Skip to main content

கடத்தப்பட்ட காதல் மனைவி! கணவருக்கே அனுப்பப்பட்ட வீடியோவால் பரபரப்பு!

Published on 11/02/2023 | Edited on 11/02/2023

 

Thenkasi patel woman took gujarat

 

தென்காசியை அடுத்த இலஞ்சி பகுதியின் கொட்டா குளம் ஏரியாவைச் சேர்ந்த மாரியப்பன் சவுதியில் சாஃப்ட்வேர் பணியிலிருந்தவர். இவரது இளைய மகன் வினித். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு குஜராத்தின் கட்ச் வளைகுடாப் பகுதியிலிருந்து வந்த நவீன் பட்டேல் - தர்மிஸ்தா பட்டேல் தம்பதி இதே பகுதியில் மர அறுவை மில் நடத்திவருகிறார்கள். அவர்களின் மூத்த மகள்தான் கிருத்திகா. பள்ளிப் படிப்பை முடித்த வினித், மேற்படிப்பிற்குப்பின், சென்னையிலுள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் பணியிலிருந்திருக்கிறார். பட்டப்படிப்பு முடித்த கிருத்திகா டிப்ளமோ படிப்பிற்காக சென்னை வந்தபோது வினித்- கிருத்திகாவின் காதல் வளர்ந்திருக்கிறது.

 

இந்தச் சூழலில்தான், தன் மகள் கிருத்திகாவின் காதல் விஷயம் நவீனுக்கு தெரியவர, நேராக வினித்தின் தந்தை மாரியப்பனிடம் சென்று,  “நாங்க குஜராத் பட்டேல் சாதி. ரெண்டு தரப்புக்கும் சரிப்படாது” என்று உறுமிவிட்டு வந்திருக்கிறார்.

 

சம்பவத்திற்குப் பின்பு கடந்த அக்டோபரில் கிருத்திகாவின் வீட்டிற்குச் சென்ற வினித், அவரது பெற்றோரிடம் தங்களின் 6 வருடக் காதலைக் கூறி, பெண் கேட்டிருக்கிறார். வினித்தை ஏளனமாகப் பேசி தாக்கப் பாய்ந்திருக்கிறார் நவீன். வினித் ஒருவழியாகத் தப்பித்து வீடு வந்திருக்கிறார். மறுநாள் வீட்டில் தன் பெற்றோர்கள் இல்லாத நேரம் பார்த்து வெளியேறி அருகிலுள்ள வினித்தின் வீட்டிற்கு வந்திருக்கிறார் கிருத்திகா. இருவரும் நவ-27 அன்று நாகர்கோவிலில் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள். முறைப்படி திருமணத்தை அங்குள்ள நோட்ரிக் பப்ளிக்கிடம் பதிவும் செய்திருக்கிறார்கள்.

 

Thenkasi patel woman took gujarat

 

அதையடுத்து மும்பை சென்ற வினித்தும் கிருத்திகாவும், அங்கிருந்து புனே சென்று ஒரு வாரம் தங்கியிருக்கிறார்கள். இதற்கிடையே நவீனும் அவரது உறவினர்களும் இவர்களைத் தேடி வலைவீசியும் சிக்கவில்லை.

 

ஜன-20 அன்று வினித்தின் பெற்றோர், உறவினர் முன்னிலையில் வினித்திற்கும், கிருத்திகா விற்கும் திருமணம் செய்துவைத்திருக்கிறார்கள். இதற்கிடையே கிருத்திகாவின் உடல்நலம் காரணமாக கிளினிக்கிற்கு தனது காரில் அவளை வினித் கூட்டிப் போயிருக்கிறார். இதனையறிந்த கிருத்திகாவின் தந்தை நவீன் பட்டேலும் அவரது உறவினர்களும் கிளினிக்கிலிருந்து வெளியே வந்த கிருத்திகாவை தூக்கிச்செல்கிற வகையில் காரை மறித்து வாகனங்களை நிறுத்தியிருக்கிறார்கள். இதனால் பதட்டமான காதல் தம்பதியர் வேறுவழியில் தப்பி, ஆட்டோ ஒன்றில் தன் வீட்டிற்குப் போகாமல், குத்துக்கல் வலசையிலிருக்கும் தன் உறவினர் வீட்டிற்குப் போயிருக்கிறார்கள். மனைவி கிருத்திகாவுடன் அங்கேயே தங்கிய வினித், தங்களது உயிருக்குப் பாதுகாப்பு கேட்டு ஆன்லைன் மூலமாக குற்றாலம் காவல் நிலையத்திற்கும், முதல்வரின் தனிப்பிரிவிற்கும் புகார் அனுப்பியிருக்கிறார்.

