு, அப்புறம் வேலைன்னு எல்லாத்தயும் மறந்து ‘என்ஜாய்’ பண்ணிட்டு வந்தா நல்லாத்தானே இருக்கும்?

 

kodanikanal incident... police investigation

 

அதான் சார், வாட்ஸ்-ஆப்ல  ‘வாங்க, எல்லாரும் ஒண்ணா சேர்ந்து கூத்தடிக்கலாம். ஆயிரம் ரூபாதான் சார்ஜ். கண்ட்ரோல் இல்லாத போதைக்கு நாங்க கேரண்டி. கஞ்சா, போதைக்காளான், போதை ஸ்டாம்புன்னு இங்கே எல்லாம் கிடைக்கும். அப்புறம் விஸ்கி, பிராந்தி, ரம்முன்னு சகலமும் உண்டு. இதுக்கெல்லாம் மேல, கேர்ள்ஸ் வேணும்னா.. ஸாரி பிரதர்.. நீங்கதான் கூட்டிட்டி வரணும்னு சொன்ன அந்த நேர்மை எங்களுக்கு ரொம்ப பிடிச்சது. போதைக்கு அப்புறம் ஜோடி சேர்ந்து ஒதுங்கிறதுக்கு சின்னச் சின்ன டென்ட் வசதியெல்லாம் பண்ணி வச்சிருக்கோம்னு சொன்னா, எங்கள மாதிரி பசங்களுக்கு ஆசை வருமா, வராதா? வந்திருச்சு சார். அதான் இங்கே வந்தோம். இப்ப, உங்ககிட்ட மாட்டிக்கிட்டோம்.”

கொடைக்கானல், கூக்கால் குண்டுபட்டியில் நடந்த திறந்தவெளி கேளிக்கை விருந்தில் கலந்துகொண்ட வெளிமாநில ஆண்களும் பெண்களும்,  தங்களைச் சுற்றிவளைத்த காவல்துறையினர் ‘இங்கே எதுக்கு வந்தீங்க’ என்று கேட்டபோது, போதை தெளிந்த நிலையில் கூறிய விளக்கம் இது!

 

kodanikanal incident... police investigation

 

போதை மேளாவில் கலந்துகொண்ட இளைஞர்களும் பெண்களும் எதிர்காலம் கருதி எச்சரித்து அனுப்பப்பட்ட நிலையில், குடிலின் உரிமையாளர் கற்பகமணி, புரோக்கர்கள் ஹரீஷ்குமார், தருண்குமார் ஆகிய மூவரும் கைதாகியிருக்கின்றனர். அவர்களிடம்   ‘உங்க மனசுல என்னதான்டா நினைச்சுக்கிட்டிருக்கீங்க?’ என்று காக்கிகளில் ஒருவர் ஃப்ரன்ட்லியாக கேட்டுவிட்டு, ‘எனக்கும்கூட ரிலாக்ஸ் தேவைப்படுது. ஆனா.. அதுக்கு வழியில்ல.’ என்று போட்டு வாங்கியபோது,  ‘இது ரொம்ப ரொம்ப சீக்ரட்.  உங்ககிட்ட மட்டும்தான் சொல்லுறேன்.’ என்று  மூவரில் ஒருவன் சொன்ன விஷயம், அந்தக் காக்கியை வியர்க்க விறுவிறுக்க வைத்திருக்கிறது.


“சார்.. டொமினிகன் ரிபப்ளிக் கேள்விப்பட்டிருக்கீங்களா? ஹெய்த்தி எங்கேயிருக்குன்னு தெரியுமா? எதுக்கு நம்ம நாட்டுல இருந்து தாய்லாந்து, பாங்காக் போறாங்க? கென்யா, கம்போடியா, பிலிப்பைன்ஸ் அப்புறம் பிரேசில்ன்னு நெறய இடங்கள் இருக்கு சார். நான் சொன்னதெல்லாம் செக்ஸ் டூரிஸத்துக்கு உலகளவுல ஃபேமஸான நாடுகள். ஃப்ரீ செக்ஸ். அங்கே சர்வசாதாரணம். அப்பப்ப,  எல்லாரும் ஒரே இடத்துல ஒண்ணு கூடுவாங்க. திறந்தவெளில அங்கே யாரும் எதுவும் பண்ணிக்கலாம். மேக்சிமம்,  யாரு உடம்புலயும் டிரஸ் இருக்காது. அவங்களும் மனுஷங்கதான், நாமளும் மனுஷங்கதான். ஃபீல் எல்லாருக்கும் ஒண்ணுதான். இங்கேயும் கோவாவுல நடக்குது. ஆலப்புழா படகு வீடெல்லாம்  செக்ஸ் டூரிஸத்துக்கு ரொம்ப ஃபேமஸ். அதுமாதிரி, இங்கேயும் (கொடைக்கானல்) கொண்டு வந்துடனும்னு ட்ரை பண்ணுனோம்.

