தமிழகத்தில் அரசியல் சூழ்நிலைகள் தினமும் ஏதாவது பரபரப்பான செய்திகளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில் நடப்பு அரசியல் சூழ்நிலைகள் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். செய்தியாளர்களின் கேள்விக்கு டிடிவி தினகரனின் பதில் வருமாறு, "தமிழகத்தில் சிலர் சட்டம் ஒழுங்கை கெடுப்பதாக முதல்வர் கூறியிருக்கிறார். அவர் எதற்காக இந்த மாதிரியெல்லாம் பேசுகிறார் என்று தெரியவில்லை. தமிழகத்தில் யார் சட்டம் ஒழுங்கை கெடுக்கிறார்கள் என்பதை இவர் முதலில் சொல்ல வேண்டும்.
இவர்தான் காலையில் எழுந்தால் தமிழகத்தில் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்ன பிரச்சனை செய்வார்கள் என்று தெரியவில்லை என்று கூட்டத்தில் பேசியிருக்கிறார். ஆகவே இவர்கள் கட்சியைச் சேர்ந்தவர்களை முதலில் பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவர்கள் அமைதியாக இருந்தாலே தமிழகத்தில் எவ்வித சேதமும் குற்றமும் நடக்காது. இதனால் திமுக மாறினாலே தமிழகத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. அதையும் தாண்டி பல பொய்யான வாக்குறுதிகளைத் தமிழக மக்களுக்கு திமுக அரசு தொடர்ந்து வழங்கியது. இதன் காரணமாகத் தமிழகத்தில் திமுக ஆட்சியைப் பிடித்தது. எடப்பாடி ஆட்சியின்போது நிதிநிலை என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்தும் திமுக தேவையில்லாத பல பொய்யான வாக்குறுதிகளை வழங்கியது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என்றும் கூறி இன்றைக்கு ஆட்சியைப் பிடித்துள்ளார்கள். இதுவரை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை எல்லாம் எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்று புரியாமல் தற்போது முழித்துக்கொண்டு உள்ளார்கள். எனவே செய்த தவறுக்கு தற்போது அனுபவித்து வருகிறார்கள். முதல்வர் எதை சதி என்று சொல்கிறார் என்று தெரிவிக்க வேண்டும். திராவிட மாடல் ஆட்சி என்று கூறும் அவர் எல்லா சதிகளையும் முறியடிக்க வேண்டியதுதானே, ஏன் இவ்வளவு தயங்கித் தயங்கிப் பேச வேண்டும். திருவிழாவில் தொலைந்த நபர்களைப் போல் என்ன செய்வது என்று புரியாமல் தவித்துக்கொண்டு இருப்பதைத் தமிழக மக்கள் அனைவரும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அதையும் தாண்டி தமிழகத்தில் போதைப்பொருட்கள் கலாச்சாரம் அதிகரித்துள்ளதால் மாணவர்கள்,இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள். இதை முளையிலேயே தடுக்க வேண்டும்.
போதைப்பொருட்கள் யார் எங்கு வேண்டுமானாலும் எளிதில் பெறலாம் என்ற நிலை தமிழகத்தில் முன் எப்போதும் இருந்ததில்லை. ஆனால் தற்போது போதைப்பொருட்களை யார் வேண்டுமானாலும் எளிதில் பெறலாம் என்ற நிலை நிலவி வருகிறது. இது யாருக்கும் நல்லது கிடையாது. தவிர்க்கப்பட வேண்டிய ஒரு விஷயமாக இது இருக்கிறது. இதை எப்படித் தவிர்க்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தாமல் தேவையில்லாத குற்றச்சாட்டுக்களைத் தமிழக அரசு முன்வைத்து வருகிறது. இது தவிர்க்க வேண்டிய ஒரு விஷயமாக உள்ளது. எனவே சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் கவனம் செலுத்துவதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்றார்.