சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பகிர்ந்து கொள்கிறார்.
அரசியலில் கோபம் இருக்கலாம். ஆனால் கண்ணியக் குறைவு எப்போதும் இருக்கக்கூடாது. தலைக்கு விலை வைக்கும் வேலையை இவர்கள் செய்து வருகிறார்கள். இவர்கள் என்ன காட்டுமிராண்டிங்களா? யாராவது விமர்சனம் செய்தால் அவர்களை சிறையில் அடைக்கும் தொடை நடுங்கிகள் தான் இவர்கள். பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பலரை இதுபோன்று சிறையில் அடைத்துள்ளன உத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிர மாநில பாஜக அரசுகள். இவர்கள் கருத்தியல் ரீதியாக உரையாடுவதாக இருந்தால் தமிழ்நாட்டில் இருக்கலாம். தலைக்கு விலை வைப்பதாக இருந்தால் வடமாநிலம் சென்றுவிடலாம்.
தமிழ்நாட்டு மக்கள் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டார்கள். சனாதன எதிர்ப்பு பற்றி உதயநிதி ஸ்டாலின் மட்டும் பேசவில்லை. அவருக்கு முன்பு பலரும் அதைப் பேசியுள்ளனர். சனாதனம் பின்பற்றப்பட்டிருந்தால், இன்று உதயநிதிக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசும் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் மேடையேறி இருக்கவே முடியாது. உத்தரப்பிரதேச சாமியாரின் பேச்சை எதிர்க்கும் அண்ணாமலை, ஜனநாயகவாதி போல் நடிக்கிறார். அவருடைய கட்சியின் நிலைப்பாடு அதுவல்ல.
வட மாநிலத்தில் செய்யும் அரசியலை பாஜக இங்கு செய்தால் அது எடுபடாது. தமிழர்கள் படித்தவர்கள். உமா ஆனந்தனை இன்னும் ஏன் இந்த அரசு கைது செய்யவில்லை? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரானவர் உதயநிதி. அவருடைய தலையை வெட்ட வேண்டும் என்கிற கருத்தை ஆதரித்து பேசுகிறார் உமா ஆனந்தன். இப்படி வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது இவர்கள் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். சனாதனம் என்பது மக்களைக் குறிக்கும் சொல் அல்ல. சனாதனம் என்கிற வார்த்தையை இந்துக்கள் பயன்படுத்துவதில்லை.
இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவது போல, இந்து மதத்தின் பெயரை சனாதனம் என்று இவர்களால் மாற்ற முடியுமா? தலையை வெட்டுவேன், நாக்கைப் பிடுங்குவேன், கண்ணை நோண்டுவேன் என்று பேசி வரும் இவர்கள் காட்டுமிராண்டிகள் தான். உலகின் எந்த நாட்டிலும் இவ்வாறு அரசியல் தலைவர்கள் பேசுவதில்லை. இவை அனைத்தையும் திமுக அனுமதித்துக் கொண்டிருக்கிறது. இப்படி கீழ்த்தரமாக பேசும் நபர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டின் அரசியல் நிலை மோசமாகும்.
முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...