தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான திவ்யா துரைசாமியை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம்.
அப்போது அவர் கூறியதாவது, "எனக்கு பிடித்து தான் சினிமாவுக்கு வந்துருக்கேன். செய்தி வாசிப்பாளராக நிறைய தொலைக்காட்சி சேனல்களில் பணியாற்றியுள்ளேன். செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய போது, படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இது கடினமானது என்றாலும், மகிழ்ச்சியடைகிறேன். சினிமாக்குள் வருபவர்களுக்கு நடிகையாக வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். பாண்டிய ராஜ் சார் படம், சன் பிக்சர்ஸ் புரொடெக்சன்னு சொல்லும் போது, யார் தான் வேண்டாம்னு சொல்லுவாங்க. எனக்கு பிடித்துத் தான் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தேன்.
ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு பொலிட்டிகள் ஸ்டாண்ட் இருக்கணும்; எனக்கும் இருக்கிறது. நான் செய்தி வாசிப்பாளராக இருந்த போது, நான் கூறிய ஒரு கருத்துக்காக, என்னுடைய தொலைபேசி எண்ணை எடுத்து போர்ன் இணையதளத்தில் பதிவிட்டு விட்டார்கள். எனினும், நான் இன்னும் தொலைபேசி எண்ணை மாற்றவில்லை. அதே எண்ணை தான் தற்போதும் வைத்திருக்கிறேன். எதற்காக என்னுடைய தொலைபேசி எண்ணை மாற்ற வேண்டும்? நான் ரொம்ப மன உளைச்சலை சந்தித்தேன். தொடர்ச்சியாக, என்னுடைய தொலைபேசிக்கு அழைப்பு வந்துக்கிட்டே இருந்தது; அதை சமாளித்தேன்.
எதற்கும் துணிந்தவன் படத்தில் எல்லாரோடயும் எனக்கு தனித்தனி சீன் இருக்கும். இருப்பினும், படத்தின் பாதிக்கு பிறகு வரும் ஷாட்டில் எல்லாருமே இருப்பார்கள். என்னை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பார்கள். நடுவில் நின்று கொண்டு கதை சொல்லிக்கொண்டு இருப்பேன். அது மறக்கவே முடியாத நினைவுகள். கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது, அ.தி.மு.க. நிகழ்ச்சிகளில் பெரும்பாலானவையை நான் தொகுத்து வழங்கியுள்ளேன். ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்கிறார்கள் என்றால், முதல் ஆளாக எனக்கு தகவல் கொடுத்து விடுவார்கள். இந்த தேதியை குறித்து கொள்ளுங்கள்; நான் இல்லை என்று சொன்னால், இந்த நிகழ்ச்சியை நீங்கள் தொகுத்து வழங்க வேண்டும் என்பார்கள். முதலமைச்சரின் விருப்பம் என்பார்கள்.
எனக்கு தமிழினால் கிடைத்த அங்கீகாரம் என்று நான் நினைக்கிறேன். சுதந்திர தினம், குடியரசு தினம், புதிய மாவட்டங்கள் உருவாக்கம், புதிய கல்லூரிகள் தொடக்கம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுதி வழங்கியுள்ளேன். எடப்பாடி பழனிசாமி சார் முதலமைச்சராவதற்கு முன்பு வரைக்கும் எவ்வளவு பேருக்கு அவரை தெரியும் என்று நமக்கு தெரியாது. ஆனால், முதலமைச்சரானதில் இருந்து ஒட்டுமொத்த கட்சியையும், பொதுமக்களையும் தன்னை கவனிக்க வைத்து, நான்கரை ஆண்டு கால ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தது வேற லெவல். நான் பார்த்த வரைக்கும் ஓ.பன்னீர்செல்வம் ரொம்ப அமைதியானவர். நிகழ்ச்சிகளில் அமைதியாக இருப்பார்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.