உலக நாடுகளை அச்சுறுத்தும் கரோனா வைரஸ், இந்தியாவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமலில் இருந்த ஊரடங்கு, தற்போது மே 17- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் சில தளர்வுகள் மே 4- ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இதையடுத்து தமிழகத்திலும் ஊரடங்கில் சில தளர்வுகள் படிப்படியாக கொண்டுவரப்பட்டன. ஆனால் தமிழகத்தில் கரோனா வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் 508 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,058 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளநிலையில் தமிழகத்தில் மே 7 ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பையும் நேற்று முன்தினம் தமிழக அரசு வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், தமிழக அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி இன்று மே 6-ம் தேதி காலை 11மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விசிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரவர் வீடுகளுக்கு முன்பு நின்று ''டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம்'' என முழக்கம் எழுப்ப வேண்டும் என திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.