அதிமுக, பாஜக கூட்டணி தொடங்கியதிலிருந்தே நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலின்போதே பாஜக தலைவர்கள் தங்கள் தொகுதியை தாண்டி வேறெந்த தொகுதிக்கும் பிரச்சாரம் செய்யவில்லை.
இதனால் அதிமுகவினர் கோபத்தில் இருந்தனர். அதிமுகவினர் மட்டுமே அனைத்து தொகுதிகளிலும் தீவிரமாக பிரச்சாரம் செய்தனர். முக்கியமாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மற்றவர்களை நம்பாமல் அவர்களே அனைத்து இடங்களுக்கும் சென்றனர்.
இந்நிலையில் இந்த 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் பாஜகவினர் பிரச்சாரம் செய்ய வரவில்லை, இதனால் மேலும் கோபமடைந்தனர். பிரச்சாரத்திற்கு நீங்கள் வரவேண்டாம் நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என தமிழிசையிடமும், ஹெச்.ராஜாவிடமும், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. அதை உறுதிபடுத்தும் விதமாக இன்றுவரை பாஜகவினர் யாரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக தெரியவில்லை.
இந்நிலையில் பாஜகவின் தமிழக தலைவர்கள், டெல்லியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய கிளம்பியுள்ளனர். இதுகுறித்து அதிமுக நிர்வாகி ஒருவர் கூறியது, தமிழிசை சவுந்திரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் அங்கு தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தனித்தனியே பிரச்சாரம் செய்துவருகின்றனர்.
ஆனால் இவர்களெல்லாம் தமிழ்நாட்டில் அவரவர் தொகுதியைத்தாண்டி வந்து பிரச்சாரம் செய்யவில்லை. அங்கு இவர்கள் காட்டும் வேகத்தை இங்கு காட்டாமல் விட்டுவிட்டனர். கூட்டணி பேசியபோதிலிருந்து ஒரே பிரச்சனைதான். தேமுதிகவை சேர்க்கவேண்டும் என்று கூறியதிலிருந்து, இன்று இங்கு 4 தொகுதிகளை விட்டுவிட்டு அங்குபோய் பிரச்சாரம் செய்வதுவரை அனைத்தும் பிரச்சனைதான் என புலம்பினார்.