கரோனா எனும் கொடிய வைரஸ் தமிழகத்தை ஆக்கிரமித்து கொண்ட கணம்தொட்டே அதன் பாதிப்பும், அதனால் ஏற்பட்ட மரணங்களின் விகிதமும் ஏறிக்கொண்டே போவதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பதற்றத்திலும், பயத்திலும் முடங்கிப்போனது. வருமானமின்றி தவிக்கும் மக்கள் ஜீவாதாரத்திற்கே போராட வேண்டிய இரட்டை தாக்குதல் இது. போதாக்குறைக்கு நகர நிர்வாகங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடமில்லை. மாறாக தற்போதைய கரோனா ஆதிக்கத்தால், நிர்வாகங்கள் அந்தந்த காவல் சரக அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினரின் வசம் போனதால், இவர்களின் அலப்பறையும் சேர்ந்து மக்கள் மேல் மும்முனைத் தாக்குதல் நடத்துகிறது. அதன் ஒரு பதம்தான் கடந்த நக்கீரனில் தூத்துக்குடியில் நடந்த போலீஸ் மற்றும் வருவாய்த் துறையினரின் இரட்டை தர்பார் பற்றிய விவரிப்பு. குறிப்பாக இதில் காவல்துறையின் எல்லை மீறலால் நடந்த தந்தை மகன் இருவரின் அடுத்த மரணங்களால் தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம் கொந்தளித்துப் போய்க்கிடக்கிறது.
சாத்தான்குளம் நகரிலிருக்கும் ஜெயராஜ் 60 வயது முதியவர். நகரின் பழைய பேருந்து நிலையமருகே தன் ஒரே மகன் பென்னிக்ஸ் இமானுவேலுக்கு செல்போன் கடை வைத்துக் கொடுத்தவர், மரக் கடை வியாபாத்திலுமிருக்கிறார்.
கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு சில இடங்களில் கடுமையாக்கப்பட்டாலும், பல பகுதிகளில் தளர்வும் அறிவிக்கப்பட்டு, இரவு 9 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதி என்று அரசும் அறிவித்திருக்கிறது. பாமர மக்கள் அரசின் அறிவிப்பைத்தான் நம்புகிறார்கள், நடக்கும் என்று எண்ணுகிறார்கள் ஆனால் அரசின் அறிவிப்பு லோக்கல் அதிகாரிகளிடம் செல்லுபடியாவதில்லை. காரணம் அங்கு அவர்கள் வைத்ததுதான் சட்டமாக்கப்படுகிறது, அதற்கு சாத்தான்குளமும் தப்பவில்லை.
கடந்த 18 அன்று 7 மணியளவில் பென்னிக்ஸ் இமானுவேல் தன் செல்போன் கடையை பூட்டிவிட்டு பக்கத்திலுள்ள கடையின் முன் நின்றிருக்கிறார். அதுசமயம் ரோந்து வந்த எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், கடைய அடச்சிட்டு போவ வேண்டியது தானல, ஏம் நிக்கீக என அதட்டியிருக்கிறார். சார் நான் கடைய அடைச்சிட்டேன், இப்ப போயிறுவேன் என்று பென்னிக்ஸ் சொல்ல, முறைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.
அதன்பின் அங்கு வந்த தன் தந்தை ஜெயராஜிடம் போலீசார் நடந்து கொண்டதை யதார்த்தமாகவே சொல்லியிருக்கிறார் பென்னிக்ஸ். இதனால் ஆத்திரமடைந்த ஜெயராஜ் 9 மணிவரை கடை இருக்கலாம்னு தான அரசு அறிவிப்பு என்றவர் யதார்த்தமாகவும் அவர்களுக்குள்ளேயே பேசியிருக்கிறார்கள். இவர்களின் பேச்சை டேப் செய்த போலீஸ்காரர் ஒருவர், அந்த ஆடியோவை எஸ்.ஐ. பாலகிருஷ்ணனுக்கு அனுப்பியிருக்கிறார்.
மறுநாள் மாலை கடுப்போடு செல்போன் கடைக்கு வந்த எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், அங்கிருந்த ஜெயராஜிடம் என்னவே போலீசயே எதுத்துப் பேசுவியா என்று அரட்டியவர், அவரை ஸ்டேஷனுக்குக் கொண்டு போயிருக்கிறார். தன் தந்தையை ஸ்டேஷன் கொண்டு போனதையறிந்த மகன் பென்னிக்ஸ் மாலை 6 மணிவாக்கில் ஸ்டேஷன் போயிருக்கிறார். அங்கே போலீசின் நடைமுறையில் கவனிப்புகளாம்.
அதன் பிந்தைய நாளில் மகன் பென்னிக்ஸும், தந்தை ஜெயராஜூம் அடுத்தடுத்து மரணமடைய கொந்தளித்த சாத்தான்குளம் நகரம் மற்றும் சுற்று வட்டார நகரங்களின் கடைகள் அடைக்கப்பட்டு சர்வ கட்சியினருடன் பொதுமக்களும் இணைந்து மரணத்திற்கான நீதிகேட்டு திரளாகப் போராட்டத்திலிறங்கிவிட்டனர், கொதிப்பும் கொந்தளிப்புமாயிருந்தது சாத்தான்குளம்.
