கலைஞரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் செய்த சாதனைகள் குறித்தும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
அவர் பேசும்போது, “தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக நிலைத்திருக்கிறார் கலைஞர். அவருடைய பேச்சாற்றலும் நிர்வாகத்திறனும் சமகாலத்தில் பேசப்படும் அரசியல் நிலைப்பாடு என்றும் மக்களிடையே நீங்கா இடம் பிடித்திருப்பவர் கலைஞர். எந்த ஒரு அதிகார நுகர்வுக்கான அரசியல்வாதியாக இல்லாமல் மக்களின் நலனை பற்றியும் தன்னுடைய கொள்கைகளின் அடிப்படையிலும் மக்கள் மீது அக்கறை காட்டிய செயல்களும் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். தான் ஒரு அரசியல்வாதியாக மட்டுமல்லாமல், அவர் எழுதிய சங்கத்தமிழ், தொல்காப்பியப் பூங்கா, குறளோவியம் போன்ற படைப்புகள் மூலம் தான் ஒரு சிறந்த இலக்கியவாதி என்று மக்களுக்கு நிரூபித்தவர்.
தன்னுடைய சிந்தனையையும் கொள்கைகளையும் பராசக்தி, ஒரே ரத்தம் போன்ற ஏராளமான திரைப்படங்கள் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படச் செய்து நல்வழிப்படுத்தியவர். அவருடைய மேடைப்பேச்சினுடைய திறன் இன்றும் பலருக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. கலைத்துறையில் அவர் ஆற்றிய தொண்டை பாராட்டி எம்.ஆர்.ராதா அவருக்கு கலைஞர் என்று பட்டம் சூட்டினார். ஆனால், கலைஞர் கலைத்துறையில் மட்டுமல்ல முரசொலி போன்ற ஊடகங்களிலும், மேலும் பல துறைகளிலும் ஆளுமை மிக்கவராக இருந்தார். வாலி போன்ற பெரிய கவிஞரும் கலைஞரின் கவித்துவத்தை பாராட்டிப் பேசி இருக்கிறார்.
குடிசை மாற்று வாரியம் அமைத்து தமிழ்நாட்டில் குடிசைகளே இருக்கக் கூடாது என்று சட்டம் போட்டார். அது இந்தியாவிலேயே முதல் முறையாகப் பார்க்கப்பட்டது. மனிதரை மனிதரே இழுக்கும் கை ரிக்ஷா போன்ற முறையை அடியோடு ஒழித்து மற்றவருக்கு வழிகாட்டியாக இருந்தார். பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அமைத்து அவர்களை முறைப்படுத்தியவரும் கலைஞர் ஒருவரே. இப்படி பல திட்டங்களை முன்னெடுத்தாலும் என்னை மிகவும் ஈர்த்து கலைஞரின் மீது நன்மதிப்பை அதிகப்படுத்தியது என்றால் சமத்துவபுரம் திட்டம் தான். இந்தியாவில் ஆங்காங்கே சாதியாலும் மதத்தாலும் பிரிந்து கிடக்கையில் அனைத்து சாதியினரும் ஒற்றுமையாக வாழ பெரியாரின் பெயரில் உருவான சமத்துவபுரம் திட்டத்தை முதல் முதலில் தமிழ்நாட்டில் கொண்டு வந்தது கலைஞர் தான். அந்த திட்டத்தை இன்றும் மற்ற மாநில முதலமைச்சர்கள் எடுக்கத் தயங்கிய போதும் அன்றைய சூழலில் கொண்டு வந்தது கலைஞரின் சமத்துவ சிந்தனையை எடுத்துக் காட்டுகிறது.
பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு 25 சதவீதம் இருந்த இட ஒதுக்கீட்டை 35 சதவீதமாக உயர்த்தியவர். மேலும் கலைஞர் கொடுத்த அழுத்தத்தால் தான் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டைக் கொடுக்க வேண்டும் என்ற முடிவை மாற்றியதோடு மட்டுமல்லாமல் 35 சதவீதமாக இருந்த இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக மாற்றினார் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். இப்படி சாதிவாரியாக இட ஒதுக்கீட்டை அனைத்து சாதியினருக்கும் கொண்டு வர அடித்தளம் இட்டவர் கலைஞர். மேலும், கன்னியாகுமரியில் 133 அடிக்கு பிரம்மாண்டமான சிலையை திறந்தது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளிலும் திருவள்ளுவர் புகைப்படத்தை வைத்து அதற்கு பக்கத்தில் திருக்குறளையும் வைத்தார். அனைத்து மாநில முதலமைச்சர்களும் தயங்கிய போதும் மிசா சட்டத்தை எதிர்த்துப் போராடி தனது ஆட்சியையே பறிகொடுத்தவர் .
ஈழத் தமிழர்களுக்காக முதல் முறையாக குரல் எழுப்பி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நின்றவர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்த போது பல விமர்சனங்களுக்கு ஆளாக்கப்பட்டபோதும் 1991 ஆம் ஆண்டு நடந்த ராஜீவ்காந்தி படுகொலை நடந்த போதும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததால் அன்று பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டு தோல்விகளைச் சந்தித்தார் கலைஞர். அம்பேத்கர் பெயரில் பல்கலைக்கழகம் அமைத்து நாங்கள் நெடுநாட்களாகப் போராடிய பாப்பாப்பட்டி பிரச்சனையை முதல்வராக வந்த சில நாளிலேயே தீர்த்து வைத்தவர் தான் கலைஞர். சனாதன கொள்கையை எதிர்த்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை கொண்டுவந்து பெரியார் மற்றும் அம்பேத்கர் வழியில் கொள்கைக்காக உறுதியோடு நின்று சமூகநீதிக்காகப் போராடியவர்.” என்றார்.