Skip to main content

ஆர்.கே.நகரில் தமிழிசை போட்டியிட கட்சியினர்

Published on 02/12/2017 | Edited on 02/12/2017
ஆர்.கே.நகரில் தமிழிசை போட்டியிட 
கட்சியினர் வலியுறுத்துவது ஏன்? 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் திங்கள்கிழமையோடு முடிய உள்ள நிலையில், தமிழிசை சவுந்தரராஜனை பாஜக வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று அக்கட்சியின் ஒரு பிரிவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் மருது கணேஷ் தனக்கு எந்த செலவும் செய்ய வேண்டாம் சொந்த தொகுதி என்பதாலும், ஆளும் கட்சியின் மக்கள் விரோத போக்கும் தனக்கு வெற்றி வாய்ப்பை தரும் என்று கூறுகிறார்.

இரட்டை இலை கிடைத்த சந்தோஷத்தில் கட்சித் தொண்டர்கள் எனது வேண்டுகோள் இல்லாமலேயே சின்னத்தை கவுரவிக்க வெற்றிக்காக பாடுபடுவார்கள், தோற்றால் ஆட்சிக்கு அவமானம் என்பதால் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். இருவரும் தான் வெற்றிபெறும் வரை தூங்க மாட்டார்கள் என்கிறார் அதிமுக சார்பில் போட்டியிடும் மதுசூதனன்.



தமிழகம் முழுவதும் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா தொண்டர்களை நம் பக்கம் இழுக்க ஒரே வாய்ப்பு, கடைசி வாய்ப்பு இந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்தான், ஆகையால் தொப்பி கிடைத்தாலும் சரி, கிரிக்கெட் மட்டை கிடைத்தாலும் சரி எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும். ஒரு வேளை திமுக வெற்றி பெற்றால் இரண்டாம் இடத்திலாவது நாம் வர வேண்டும் என தேர்தல் பொறுப்பாளர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார் சுயேட்சையாக போட்டியிடும் டி.டி.வி. தினகரன்.

இதனிடையே நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் இந்த தேர்தலில் களம் காண நண்பர்களுடனும், ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனும் ஆலோசித்து வருகிறார் என்றும், திங்கள்கிழமை அதற்கான முடிவை அறிவிப்பார் என்றும் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது.

ஆனால் கடந்த தேர்தலில் போட்டியிட்ட பாஜக இந்த தேர்தலில் இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை. கடந்த தேர்தலின்போது பா.ஜ.க. சார்பில் கங்கை அமரன் போட்டியிட்டார். தற்போது அவருக்கு உடல்நிலை சரியில்லை.



எனவே, இன்னொரு பிரபலமான வேட்பாளரை தேடிக்கொண்டிருக்கிறோம் என்று பா.ஜ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வேட்புமனுவை தாக்கல் செய்ய இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை பாஜக.

கழகங்கள் இல்லாத தமிழகம், ஆளப்போகிறது பாஜக. திராவிடக் கட்சிகளுக்கு தமிழகத்தில் இனி இடமில்லை என்று தொலைக்காட்சி விவாதங்களில் குரல் எழுப்பி வரும் மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.க., வேட்பாளர் கிடைக்காமல் திணறி வருகிறது என்றும், அதனால்தான் வேட்பளாரை அறிவிக்க தாமதம் ஆகிறது என்றும் கூறப்பட்டது.

பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், எச்.ராஜா, எம்.என்.ராஜா, கரு.நாகராஜன் உள்ளிட்ட பலர் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று பிரபலமாக இருக்கிறார்கள். அவர்களில் யாரையேனும் நிறுத்தினால் என்ன என்றும் பாஜகவில் ஒரு பிரிவினர் யோசனை தெரிவித்தனர்.



அவர்களுடைய கருத்து வேகமாக பரவியதால், பாஜக மேலிடம் சங்கடத்திற்கு ஆளானது. தமிழகத்தில் ஒரு தொகுதியில் வேட்பாளரை உடனடியாக அறிவிக்க முடியாத நிலை பொதுமக்கள் மத்தியில் அவமானமாக உணர்ந்தது.

இதையடுத்தே, தமிழிசை சவுந்தராஜனை வேட்பாளராக நிறுத்தலாம் என்று பாஜகவில் ஒரு பிரிவினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆர்.கே.நகரில் தமிழிசை சார்ந்த சமூகத்தினர் அதிகம் வசிப்பதால், அந்த சமூகத்தைச் சேர்ந்த தமிழிசையை நிறுத்தினால்தான் கனிசாமான வாக்குகளை பெற முடியும். தமிழிசையை நிறுத்தினால் மாநிலத் தலைவருக்கு கட்டுப்பட்டு கட்சியினர் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுபடுவார்கள். அதோடு மத்தியில் ஆளும் பாஜக, தமிழகத்தில் மாநிலத் தலைவரே நேரடியாக தேர்தலில் களம் காணுகிறபோது தேர்தல் செலவுக்காக தாராளமாக நிதி ஒதுக்கவும் தயங்காது என்றும் கூறுகின்றனர்.

இதையடுத்து வேறுவழியின்றி தமிழிசை சவுந்தரராஜனை வேட்பாளராக அறிவிக்க பாஜக மேலிடம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

சார்ந்த செய்திகள்