 

இந்தப் புகாரை விசாரிப்பதற்காக இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கன்னா, வினித், கிருத்திகாவை அழைத்தபோது, உடன் வினித்தின் உறவினரும் போயிருக்கிறார்கள். தன் மனைவி கிருத்திகாவின் கையைப் பிடித்தபடி உள்ளே வந்த வினித்தைப் பார்த்து சூடான இன்ஸ்பெக்டர், “அவ கையை விட்டுட்டு வாய்யா” என்றிருக்கிறார். இன்ஸ்பெக் டர் ராஜேஷ்கன்னாவிடம், வினித்தை விரும்பி திருமணம் செய்துகொண்டதையும் அவருடன் தான் செல்வேன் என்றும் சொல்லியிருக்கிறார் கிருத்திகா. ஆனாலும் கிருத்திகாவை அவளின் பெற்றோருடன் அனுப்பிவைக்கிற முயற்சியிலிருந்திருக்கிறார் இன்ஸ்பெக்டர். அது முடியாமல் போயிருக்கிறது.

 

Thenkasi patel woman took gujarat

 

பின்னர் முதல்வரின் தனிப்பிரிவுக்குப் போன தம்பதியரின் புகார் மனு ஜன-25 அன்று விசாரணைக்கு வரவே, அதுசமயம் பொறுப்பிலிருந்த இன்ஸ்பெக்டர் அலெக்ஸ், வினித் தம்பதியரை வரவழைத்தவர், தனக்கு நெருக்கடி எனக்கூறி புகாரை வாபஸ் வாங்கும்படி வினித்திடம் கெடுபிடி காட்ட, வினித் மறுத்திருக்கிறார். அதேநேரம், விசாரணைக்கு வராத கிருத்திகாவின் பெற்றோர் இரவு 7 மணிக்கு வருவதாகச் சொல்ல, காதல் தம்பதியர் வீடு திரும்பியிருக்கிறார்கள். வாய்ப்பிற்காகக் காத்திருந்த நவீன் பட்டேல், தன் உறவினர்கள் மற்றும் ரவுடிகளுடன், காவல் நிலையத்திலிருந்து வெளியேறிய காதல் தம்பதியரின் காரை நான்கு கார்களில் விரட்டியிருக்கிறார். இதனால் பீதியாகிப்போன வினித் தன் உறவினரின் குத்துக்கல்வலசை வீட்டிற்கு விரைந்திருக்கிறார்.

 

சாதி வெறி, ஆணவத்தின் உச்சியிலிருந்த நவீன் பட்டேலும் அவரது குழுவினரும் வீடுபுகுந்து அடித்து துவம்சம் செய்து, எதிர்த்த வினித்தையும் உறவினர்களையும் தாக்கி, கிருத்திகாவைப் பலவந்தமாகத் தூக்கிச் சென்றிருக்கிறார்கள். தன் மனைவி கடத்தப்பட்டதை தன் பெற்றோர்களுடன் புகார் செய்ய குற்றாலம் காவல் நிலையம் சென்ற வினித், ஒருநாள் முழுக்கப் பழியாய்க் காத்திருந்திருக்கிறார். இருந்தும் காவல் அதிகாரிகள் கண்டு கொள்ளவேயில்லையாம். மறுநாள் இரவு வந்த டி.எஸ்.பி. மணிமாறனும், இந்தப் புகாரின் மீது எப்.ஐ.ஆர். போடமுடியாது என்று சொல்லிவிட்டுப் போயுள்ளார்.

 

இந்நிலையில் பட்டேல் குரூப் கிருத்திகாவைக் கடத்திய வீடியோ வைரலாகவே, டி.ஜி.பி. சைலேந்திரபாபு வரை போய், சம்பவம் சீரியசாகியிருக்கிறது. தென்காசி மாவட்டக் காவல்துறையின் மீதான தனது கடும் அதிருப்தியை டி.ஜி.பி. வெளிப்படுத்திய பிறகே நடவடிக்கைகள் வேகமெடுத்திருக்கின்றன. எல்லாம் நடந்து முடிந்தபிறகே கிருத்திகாவின் தந்தை நவீன், தாய் தர்மிஸ்தா, டிரைவர் ராசு, உறவினர்களான விஷால், கிருத்தி, ராஜேஸ், மைத்ரிக் உள்ளிட்ட 7 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவாகியிருக்கிறது. 

