Skip to main content

ஆட்சியில் இருந்தால் போர்... எதிர்கட்சியாக இருந்தால் மதக்கலவரம்... தமிமுன் அன்சாரி கடும் தாக்கு

Published on 15/03/2019 | Edited on 15/03/2019

 

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. நக்கீரன் இணையதளத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
 

திமுக - காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பது ஏன்? 
 

நாட்டின் ஜனநாயகம், பன்மை கலாச்சாரம், அரசியல் சட்டம், சமூக நீதி, ஒருமைப்பாடு ஆகியவற்றை பாதுகாக்கும் நோக்கோடு இம்முடிவை எடுத்திருக்கின்றோம். மீண்டும் மோடி பிரதமராக வருவாரேயானால் அதிபர் ஆட்சி முறையை கொண்டு வந்து விடுவார். உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, சிபிஐ உள்ளிட்ட தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளை முற்றிலுமாக சீரழித்து விடுவார். இந்த அபாயங்களிலிருந்து நாட்டை காப்பாற்ற ராகுல் காந்தி தலைமையில் ஒரு கூட்டணி ஆட்சி மத்தியில் அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.


 

narendra-Modi




இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற நீங்கள், இன்று அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்? 
 

இரட்டை இலையில் போட்டியிட்டது ஒரு தேர்தல் வியூகம். அவ்வளவுதான். அதற்காக எமது தனித்தன்மைகளை, கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாதல்லவா? போன நாடாளுமன்ற தேர்தலில் மோடியா? லேடியா? என ஜெயலலிதா கேள்வியெழுப்பினார். அதனால் தமிழக மக்கள் அவருக்கு 37 எம்.பி.க்களை பரிசளித்தனர். 
 

உதய் மின் திட்டம், தேசிய புலனாய்வு முகமை, நீட் தேர்வு, தேசிய கல்வி கொள்கை ஆகியவற்றில் மாநில உரிமைகளுக்காக மோடி அரசோடு மோதினார். தனி ஆளுமையாக இயங்கினார். இன்றைய அதிமுக அரசு ஜெயலலிதாவின் நிலைபாட்டுக்கு எதிரான முடிவை எடுத்து, அதிமுகவை சீரழித்த பாஜகவோடு முரண்பாடான கூட்டணியை வைத்துள்ளார்கள். அதிமுக தொண்டர்களின் மன நிலைக்கு எதிரான கூட்டணி இது. இது வேண்டாம் என நானும், தனியரசும், கருணாசும் எச்சரித்தோம். அவர்களுக்கு ஏதோ நெருக்கடி. நாம் என்ன செய்ய முடியும்?

 

THAMIMUN ANSARI


 

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் தமிழ்நாட்டின் நலன்களை காக்க முடியும் என்று சொல்லுகிறார்களே?
 

இணக்கமாக இருப்பதற்கும், பயந்து நடுங்கி பதுங்குவதற்கும் வித்தியாசம் உண்டு. மத்திய அரசும், மாநில அரசும் இணக்கமாக இருக்க வேண்டும் என்று தான் நாங்களும் சொல்கிறோம். ஆனால் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொல்லவில்லையே? இந்த வேறுபாடுகளை புரிந்துக் கொள்ள வேண்டும்.

 

ஜெயலலிதா இருந்தாலே இந்த மாதிரியான கூட்டணித்தான் உருவாகியிருக்கும் என்று ஓ.பி.எஸ். சொல்லுகிறாரே?

 

அண்ணன் ஓ.பி.எஸ். அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக பாஜகவுடன் அதிக நெருக்கம் பாராட்டுவது தெரிந்ததே. அதனால் தான் அதிமுகவில் பூசல்கள் உருவானது. இப்போது அவர் அப்படியெல்லாம் பேசாமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.

