ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் கடந்த மே மாதம் விடுதலை செய்யப்பட்ட பிறகு அந்த வழக்கில் தொடர்புடைய மற்ற ஆறு பேரும் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இதுதொடர்பாக அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தேவையற்ற காலதாமதம் செய்த ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அரசியல் விமர்சகர் ராம.சுப்பிரமணியம் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவர் அளித்த அதிரடியான பதில் வருமாறு,
ராஜீவ் கொலை வழக்கில் 6 பேரின் விடுதலையில் காலம் தாழ்த்தி முடிவெடுக்காமல் விட்டதால் தமிழக ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதே? அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அவர்கள் மன்னிப்பு எல்லாம் கேட்க மாட்டார்கள், இந்த விஷயத்தில் அவர்கள் இரட்டை நிலையை எடுத்துள்ளார்கள். அவர்களை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட அந்த தினத்தில் மத்திய அரசின் சார்பில் எந்த வழக்கறிஞரும் செல்லவில்லை என்று இலங்கையிலிருந்து வரும் ஒரு பத்திரிகையில் எடிட்டோரியலில் செய்தி வந்துள்ளது. இந்தப் பிரச்சனைகளைப் பற்றி எப்போது அவர்களிடம் பேசினாலும் நாங்கள் அவர்களின் விடுதலையை எதிர்ப்போம், ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று பலமுறை தெரிவித்துள்ளார்கள். ஆனால் சரியான முறையில் இந்த வழக்கில் அவர்களால் ஆஜர் ஆகக்கூட முடியவில்லை. அப்பட்டமாக இந்த விஷயத்தில் இரட்டை வேடம் போடுகிறார்கள் மத்திய பாஜக அரசு.
ஆனால் இந்தத் தீர்ப்பில் ஆளுநர் என்ன செய்யக்கூடாது என்பதை நீதிபதிகள் தங்கள் தீர்ப்பின் வாயிலாகப் புரிய வைத்துள்ளார்கள். மாநில அரசு ஒரு முடிவெடுத்து ஆளுநருக்குக் கோரிக்கைகளை அனுப்பி வைத்தால் தேவையற்ற கால தாமதம் செய்யக்கூடாது என்பதை அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார்கள். குறிப்பாகப் பேரறிவாளன் விவகாரத்தில் மிகத் தெளிவாகக் கூறியிருந்தார்கள். ஆளுநர் எல்லாம் இதைப்பற்றிக் கவலைப்படுவது இல்லை; துடைத்துவிட்டுப் போய்விடுகிறார்கள். ஆளுநர் மாளிகை கமலாலயம் போல் இருப்பதாகத்தான் தெரிகிறது. கேரளாவில் இதுதான் நடந்தது. மேற்கு வங்கத்தில் முயற்சி செய்தார்கள் ஆனால் முடியவில்லை. தற்போது இல.கணேசன் இருக்கிறார், அவர் என்ன செய்கிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நம்முடைய தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை தெலுங்கானாவில் ஆளுநராக இருக்கிறார். அவர் என்ன கூறுகிறார், என்னைக் கண்டால் தெலுங்கானா அரசு நடுநடுங்குகிறது என்கிறார். ஒரு அரசாங்கத்தை நடுங்க வைக்கத்தான் ஆளுநர் செல்வார்களா? அரசுடன் ஒத்துழைப்பு தந்து ஆட்சியைச் சிறப்பாக நடத்த வேண்டும் என்ற நோக்கம் சிறிதும் இல்லாமல் வாக்களித்த மக்களைக் கஷ்டப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவது என்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆளுநர்கள் என்பவர்கள் ஆட்சியாளர்களுக்கு உதவ வேண்டுமே தவிர ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும், உபத்திரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகச் செயல்படக்கூடாது.
இரட்டை வேடத்தை எத்தனை நாளைக்கு அவர்கள் போட முடியும். பாஜகவைத் தவிர எந்த மாநிலத்திலும் யாரும் நிம்மதியாக ஆட்சி நடத்தி விடக்கூடாது என்று நினைக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாகவே இந்த மாதிரியான அரசியல் விளையாட்டுகளை நடத்தி வருகிறார்கள். இதை எந்த சுயச்சார்பு உள்ள மாநிலமும் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களையும் அரசியல் கட்சியினரையும் இவர்கள் எந்த அளவுக்கு முட்டாளாக நினைக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. யாரைப் பற்றியும் கவலை இல்லை, நாங்கள் நன்றாக இருந்தால் சரி என்ற கோணத்தில் இவர்கள் செயல்படுவது நீண்ட நாட்களுக்கு நடக்காது. மக்கள் இவர்களுக்குப் பதில் கூறுவார்கள்.