போராட்டத்திலிருந்தவர்களிடம் விசாரித்ததில், தந்தையை ஸ்டேஷனுக்குக் கொண்டுபோன பயத்தில் அங்கே மகன் பென்னிக்ஸ் போயிருக்கிறார். இரவு 7 மணியளவில் ஜெயராஜை சுற்றி நின்ற போலீசார், போலீசயே நீ எதுத்துப் பேசுவியா அவ்வளவா என்று வார்த்தையைவிட்டவாறு ஜெயராஜை அடித்திருக்கிறார்கள். பயந்துபோன மகன், எங்கப்பா வயசானவர் அடிக்காதீக என்று போலீஸ் அடியைத் தடுத்திருக்கிறார். ஆனா போலீசோ என்னல போலீசயே அசால்ட் பண்ண வர்றியோல, என்ற அதட்டலால் சூடாகியிருக்கிறார்கள். அதன்பிறகுதான் தந்தை மகனுக்கும் சேர்ந்தே டார்ச்சர் லத்தியடி.
இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்களான பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், பால்துரை மற்றும் முத்துராஜ், ஜேசுராஜ், வெயிலுமுத்து உள்ளிட்ட ஐந்து போலீசார், அடுத்து தன்னார்வலர்கள் 5 பேர்கள் இத்தனை பேர்களும் இருவரையும் சுற்றிக் கொண்டார்கள்.
இதில் தன்னார்வலர்கள் மற்றும் போலீசார், இருவரின் கைகால்களை இறுக்கிப் பிடித்துக் கொள்ள போலீசின் குண்டாந்தடி அடி, புட்டத்திலும், முதுகிலும் சரமாரியாக விழுந்ததில், வலி பொறுக்க முடியாமல் துடித்த தந்தையும், மகனும் கதறி ஓலமிட்டிருக்கிறார்கள். அதனையும் பொருட்படுத்தாதவர்கள், தடியை தண்ணீரிலும் நனைத்து அடி கொடுத்ததில் இருவரின் புட்டமும் வீங்கியிருக்கிறதாம். தொடர்ந்து உயிர்த்தலத்திலும், ஆசனவாயிலும் காயமேற்பட்டிருக்கிறது. ஜெயராஜிற்கு அதிலிருந்து ரத்தம் வடிந்திருக்கிறதாம்.
போலீசின் தொடர் அடி தாங்க மாட்டாத முதியவர் ஜெயராஜிற்கு ரத்த அழுத்தமாகி மயங்கியிருக்கிறார், உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றவர்கள், பின்பு ஸ்டேஷனுக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். இரவு 12 மணிக்கு நடந்த இந்த சம்பவத்திற்குப் பின்பு வந்த எஸ்.ஐ. ரகுகனேஷ் தன் பங்கிற்கு அடி பூஜையும் நடத்திவிட்டுப் போயிருக்கிறாராம்.
மறுநாள் 19 அன்று விடிந்த காலையில் இருவரையும் கோர்ட்டில் ரிமாண்ட் செய்த போலீசார் அந்தப் பகுதியிலுள்ள சப்-ஜெயில்களில் அடைக்காமல் 20ம் தேதியன்று தொலை தூரத்திலுள்ள கோவில்பட்டி நகரின் சப்-ஜெயிலில் அடைத்திருக்கிறார்கள். இவர்கள் போலீசையே அசால்ட் பண்ண வந்தவங்க என்று சொல்லிவிட்டுப் போனதாகவும் சொல்கிறார்கள்.
சப்-ஜெயிலில் வலிபொறுக்க மாட்டாமல் தந்தையும், மகனும் துடித்ததில் 22ம் தேதி இரவில் பென்னிக்ஸ் உயிரிழந்திருக்கிறார். தொடர்ந்து 23ம் தேதி காலையில் தந்தை ஜெயராஜூம் மரணமடைந்திருக்கிறார். இருவரின் மரணங்கள் மாவட்டத்தையே உலுக்கிவிட்டது, போராட்டம் ஆர்ப்பாட்டம் என நகரம் சூடாகியிருக்கிறது.
‘கொம்பன் கம்ப எடுத்தாம்னா புட்டம் பழுத்திரும்லேன்னு’ அதட்டலாகச் சொல்லிக்கிட்டுத்தான் ரோட்டுல வருவாரு எஸ்.ஐ. ரகுகணேஷ். அவர் அடியால பல பேருக்குப் புட்டம் பழுத்துப் போயிருக்குங்க என்கிறார்கள் போராட்டத்திலிருந்தவர்கள்.
போராட்டக்களத்திருந்த தொகுதி எம்.எல்.ஏ.வான அனிதாராதா கிருஷ்ணனிடம் பேசினோம். “தந்தை, மகன் மரணங்களுக்குக் காரணமே போலீஸ் டார்ச்சர்தான். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்களான பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், பால்துரை மற்றும் ஐந்து போலீசார் உட்பட அனைவர் மீதும் பிரிவு 302ன் கீழ் வழக்குப்பதிவு செய்து சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். தந்தையையும், மகனையும் இழந்த குடும்பத்திற்கு நிவாரணமாக ஒரு கோடி தரப்பட வேண்டும். அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை, அது நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்கிறார். இதனிடையே தந்தை, மகன் இருவரின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றிருக்கிறார் தி.மு.க.வின் தலைவரான ஸ்டாலின்.
நாம் இது குறித்து நெல்லை ரேன்ஞ் டி.ஐ.ஜி.யான பிரவீன் குமார் அபிநபுவிடம் கேட்டதில், ஜெயிலில் அவர்கள் மரணமடைந்திருப்பதால் நீதிமன்ற விசாரணை நடத்தப்படும். நீதித்துறையின் விசாரணைக்குப் பின்புதான் நடந்தது தெரியவரும். மேலும் போலீசார் மீது குற்றச்சாட்டுக் கிளம்பியதால் அவர்கள் மீது, உரிய துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் டி.ஐ.ஜி.
‘சட்டத்தை மதிப்போம். மக்களைக் காப்பாற்றுவோம்’ என்று மனசாட்சி உறுதி மொழி கொடுத்த பிறகே பணிக்கு வருபவர்கள்தான் காவலர்கள்.