 

எதிரி நாடுகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றால் மோடி தலைமையில்தான் மத்திய அரசு அமைய வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் மும்பை தாக்குதல் நடந்தும் தீவிரவாதத்தை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை வைக்கிறார்களே? 
 

தற்போது மோடி பிரதமராக இருக்கும்போது தானே, அஜாக்ரதை காரணமாக புல்வாமா தாக்குதல் நடைப்பெற்றது? வாஜ்பாய் ஆட்சியில் தானே மசூத் அஸார் போன்ற தீவிரவாதிகளை, அந்நிய சக்திகளிடம் ஒப்படைத்தார்கள்? அவர்கள் ஆட்சியில் தானே பாகிஸ்தான் ஆதரவு படைகள் கார்கிலுக்குள் நுழைந்தன?
 

 சீனாவின் எல்லை  அத்துமீறல்கள் மோடியில் ஆட்சியில் தானே அதிகரித்தது? இதையெல்லாம் மறைத்து விட்டு, காவி நிறத்தில் போலித்தனமான தேசபக்தியை கட்டமைக்க முயல்கிறார்கள். தேர்தல் நேரத்தில் இதை வைத்து போர் வெறியை தூண்டுவது, அவர்களின் மோசமான அரசியலை காட்டுகிறது.
 

 பாஜக எதிர்கட்சியாக இருந்தால் உள்நாட்டில் மதக்கலவரங்களை தூண்டுவார்கள். ஆட்சியில் இருந்தால் தேர்தல் நேரத்தில் போர் வெறியை தூண்டுவார்கள். நல்லவேளை மக்கள் இவர்களின் சித்து விளையாட்டுகளை புரிந்துக் கொண்டார்கள். அந்த கூட்டணி தலைவர்கள்தான் புரியாதது போல நடிக்கிறார்கள்.



சிறுபான்மையினர் நலம்பெற எந்த மாதிரியான திட்டங்களை காங்கிரஸ் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
 

நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரைப்படி முஸ்லிம்களுக்கு மத்திய அரசு பதவிகளில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். நாடு முழுக்க விசாரணைக் கைதிகளாக உள்ளவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். சிறுபான்மையினருக்கு கல்வி வாய்ப்பளிக்கும் வகையில் அலிகர் பல்கலைக்கழகத்தின் கிளைகளை எல்லா மாநிலங்களிலும் அமைக்க முன் வரவேண்டும்.

 

Rahul-Gandhi


 

பாஜக அரசில் கிடைக்காத எதை, நீங்கள் காங்கிரசிடம் எதிர்பார்த்து காத்திருக்கிறீர்கள்?
 

ராகுல் அவர்களின் ஸ்டெல்லா மேரீஸ் மாணவிகளுடனான கலந்துரையாடல் ஒரு சூப்பர் ஹிட் நிகழ்ச்சியாகும். பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை, நீட் தேர்வில் தமிழகத்திற்கு விதி விலக்கு, தமிழ் மொழி பாதுகாப்பு, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுதல், மீனவர்களுக்கு தனி அமைச்சகம், விவசாய கடன்கள் தள்ளுபடி ஆகியவற்றில் ராகுலின் கனிவான அணுகுமுறை நம்பிக்கையூட்டுகிறது.
 

பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவங்களை வெளியில் கொண்டு வந்த நக்கீரன் மீது வழக்கு தொடுப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
 

நக்கீரன் மீது வழக்குகள் பாய்வது புதிதல்ல. புதைக்கப்பட்ட, மறைக்கப்பட்ட செய்திகளை மக்கள் மன்றத்திற்கு கொண்டு வந்து நீதியை நிலைநாட்டுவதில்  நக்கீரனின்  பணிகளை தமிழ் சமூகம் பாராட்டுகிறது.
 

இப்போது பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நக்கீரன் உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளது என்பதற்காக, ஆசிரியர் கோபால் அவர்களுக்கு சம்மன் அனுப்பியது அதிர்ச்சியளிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. இதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.