2014-ன்னு நினைக்கிறேன். இதே மாதிரிதான்..  இங்கே பூம்பாறைல போதைல டிரஸ்ஸ அவிழ்த்துப் போட்டுட்டு ஆணும் பெண்ணும் ஆடுனாங்க. சார், உங்க டிபார்ட்மெண்ட் வரைக்கும் விஷயம் போச்சு. பேரம் பேசி சரிக்கட்டிட்டாங்க. அப்புறம், விஷயம் மேல வரைக்கும் போயி, டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்ன்னு சஸ்பென்ட் ஆனாங்க. ரெண்டு வருஷத்துக்கு முன்னால, இங்கே வட்டப்பாறைல அஞ்சு கேரள பசங்க ரூம் போட்டு போதை காளானை தேன்ல முக்கி சாப்பிட்டப்ப, ஒருத்தன் செத்துட்டான். ஆனா, இப்ப வரைக்கும் போதைக்காளான் கிடைச்சுக்கிட்டுத்தானே இருக்கு.” என்று விவரமாகப் பேசியிருக்கிறான்.

 

kodanikanal incident... police investigation

 

கொடைக்கானல் – மேல்மலையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான திருமுருகன்,  “மொத்தம் 270 பேரு. அதுல 6 பேர் பெண்கள். கலாச்சாரப் பெருமை பேசுற தமிழ்நாட்டுல இதெல்லாம் நடந்துக்கிட்டிருக்கு. படிச்ச புள்ளைங்கதானே? போதைல எதுவும் நடக்கும்னு அவங்களுக்குத் தெரியாதா? இந்தமாதிரி இடத்துக்கு வர்ற புள்ளைங்கள என்ன வேணும்னாலும் பண்ணலாம்னு அந்தக் கூட்டத்துல எவனாச்சும் அத்துமீறிட்டான்னா, தடுக்கிறதுக்கோ, சத்தம் போடறதுக்கோ கூட சக்தி இருக்காதே? நெனச்சுப் பார்த்தாலே ஈரக்குலை நடுங்குது. ஆனா பாருங்க, அதுங்களும் பயப்படாம வந்து கூத்தடிச்சிருக்குங்க. என்னமோ சொல்லி ஏமாத்தி பொம்பள புள்ளைங்கள இங்கே கூட்டிட்டு வந்திருக்கானுங்க.

இதெல்லாம் விவசாய நிலம்ங்க. ரிசார்ட்டுக்குன்னு வாங்கிப் போட்டிருக்காங்க. அடிக்கடி, இந்த மாதிரி நடக்குது. போதைல அவங்க கெடறதும் இல்லாம, இங்கேயிருக்கிற பசங்களயும் கெடுக்கிறாங்க. போலீஸ்காரங்களும், பணத்தை வாங்கிட்டு எதுவும் பண்ணட்டும்னு கண்டும்காணாம இருக்காங்க. பார்த்தீங்கன்னா, கெட்ட மனசோட வெளிமாநிலத்துல இருந்து இங்கே வர்றவங்களோட பார்வை,  எங்க வீட்டுப் புள்ளைங்க மேல பட்றக்கூடாதுன்னு நாங்கள்லாம் பயந்து வாழ வேண்டியிருக்கு.” என்று அப்பகுதி மக்களின் அச்சத்தை வெளிப்படுத்தினார்.    

‘இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன?’ உளவியல் நிபுணர் டாக்டர் சி.ஆர்.சுப்பிரமணியனிடம் கேட்டோம்.

 

kodanikanal incident... police investigation

 

“மன அழுத்தம், கலாச்சார சீரழிவு, பெற்றோரின் பங்குன்னு இதுல மூணு விஷயம் இருக்கு. ஐ.டி. கம்பெனில வேலை பார்க்கிறாங்க; நல்லா சம்பாதிக்கிறாங்கன்னு பிள்ளைங்களோட தனிப்பட்ட வாழ்க்கைய கவனிக்காம விட்றாங்க. கேளிக்கை நோக்கத்தோடு காடு, மலைகளுக்கு  பார்ட்டி கொண்டாட வர்றவங்களுக்கு சுய கட்டுப்பாடுங்கிறது இல்லை. சூழ்நிலைக் கட்டுப்பாடும் இல்லை. இவங்கள வேலைக்கு வச்சிருக்கிற ஐ.டி. நிறுவனங்களுக்கும்  சமூக பொறுப்புங்கிறது இல்ல. இவங்க ஏன் இப்படி நடந்துகிறாங்கன்னு, பீரியாடிக் கவுன்சிலிங்ல கண்டுபிடிச்சிடலாம். வித்தியாசமா இருக்கேன்னு போதைக்காளான் மாதிரி போதைப் பொருட்களை உட்கொள்வது, ரொம்ப சிக்கல்ல கொண்டுபோய் விட்ரும். இது, தலைல இருந்து கால் வரைக்கும், எழும்புல இருந்து தோல் வரைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த போதைப்பொருள், அவனை மட்டுமல்ல, அவனது குடும்பத்தையும், அவன் சார்ந்திருக்கும் சமுதாயத்தையும் கடுமையாக பாதிக்கும். இன்னும் சொல்லப்போனா, இதுவும் கரோனா வைரஸ் மாதிரிதான். ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்கிற மாதிரி, நாட்டுல எங்கெங்கோ நடந்துக்கிட்டிருக்கு. இங்கே கொடைக்கானல்ல மாட்டிருக்காங்க. இதை ஏற்பாடு பண்ணுனவங்களுக்கு கடுமையா தண்டனை கொடுக்கணும்.” என்றார்.

போதை தரும் தற்காலிக  இன்பம், நிரந்தர துன்பத்தில் ஆழ்த்திவிடும் என்பதை அறியாதவர்களாக, பெண்களும் போதை நட்புக்களோடு கைகோர்த்து திரிவது கொடுமைதான்!