ஆர்.கே.நகரில் விஷாலை சாய்த்த விதிமுறைகள்
தேர்தலில் போட்டியிட என்னவெல்லாம் தேவை?

சமீப கால விஷாலின் படங்களை விட விறுவிறுப்பாகவும் திருப்பங்கள் நிறைந்ததாகவும் சென்றது ஆர் கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் அவரது நிலவரம். 5ஆம் தேதி நடந்த வேட்பு மனு பரிசீலனைக்கு பின் 50 பேர்களுக்கு மேல் நிராகரிக்கப்பட்டனர். இதில் நடிகர் விஷாலின் வேட்பு மனுவும் முதலில் நிராகரிக்கப்பட்டு, பிறகு ஏற்கப்படுவதாகக் கூறப்பட்டு, பின் மீண்டும் அதிகாரப்பூர்வ நிராகரிப்பு என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேட்பு மனு நிராகரிக்கப்படுவதற்கு காரணம் அவர்களின் விதிமுறைகள் பின்பற்றாமல் இருப்பதே, வேட்பு மனுவில் போட்டியிடுபவருக்காக தேர்தல் நடக்கும் தொகுதியில் இருந்து 10 பேர் முன்மொழிய வேண்டும், ஆனால் விஷாலின் வேட்புமனுவில் முன்மொழிந்தவர்களில் இரண்டு பேர் அது நாங்கள் இல்லை என்று கூறியிருக்கின்றனர். இதனால் 10 பேர் முன்மொழிய வேண்டிய இடத்தில் 8 பேர்தான் இருக்கின்றனர் என்று நிராகரித்துள்ளனர். விஷால் தரப்பில், "அவருக்காக முன்மொழிந்தவர்களை மிரட்டியுள்ளனர் எங்களிடம் ஆதாரம் உள்ளது" என்றனர்.விஷால் அவரின் ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார், இதனால் தேர்தல் அதிகாரிகள் இரண்டாவது முறையாக பரிசீலனை செய்யப்பட்டது . இதனால் விஷால் ஆதாரத்தை காட்டினார் அதை ஏற்று பின்னர் இரவு 11:15 மணிக்கு தேர்தல் அதிகாரி வேலுச்சாமி விஷாலின் மனு அதிகாரப்பூர்வமாக நிராகரிக்கப்பட்டுள்ளது என்றார். நேற்று (6 டிசம்பர் 2017) தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியை சந்தித்து முறையிட்டார் விஷால். இன்று அவரை முன்மொழிந்தவர்களை நேரில் அழைத்து வந்து நிரூபிக்க அவகாசம் அளித்தது தேர்தல் ஆணையம். ஆனால், விஷாலை முன்மொழிந்தவர்கள் காணாமல் போய் திரும்ப வந்தும், விஷாலுக்கு பயனில்லாமல் போனது.
ஜனநாயக நாட்டில், ஒரு பிரபலமானவர், பொருளாதார வசதியுள்ள நடிகர், தேர்தலில் போட்டியிடவே இத்தனை களேபரங்கள் நடக்கிறது. புதிய இளைஞர்கள் எல்லாம் எப்படி போட்டியிடுவது? சரி, தேர்தலில் போட்டியிடுவதற்கு, தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய என்ன வழிமுறைகள் என்று பார்ப்போம்.

