‘தைப்பூச நாயகர் திருமலை நாயக்கருக்கு 436-வது பிறந்தநாள் விழா’ என மதுரையில் எங்கு பார்த்தாலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. சாதி அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு திருமலை நாயக்கர் ஜெயந்தி விழாவுக்கு மக்களை அழைத்தன. 21-ஆம் தேதி தமிழக அரசும் விழா எடுத்தது.
இத்தனை சிறப்புக்குரிய மன்னர் திருமலை நாயக்கர் குறித்த வரலாற்றுத் தகவல்கள் இதோ –
மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களின் வரிசையில், ஐந்தாவது இடத்தில் இருக்கிறார் முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கர். இவருடைய மகன்கள்தான் முதலாம் முத்துவீரப்ப நாயக்கரும் திருமலை நாயக்கரும். ஆறாவது மன்னராகப் பொறுப்பேற்ற முத்து வீரப்ப நாயக்கருக்கு வாரிசு இல்லை. அதனால், அவருடைய தம்பியான திருமலை நாயக்கர் ஏழாவது மன்னர் ஆனார். இவருடைய ஆட்சிக்காலம் 1623 – 1659 ஆகும்.
திருமலை நாயக்கர் காலத்தில்தான், டெல்லி சுல்தான் படைகளாலும், இஸ்லாமிய அரசுகளாலும் அச்சுறுத்தல்கள் இருந்தன. ஆனாலும், தீரத்துடன் ஆட்சி நடத்தி, தனது நாட்டைச் சிதைந்துவிடாமல் காப்பாற்றினார். அன்றைய பாண்டி நாட்டின் பெரும்பகுதி இவருடைய ஆட்சிப் பகுதிக்குள் அடங்கியிருந்தது.
கட்டிடக்கலை மீது பேரார்வம்!
திருச்சிராப்பள்ளியிலிருந்து மீண்டும் மதுரைக்குத் தலைநகரை மாற்றியவர் திருமலை நாயக்கர். ஸ்மார்ட் சிட்டியாக இனி மாறவிருக்கும் மதுரையை அன்றே விழா நகரமாகவும், கலை நகரமாகவும் மாற்றியமைத்தார். கலைகள் மீது ஆர்வமுள்ள இவர், கட்டிடக் கலை மீது பேரார்வம் காட்டினார். பழைய கோவில்களைத் திருத்தி அமைத்ததில் இவருடைய பங்களிப்பு அதிகம். கி.பி. 1636-இல் திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட அரண்மனைதான் திருமலை நாயக்கர் மகால். திராவிட மற்றும் ஐரோப்பிய பாணியில் கட்டப்பட்ட அரண்மனை இது.
தென்னிந்திய அதிசயம்!
அப்போது, இந்திய மற்றும் ஐரோப்பிய வர்த்தகர்களுக்கு ஒரு வர்த்தக நகரமாகத் திகழ்ந்தது மதுரை. அந்தத் தொடர்பில், ஒரு இத்தாலியக் கட்டிடக் கலைஞரைப் பணியில் அமர்த்தி, இந்த அரண்மனையைக் கட்டியதாகவும் பேசப்படுகிறது. பளபளப்பான தோற்றம் பெறுவதற்காக சுண்ணாம்புடன் முட்டையின் வெள்ளைக்கருவும் இதன் கட்டுமானப் பணியில் கலவையாகப் பயன்படுத்தப்பட்டது. தென்னிந்திய அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் திருமலை நாயக்கர் மகாலின் தூண்கள் உலகளவில் பிரசித்தி பெற்றது. தூணின் உயரம் 82 அடியாகவும், அகலம் 19 அடியாகவும் உள்ளது. தற்போது காணப்படும் கட்டிடத்தைக் காட்டிலும் நான்கு மடங்கு பெரியதாக இருந்திருக்கிறது அன்றைய அரண்மனை வளாகம்.
ஆண்டாள் உச்சிகால பூஜைக்குப் பிறகே உணவு!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாளின் தீவிர பக்தராக இருந்திருக்கிறார் திருமலை நாயக்கர். ஆண்டாள் கோவிலில் உச்சிகால பூஜை முடிந்தபிறகே மதிய உணவு உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டவர். அதனால், ஆண்டாள் கோவில் பூஜை மணி ஓசையை அறிந்துகொள்வதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை வரையிலும் வழிநெடுக பல மணி மண்டபங்களைக் கட்டினார். அந்த மண்டபங்களில் சிலவற்றை இப்போதும் காணலாம்.
திருச்செந்தூரில் டச்சுப் படையினரோடு போர்!
முருக பக்தராகவும் இருந்திருக்கிறார் திருமலை நாயக்கர். 1648-இல் கடல் மார்க்கமாக வந்த டச்சுப் படையினர் திருச்செந்தூர் முருகன் கோவிலைக் கைப்பற்றினர். டச்சுப் படையினர் மிகவலிமை பெற்றிருந்தும், திருமலை நாயக்கர் பெரும் படையைத் திரட்டிச் சென்று எதிர்த்துப் போரிட்டார்.
மதுரையின் முத்திரை நாயகன்!
ஆரம்ப காலத்தில் மதுரை அருகிலுள்ள சோழவந்தானில்தான் சித்திரைத் திருவிழா நடந்து வந்தது. அத்திருவிழாவை மதுரை நகருக்கு மாற்றியவர் திருமலை நாயக்கர். விழாக்களுக்குப் பெயர்போன மதுரையின் முத்திரைத் திருவிழா என்றால் அது சித்திரைத் திருவிழாதான். அதுபோலவே, திருமலை நாயக்கரும் நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் முத்திரை பதித்தவராக இருக்கிறார்.