தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்கும் பதிவும் செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். இந்நிலையில் இதுதொடர்பான கேள்விகளுக்கு அருட்தந்தை ஜெகத் கஸ்பர் ராஜ் பதிலளித்துள்ளார். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,
சாத்தான் குளத்தில் காவல்துறையினரால் தந்தை மகன் இருவரும் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நாடு முழுவதும் அந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறார்கள். பிரபலங்கள் முதல் பாமரன் வரை அனைவரும் இந்தக் கொடூரத்துக்கு எதிராகக் குரலெழுப்பி வருகிறார்கள். தற்போது குற்றத்தில் ஈடுபட்டவர்களின் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
நீதி கிடைக்கின்ற மாதிரியான ஒரு சூழ்நிலையைத் தற்போது ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த மாதிரி பல வழக்குகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இரண்டு நபர்களைக் கொலை செய்துவிட்டு, செய்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டனை வாங்கி தராமல் அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவது என்பது இந்த ஜனநாயகத்தில் இருக்கும் மிகப்பெரிய குறையாகும். இந்தப் பிழையைச் செய்த யாரும் தப்பிவிடக் கூடாது என்ற நிலையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். மாறாக அவர்களைத் தப்ப விடுவதற்குறிய சூழ்நிலைகளை அரசாங்கமும், அதகாரிகளும் ஏற்படுத்தி தரக் கூடாது.
அவர்கள் கைது செய்யப்பட்டு இறந்த பிறகு பாதிக்கப்பட்ட அவர்களின் குடும்பத்தினர், இதுதொடர்பாக புகார் கொடுத்தும் ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை உயர்நீதிமன்றம் கேட்ட பிறகுதான் அவர்கள் மீது மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்திற்கு இந்த விஷயம் செல்லாமல் இருந்திருந்தால் இந்த வழக்கு அவர்கள் மீது பதிவு செய்யப்படாமல் கூட இருந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆகவே குற்றம் செய்தவர்களுக்கு இந்த அதிகார வர்க்கம் துணை போவதாகவே சூழ்நிலைகள் உள்ளன.
இன்றைக்கு சாட்சியாக சிலர் வருகிறார்கள். இவர்கள் இன்னும் சிறிது காலம் சென்ற பிறகு பிறழ் சாட்சியாக மாறி இந்த வழக்கைச் சிதைக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது. முதல்முறையாக காவல்நிலையம் வருவாய்த்துறைக் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லப்படுகிறது. அப்படி என்றால் மாவட்ட காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என்ற பொருள் தானே பார்பவர்களுக்குக் கொடுக்கும். இந்த வழக்கில் தொடர்புடையவர்களையும், அதனை உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளாத அதிகாரிகளையும் சில நாட்கள் காத்திருப்புப் பட்டியலில் வைத்துவிட்டு மீண்டும் நீலகிரிக்கு பணி வழங்கினால் என்ன அர்த்தம்.
ஒரு அரசாங்கம் நேர்மையாக நடக்க வேண்டாமா, மக்கள் இதனை எப்படிப் புரிந்து கொள்வார்கள். மக்களைத் தெரிந்தே ஏமாற்றும் முயற்சியாகத்தானே இதனைப் பார்க்க வேண்டும். அதையும் தாண்டி அவர்களுக்கு உடல்நலச் சான்றிதழ் வழங்கி பெண் மருத்துவர் அவருக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டது, ஏதாவது பணி சார்பாக மாறுதல் செய்யப்பட்டாரா என்றால் அப்படி அதுவும் செய்யவில்லை. மேலும், அவர்களைச் சிறையில் அனுமதித்த காவலர் அவர்களை எந்த அடிப்படையில் அனுமதித்தார். உடலில் அரைஞாண் கயிற்றைக் கூட அவிழ்த்துவிட்டு உள்ளே அனுப்பும் அவர்கள் அதை எப்படிக் கோட்டை விட்டார்கள். இது அரசு அதிகாரிகள் நடத்திய கூட்டுக் கொலையாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது" என்றார்.