அடிப்படை தகுதிகள்
இந்திய குடிமகனொருவர் தேர்தலில் போட்டியிட அடிப்படை தகுதியாக இருப்பது வயதுதான். மக்களவை (லோக்சபா) தேர்தலில் போட்டியிட 25 வயதிற்கு மேல் இருக்கவேண்டும். அதேபோன்று மாநிலங்கள் அவை தேர்தலுக்கு (ராஜ்ய சபா) 30 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். சட்டமன்ற தேர்தலுக்கு 25 வயதிற்கு மேல் இருத்தல் வேண்டும். தேர்தலில் போட்டியிடுபவர்கள் அனுமதிக்கப்படுவதும், நிராகரிக்கப்படுவதும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் சட்டம் 84, 102, 173 & 193 .பிரிவு 3- 10A ஆர் பி ஆக்ட் 1951ன் கீழ் நிகழ்கிறது.
வேட்பாளர் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள்
வேட்புமனு
மக்களவை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய படிவம் 2A பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும். அதேபோன்று சட்டமன்றத்திற்கு படிவம் 2B யை பூர்த்தி செய்து தேர்தல் அலுவலரிடத்தில் சமர்ப்பிக்க வேண்டும். (பாகம் 2A , 2B என்பது ஒவ்வொரு தேர்தலுக்கும் உள்ள வேட்புமனு விண்ணப்ப தாளாகும். இதில் வேட்பாளரின் புகைப்படம், கையொப்பம், பெயர் (வாக்காளர் பட்டியலில் உள்ளது) போன்றவையை பூர்த்தி செய்து அதனுடன், போட்டியிடும் தொகுதியைச் சேர்ந்த 10 வாக்காளர்கள் முன்மொழியும் ஆவணத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். இந்த இடத்தில் தான், விஷால் கோட்டை விட்டார். அவரை முன்மொழிந்தவர்களில் இருவர் கம்பி நீட்டியதால் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது.
படிவம் 26
வேட்பாளர் இதற்கு முன்பு ஏதேனும் குற்றத்தில் ஈடுபடாமல் இருந்தும், ஏதேனும் வழக்கு நிலுவையில் இல்லாமல் இருக்கிறது என்று பிரமாண பத்திரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
பான் கார்டு விவரங்கள், வருமானவரி விவரங்கள் - வேட்பாளருடையது மற்றும் அவருடைய மனைவி, அவரை சார்ந்திருப்போர்களின் விவரங்களும் சமர்ப்பிக்க வேண்டும்.
வேட்பாளர், அவரது மனைவி மற்றும் அவரை சார்ந்தோர்க்கு அரசாங்கத்திடம் நிலுவையில் இருக்கும் கட்டணங்கள் மற்றும் பொது நிதி நிறுவனங்களிடம் வாங்கப்பட்ட கடன்களை பற்றி ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
வேட்பாளர் மற்றும் அவரது மனைவியின் தொழில் பற்றிய விவரங்கள், வேட்பாளரின் கல்வி சான்றிதழ்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த பக்கங்களை பூர்த்தி செய்யும் போது வேட்பாளர் எந்த பத்தியையும் விட்டுவிடக் கூடாது. தேர்தல் அலுவலகத்தில் உள்ள நீதிபதி, ஆணையரின் முன்பு பூர்த்தி செய்ய வேண்டும். இதில் சொல்லப்பட்டிருக்கும் எதையேனும் பின்பற்றவில்லை என்றால் அவர்களின் மனு நிராகரிக்கப்படும்.

கூடுதல் வாக்குமூலம்
இதில் கடந்த 10 வருடங்களாக அரசாங்கத்திற்கு செலுத்தும் கட்டணங்களான மின் கட்டணம், குடிநீர் வரி போன்றவை நிலுவையில் இல்லை என்று சான்றிதழ் வாங்கி இதனுடன் சேர்த்தல் வேண்டும்.
போட்டியிடும் தொகுதியை சேராத வேட்பாளர் என்றால்...
தன் தொகுதியில் நிற்காமல் வேறொரு தொகுதியில் வேட்பாளர் நின்றால், அவர் சார்ந்த தொகுதியின் வாக்காளர் பட்டியலை ஒரு நகல் எடுத்து இந்த பாகம் 26 உடன் சேர்த்துத்தர வேண்டும்.
கட்சிகளின் கீழ் நிற்பவர்கள் அல்லது அவர்களின் ஆதரவோடு வேட்பாளர் நின்றால் பாகம் A, B என்ற இரு படிவத்தை வேட்புமனுவுடன் ஒப்படைக்க வேண்டும்.
சாதி சான்றிதழ்
வேட்பாளர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்றால் சாதி சான்றிதழை இதனுடன் ஒப்படைக்க வேண்டும்.
பாதுகாப்பு வைப்பு நிதி
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், பாதுகாப்பு வைப்பு தொகையை பணமாக தேர்தல் அலுவலரிடம் செலுத்தலாம் அல்லது ரிசர்வ் வங்கியிலோ அரசு கருவூலத்திலோ சல்லான் முறையில் செலுத்தலாம். மக்களவை தேர்தலாக இருந்தால் வைப்பு நிதி 25,000 ரூபாய். வேட்பாளர் ஆதி திராவிட அல்லது பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தால் 12,500. மாநிலங்களவை தேர்தலில் 10,000 ரூபாய் செலுத்த வேண்டும், ஆதி திராவிட அல்லது பழங்குடி வகுப்பு வேட்பாளராக இருந்தால் 5000 ரூபாய் செலுத்த வேண்டும். சட்டமன்ற தேர்தலிலும் இதே 10,000 ரூபாய். ஆதி திராவிட அல்லது பழங்குடி வகுப்பு வேட்பாளருக்கு 5000 ரூபாய்.
உறுதிமொழி
வேட்பாளர், தேர்தல் அலுவலர் முன்பு, இந்திய அரசியல் சட்டத்தின் 3ஆம் அட்டவனையில் இருக்கும் உறுதிமொழியில் கையெழுத்திட வேண்டும்.
இதில் எதுவும் தெரியாமலெல்லாம் விஷால் சென்றிருக்கமாட்டார். ஆனாலும் ஏதோ தவறுகளால் போட்டியிடமுடியவில்லை. 'இது தான் அரசியல்' என்று அரசியல்வாதிகள் ஏளனமாகப் பேசுகின்றனர். நாமும் தெரிந்துவைத்துக் கொள்வோம். நாளை ஒரு தேவை வரலாம்...
சந்தோஷ் குமார்