திருநங்கைகள் என்றாலே ‘ரிஜெக்டட்’தானா?
இந்திய சமூக சூழலில் உணர்வுரீதியாகவும், உடல்ரீதியாகவும் தனிமைப்படுத்தப் பட்டவர்கள் திருநங்கைகள். எண்ணிக்கைக் கணக்கில் அவர்கள் மிகவும் குறைவுதான் என்றாலும், அவர்களுக்கான முறையான உரிமைகள் இன்னமும் வரையறுக்கப்படவில்லை. அதனால்தான் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகியும் இந்தியாவின் முதல் பொறியியல் பட்டதாரி, முதல் காவல்துறை துணை ஆய்வாளர் என திருநங்கைகள் பற்றிய செய்திகள் இப்போதும் வந்துகொண்டிருக்கின்றன. அதேசமயம், அந்த இடத்தை அடைவதற்குள் அவர்கள் சந்திக்கும் நிராகரிப்புகள் கொஞ்சமல்ல. அதேபோல, தமிழகத்தின் திருச்செந்தூரைச் சேர்ந்த சானவி என்ற திருநங்கை, விமானப் பணிப்பெண் ஆவதற்காக எடுக்கும் முயற்சிகளை ஒன்றரை வருடமாக நிராகரித்து வருகின்றனர் சம்மந்தப்பட்டவர்கள். தற்போது அவர் முறையான கல்வித்தகுதி இருக்கும் தனக்கு, விமானப் பணிப்பெண் வேலை தரவேண்டும் என உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக சானவிக்கு உறுதுணையாக இருக்கும், திருநங்கைகளின்
உரிமைகளுக்காக போராடிவரும் கிரேஸ் பானு, “இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேபோல், திருநங்கை தாரிகா பானுவின் சித்த மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது தொடர்பான வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில் தமிழக சுகாதாரத்துறை செயலர் வரும் நவம்பர் 15ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவளிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வழக்குகளும் எங்களைப் பொருத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. திருநங்கைகள் கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கான வழிகளைத் தேடிவந்தாலும், எந்தக் கதவுகளும் எங்களுக்காக திறப்பதில்லை. திருநங்கைகளுக்கென கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தனிப்பட்ட இடஒதுக்கீடுகள் வழங்கப்படவில்லை. எந்தவொரு பிரச்சனையானாலும் ஒவ்வொரு முறையும் நாங்கள் நீதிமன்றத்தை நாடவேண்டிய கட்டாயமே இருக்கிறது. இந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இதற்கு ஒரே நிரந்தரத்தீர்வு திருநங்கைகளுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தனி இடஒதுக்கீடு வழங்குவதே” என்கிறார்.

கல்வி, முறையான பயிற்சிகள் என எல்லாம் இருந்தும் சானவி, தாரிகா பானு போன்ற திருநங்கைகள் புறக்கணிக்கப்படுவதற்கான காரணம் அவர்கள் திருநங்கைகள் என்பதே. இருந்தபோதிலும், திருநங்கைகள் என்ற அடையாளத்தோடு அதை அடைய முயலும் அவர்கள் துணிவை அரசு கண்டுகொள்ளவேண்டும்.
சினிமாக்களில்கூட (ஒருசில படங்கள் தவிர) தவறாக சித்தரிக்கும் இனமாகவே திருநங்கைகளும், திருநம்பிகளும் பயன்படுத்தப்படுகின்றனர். திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழிலாளிகளாகவும், பிச்சை எடுப்பவர்களாகவும்தான் இருப்பார்கள் என்ற நிலையை மாற்ற, அவர்களுக்கான கண்ணிய வாழ்வும், உரிமைகளும் முறையாக வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
திருநங்கைகளைக் கடவுள்களாகப் பார்ப்பதைவிட மனிதர்களாகப் பார்ப்பதே அறம். அதைத்தான் திருநங்கைகளும் விரும்புகின்றனர்.
- ச.ப.மதிவாணன்