மார்ச் 22, 2019 இரவு. பவானியைச் சேர்ந்த இளவரசி யும், அவரது உறவினர் மூர்த்தியும் சேலம் கொண்டலாம்பட்டி அருகே கோவை பிரதான சாலையில் ஒரு டூவீலரில் சென்றுகொண்டிருந்தனர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பட்டர்ப்ளை பாலத்தருகே அவர்கள் வந்தபோது இருளிலிருந்து எதிர்ப்பட்டு வழிமறித்த கும்பல், கத்திமுனையில் இளவரசி அணிந்திருந்த நாலரைப் பவுன் தங்கத்தைப் பறித்துக்கொண்டு தலைமறைவானது.
நகையைப் பறிகொடுத்த இளவரசி, கொண்டலாம்பட்டி காவல்துறையில் புகார் கொடுத்தார். அதன்பேரில் புத்தூரைச் சேர்ந்த மணிகண்டன், அவனது கூட்டாளிகள் சுபாஷ், இளங்கோ, தினேஷ் ஆகிய நான்குபேரை கைதுசெய்தது காவல்துறை. கும்பலிடமிருந்து 40 பவுன் தங்கநகைகளும் சிக்கியது. இதைத்தொடர்ந்து, பிடிபட்ட கும்பல் பல பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாகவும், அவர்களை வன்புணர்வு செய்து செல்போனில் படமெடுத்து மிரட்டியதாகவும் பரபரப்பு செய்திகள் வெளியாகின. அதாவது, பொள்ளாச்சி போலவே தமிழ்நாட்டின் பல இடங்களிலும் இத்தகைய கொடூரங்கள் நடக்கின்றன என்பதாகவும், பொள்ளாச்சி விவகாரத்தை வைத்து அ.தி.மு.க. மீது குற்றம்சாட்டுவது கூடாது என்பது போலவும் சித்தரிக்கப்பட்டது.
"இவர்கள் கடந்த மூன்றாண்டுகளாக செயின்பறிப்பு குற்றத்தில்தான் ஈடுபட்டு வந்துள்ளனர்''’என்கிறார் கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளர் புஷ்பராணி. பிடிபட்டவர்களில் மணிகண்ட னும் சுபாஷுமே முக்கிய குற்றவாளிகள். மல்லூர் காவல்துறையினர் மணிகண்டன் மீது பலமுறை செயின்பறிப்பு வழக்கு பதிவுசெய் திருக்கின்றனர். குண்டாஸ் வழக்கிலும் கைதாகியிருக்கிறார். மல்லூர் சரகத்தில் சாலையோரத் தில் ஒதுங்கிய ஒரு ஜோடியில், ஆணை விரட்டிவிட்டு பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர் மணிகண்டன். கொண்டலாம்பட்டி காவல்துறையில் தற்போதைய வழக்கில் அந்த பழைய குற்றப் பின்னணிகளை பதிவுசெய்யவில்லை.
தற்போது நகையைப் பறிகொடுத்த இளவரசியும் மூர்த்தியும் தனிமையில் ஒதுங்க நினைத்தபோதுதான், இந்தக் கும்பலிடம் சிக்கியதாக காவல் துறை சோர்ஸ்கள் தெரிவிக்கின் றன. நகைகளைப் பறித்துக் கொண்டதோடு, பலவந்தப்படுத்தி இருவரையும் நெருக்கமான நிலையில் முத்தமிட வைத்து படம்பிடித்துக்கொண்டு, காவல்நிலையம் சென்றால் இந்தப் புகைப்படங்களை வெளியிட்டுவிடுவதாக மிரட்டியிருக்கிறான்.
எனினும் இளவரசி தனது வாக்குமூலத்தில் மணிகண்டனோ அவனது கூட்டாளிகளோ பாலியல்ரீதியாகத் துன்புறுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய மணிகண்டனின் நண்பரான வெங்கடேசன் தலைமறைவாகிவிட்டார். தேர்தல் நேரமென்பதால் ஆளுந்தரப்புக்கு கெட்டபெயர் வந்துவிடக்கூடாது என காப்பாற்றும் வகையிலேயே காவல்துறையினர் பல உண்மைகளை மூடி மறைப்பதாகக் கூறப்படுகிறது.