தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பக்கமாக இருக்கும் பன்னம் பாறை கிராமத்தை சேர்ந்தவர் துரை. பால் வியாபாரம் செய்து வரும் துரை சாத்தான்குளம் ஒன்றிய இந்து முன்னணியின் செயற்குழு உறுப்பினரும் கூட. தினந்தோறும் அதிகாலை பால் வியாபாரத்திற்கு செல்வது துரையின் வழக்கம்.
அக்கம் பக்க கிராமங்கள் இவருக்கான வியாபார ஸ்பாட். வழக்கம் போல் நேற்று முன்தினம் (02/09/2020) அதிகாலை 05.00 மணியளவில் துரை பால் வியாபாரத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தார். வெளியே செல்ல வந்தவர் தன் வீட்டின் முன்னே ஒரு மர்மப் பொருள் வீசப்பட்டுக் கிடந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியானவர், அதை பார்த்த போது உருண்டையான அதில் நூல் சுற்றப்பட்டு மேல் புறம் திரி நீண்டு கொண்டிருப்பதைப் பார்த்தவருக்கு கூடுதல் பீதி. வெடி குண்டாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் உடனடியாக சாத்தான்குளம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்திருக்கிறார். அதே சமயம் தகவலறிந்து இந்து முன்னணிப் பிரமுகர்கள் சிலரும் ஸ்பாட்டில் கூடி விட்டனர்.
சாத்தான்குளம் டி.எஸ்.பி. கிளாட்வின் ஜெகதீஸ்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் பெர்னார்ட் சேவியர் தலைமையிலான போலீசார் ஸ்பாட்டுக்கு வர, தகவல் தெரிவிக்கப்பட்ட நொடியில் மாவட்ட எஸ்.பி.யான ஜெயகுமாரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டிருக்கிறார். வெடிகுண்டு தடுப்பு ஸ்குவாட் வரவழைக்கப்பட்டு அந்த மர்மப் பொருளை காவல் நிலையம் குடியிருப்பின் பின் பகுதிக்குப் பாதுகாப்பாகக் கொண்டு சென்ற வெடிகுண்டு சோதனை தடுப்பு குழு சோதனை நடத்தினர். சோதனையின் போது அது வெடிகுண்டு இல்லை காய்ந்து போன தேங்காயைக் கொண்டு நூல் சுற்றி குண்டு போன்று செட்டப் செய்தது தெரிய வந்திருக்கிறது.
அது வெடிகுண்டல்ல. சாதாரண தேங்காய்.குண்டு போல் செட்டப் செய்து துரையை அச்சுறுத்தும் வகையில் போட்டிருக்கலாம். விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார் எஸ்.பி. ஜெயக்குமார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் ஒரு வழிபாட்டுத் தலம் அமைக்கும் விவகாரத்தில் அதனைக் கிராமமே எதிர்த்தது. அது சமயம் முன்னின்றவர் இந்து முன்னணிப் பிரமுகரான துரை. இதன் காரணமாக அச்சுறுத்தல் பொருட்டு துரை வீட்டு முன்பு வீசப்பட்டதா என்றும் விசாரணை போவதாகவும் தெரிகிறது.