 

Thenkasi patel woman took gujarat

 

வினித் மற்றும் அவரது குடும்பத்தாரை நாம் சந்தித்தபோது, “6 வருடமாக உயிராய்க் காதலித்தோம். திருமணம் செய்து இரண்டு மாதத்திற்கும் மேல் இணைந்து வாழ்ந்தோம். அவர்கள் உயர் சாதியாம். அந்த ஆணவ வெறியில் என் மனைவியை வலுக்கட்டாயமாக கட்ச் பகுதிக்கே கடத்திச்சென்றதாகத் தெரிகிறது. இப்ப வந்த வீடியோவுலகூட, மைத்ரிக் பட்டேலுடன் திருமணமாகி, அவருடன் இருக்கிறேன். எனக்கு யாரும் அழுத்தம் தரலை, டார்ச்சர் செய்யவில்லை என்று பேசும் காட்சியும் படமும் வந்திருக்கு. அது கிருத்திகா இயல்பா பேசுன மாதிரியில்ல. இங்கேயோ, போலீசின் ஆரம்ப விசாரணையிலோ, கிருத்திகாவோ, அவரது பெற்றோரோ ஏற்கனவே இந்த திருமணம் பற்றி எந்த இடத்திலும் சொல்லாமல் இப்போது தெரிவிப்பது ஆச்சர்யமாயிருக்கு. அவ உயிருக்கு ஏதேனும் ஆயிருமோன்னுதான் பயமாயிருக்கு” என்றார்.

 

இதுகுறித்து நாம் தென்காசி மாவட்ட எஸ்.பி.யான சாம்சனிடம் பேசியபோது, “நடவடிக்கை எடுக்காத காரணத்திற்காக ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு எஸ்.ஐ.க்கள் ஒரு ஏட்டு ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். கிருத்திகாவை மீட்பதற்காக தனிப்படைகள் குஜராத் சென்றிருக்கிறது” என்றார்.

 

Thenkasi patel woman took gujarat

 

இதனிடையே பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்ட வினித், தன் மனைவி கிருத்திகாவை மீட்பதற்காக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். நீதிமன்றமும் வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை போலீசார் தரப்பில் தாக்கல்செய்ய உத்தரவிட்டது.

 

நீதிமன்றத்தின் கோபத்துக்கு ஆளாகலாம் என்ற பயத்தில் தங்களது உறவினர் மூலம் கிருத்திகாவை மதுரை உயர்நீதிமன்றத்தில் அவரது பெற்றோர் ஆஜர்படுத்தினர். அதேசமயம் அவர்கள் நீதிமன்றத்துக்கு வரவில்லை. ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. வினீத்துக்கும் -கிருத்திகாவுக்கும் திருமணம் ஆனதற்கான ஆவணங்களை நீதிபதிகள் கோரினர். அதனைச் சரிபார்த்தபின், குஜராத்தில் கிருத்திகாவை திருமணம் செய்த மைத்ரிக் பட்டேல் கைது செய்யப்பட்டாரா என்ற கேள்வியை எழுப்பினர். அவர் தலைமறைவாக உள்ளதாக காவல்துறை தெரிவித்தது. கடந்த அக்டோபர் மாதமே கிருத்திகா - மைத்ரிக் திருமணம் நடந்ததாக பெண்வீட்டார் தரப்பில் கூறப்பட்டதற்கான ஆதாரங்களைக் கோரினர். அப்படி எதனையும் அவர்களால் சமர்ப்பிக்கமுடியவில்லை.

 

Thenkasi patel woman took gujarat

 

குஜராத்துக்கு கடத்தப்பட்ட கிருத்திகாவிடமும் நீதிபதிகள் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தினர். பெற்றோருடன் விரும்பியே சென்றதாக கிருத்திகா தெரிவித்த நிலையில், அக்டோபரில் மைத்ரிக்குடன் திருமணம் செய்த நிலையில், இங்கே ஏன் இன்னொரு திருமணம் செய்துகொள்ள வேண்டும்? என்ற நீதிபதியின் கேள்விகளுக்கு முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்துள்ளார் கிருத்திகா.

 

பின் நீதிபதிகள், “கிருத்திகா வழக்கில் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அவரை இரண்டு நாட்கள் காப்பகத்தில் வைத்து வாக்குமூலம் பெறவேண்டும். கிருத்திகாவின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். இரு தரப்பும் அவரைப் பார்க்க அனுமதிக்கக் கூடாது. பின் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும்” என உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து வழக்கு பிப்ரவரி 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

நீதிமன்றத் தலையீட்டிற்குப் பின் வினித்-கிருத்திகா விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.