இன்று கூடிய நாடாளுமன்ற மக்களவை பேரவையில் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி முதல் முறையாக உரையாற்றினார். 'ஜெய் சம்விதான்' என அரசமைப்பை குறிப்பிட்டு மக்களவையில் தனது உரையை ராகுல் காந்தி தொடங்கிய பொழுது பாஜக உறுப்பினர்கள் 'பாரத் மாதா கி ஜெய்' என முழக்கம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து உரையாற்றிய ராகுல் காந்தி, “மக்களவையில் சிவன் படத்தை காட்ட அனுமதி இல்லையா? சிவனின் திரிசூலம் என்பது வன்முறைக்கானது அல்ல அகிம்சைக்கானது. கடவுள் சிவபெருமானின் படத்தை காங்கிரஸ் கட்சி காட்டியதால் சிலருக்கு கோபம் வந்திருக்கும். ஊடகங்கள் வாயிலாக என் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது. பாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றனர். அதிகாரம் கிடைக்கவில்லை என்றாலும் எதிர்க்கட்சியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமரின் உத்தரவால் நான் தாக்கப்பட்டேன். அதில் மிகவும் மகிழ்ச்சியான பகுதி அமலாக்கத்துறையின் 55 மணிநேர விசாரணை. அதிகாரத்தை விட மேலானது ஒன்று இருக்கிறது. அதிகாரத்தை விட உண்மையை நம்புபவன் நான். பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல.
மகாத்மா காந்தி காந்தி ஒரு திரைப்படத்தின் மூலம் உயிர்த்தெழுந்தார் என்றும் பிரதமர் கூறுகிறார். பிரதமரின் அறியாமையை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?” என்று கூறினார். பா.ஜ.கவினர் உண்மையான இந்துக்கள் இல்லை என்று ராகுல்காந்தி பேசியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து எழுந்து நின்று பேசிய பிரதமர் மோடி, “ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் வன்முறையாளர்கள் என்று பேசி இந்து மக்கள் மீது ராகுல்காந்தி தாக்குதல் நடத்தியுள்ளார்” என்று பேசி அமர்ந்தார். அதனைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “பிரதமர் மோடியோ, பாஜகவோ அல்லது ஆர்எஸ்எஸ்ஸோ ஒட்டுமொத்த இந்து மக்களின் பிரதிநிதிகள் அல்ல” என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இந்து என்று சொல்லிக்கொள்பவர்கள் வன்முறையைப் பேசுகிறார்கள், வன்முறை செய்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கோடிக்கணக்கான மக்கள் தங்களை இந்து என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வது அவருக்குத் தெரியாது. வன்முறையை எந்த மதத்துடனும் இணைப்பது தவறு. இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறினார்.
ஆனாலும், சற்றும் பணியாத ராகுல்காந்தி தொடர்ந்து பேசியதாவது, “மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தின் மூலம் ராணுவ வீரர்களை யூஸ் அண்ட் த்ரோ தொழிலாளர்களாக பயன்படுத்துகிறது. எங்கள் அரசாங்கம் வந்ததும், நாங்கள் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்வோம். ஏனென்றால் இது தேசபக்தர்களுக்கு எதிரானது என்று நாங்கள் நினைக்கிறோம். பாஜக அரசின் அரசியலால் மணிப்பூரை உள்நாட்டுப் போருக்குள் தள்ளிவிட்டது” என்று பேசினார். தொடர்ந்து மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்றது. கடந்த 10 ஆண்டுகளில் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே இப்படியான விவாதம் நடைபெறுவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.